1.
படிமம் படிமமாய்
அடுக்கப்பட்ட தார்சாலையின்
கானல் நீரைப் பார்க்கும் போதெல்லாம் தாகமெடுக்கிறது
துளியை இலையில் தாங்கியப்படி
தூக்கிக் கொண்டு திரிகிறது
சிறு பறவை
அத்துளியே போதுமானது
தாகம் தீர்க்க
ஆனால்
எங்கிருந்தோ வந்த பட்டாம்பூச்சி
துளியைத் தட்டிவிட்டு
தூரப் பறந்தது
அண்டத்தைச் சுற்றி எங்கும்
அமைதி
சுவாசிக்கக் கூட காற்றில்லை
ஆக்ஸிஜன் தேடி அலையும் கூட்டம்
ஆர்ப்பரித்து வாங்க முடியாமல்
அடங்கியபடி கால் மட்டும் அசைகிறது.
தோளில் ஒரு கணம்
இறக்கிவிட மனமில்லை
விரும்பி மாட்டிக் கொண்டது
செருப்பில்லாமல் நடப்பது
கொப்பளங்களுக்கு மட்டுமே தெரியும்
பட்டாம்பூச்சி எனக்கு முன்னால் செல்கிறது
கூடு அடையும் வரை கூட வரும்
அப்புறம் பனி ஆந்தை வரும்
நிச்சயமாக அதனிடமும்
நீர் இருக்கப்போவதில்லை
தாகத்துடனே விடிந்துவிட்டது இரவு
மீண்டும்
படிமம் படிமமாய்
அடுக்கப்பட்ட தார்சாலையின்
கானல் நீரைப் பார்க்கும் போதெல்லாம் தாகமெடுக்கிறது
கானலைக் கண்ணால்
பருகிப் பருகியே சுமையின்
எடை ஏங்குகிறது
விரும்பி மாட்டிக் கொண்ட
சுமைக்கு உயிருண்டு என்பது
எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்
தார்நீரால் தன் வயிற்றை
நிறைக்கும் சுமைக்குக் கூட
யாத்திரைப் பாதை புதிர்தான்
துளி இலை கருகுவதற்குள்
கூடு அடைய வேண்டும்.
***
2.
மௌனத்தின் வாக்கியத்தை
வட்டிக்குக் கொடு
அனுதினமும் மொழிபெயர்ப்பு செய்து அடைக்க
மேலாளரைப் போல் கருணை இல்லாமல் நடந்துக்கொள்
கருணை மனுவை நிராகரித்துவிடு
கருணை என்பது ஆடைகள் என யாருக்கும் தெரியப் போவதில்லை
சேமிப்புக் கணக்கில்
இதழ்களைச் சேர்
ஆதார் அட்டைகள் கட்டாயம் கிடையாது
தானியங்கி இயந்திரங்களில்
எச்சில்கள் எண்ணப்படுகின்றன
உடல்ரூபாயில் உமிழ்நீர் வாசம்
காந்தியின் கண்களை யாரும் மூடுவதில்லை
அவரும் வேடிக்கை பார்த்து
சிரித்துக் கொண்டே இருக்கிறார்
வெட்கம் உனக்கு மட்டுமே சொந்தமாகிப் போனது தருணத்தில்
வியர்வைத் துளிகளை எச்சில் துளிகளை
நனைத்துக் குழைத்து உடல் முழுவதும் பூசி
உரையாடி தீர்த்தப்பின் ஏதோ ஒரு இடத்தில்
எரிச்சலை இதழ் தீண்டவே காத்துக்கிடக்கிறது
அதற்காவேணும் மெளனப் பார்வையால்
மொழிகளைச் சிந்து
முகத்தை மூடி சிரிப்பதும்
வெட்கத்தால் கன்னங்கள் சிவப்பதும்
கட்டளைகள் அல்ல கண்மணியே!
3.
அவளதிகாரத்தில்
கவிதையை அவள் எழுதிக் கொண்டிருந்தாள்..
அதிகாரங்கள்
கவிதைக்கு
அடிமையாகிக் கொண்டிருந்தன..
கண்களுக்கு மை தீட்டி கொண்டிருக்கிறாள்
பேனா மையோ கவிதைக்கு
வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தது
ரோஜா இதழை இதழில் கடித்துக் கொண்டிருந்தாள்
இதழ் வழிந்த கவிதையால்
எழுத்து தன்னுயிரை மாய்த்துக் கொண்டிருந்தது
காகித்துக்குக் கவிதை மட்டும் போதும்
ஆனால் கவிதைக்கு அவள் வேண்டும்
மொழியாக மட்டுமல்ல
ஒட்டு மொத்த கவிதையின் விழியாக.