cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 3 கவிதைகள்

மலர்விழி கவிதைகள்


நேசமென்பது ஒரு நிழல்
நான் எங்கு ஒளிந்து கொண்டாலும்
அந்த இடம் நோக்கி நீள்கிறது..

பருந்தின் கால் விரல்களைப் போல
அது லாவகமாக என்னைப் பற்றிக் கொண்டு பறக்கிறது.

ஒரு சலசலக்கும்
பரபரப்பான நகரச் சாலையின்
வாகன இரைச்சல்களுக்கும் விற்பவர்களின் ஓசைகளுக்கும் நடுவே
ஒரு சீருடைச் சிறுமியின் கைப்பற்றி
சாலை கடக்க வைக்கும் முகம் தெரியாத கைகள் அது

ஊடல் என்பது எனக்கு வசதியான‌ இருட்டுக் குகை
ஒரு மௌனத்தை விளக்காய் வேண்டினால்
சுவர் முழுக்க முன்னோர் வரைந்த ஓவியமாய் விரிகிறது உன் நினைவுகள்

தனிமைக் காற்றில்
இறகாய் பறக்கிறேன்
வெளி தரும் ஒளியில் நீளுகிறது பயணம்
ஒவ்வொரு நிறுத்தத்திலும்
விரிசல்

உனக்கும் எனக்கும் இடையே சலசலப்பின்றி ஓடுகிறது
ஒரு ஊமை நதி

கோபச் செருப்பைக் கழட்டி விட்டு நினைவுப் பரிசலில் குதிக்கிறேன்
ஒவ்வொரு முறை கரை தொடும் பொழுதும்
கலைந்து விடுகிறது என் கனவு

வற்றிப்போன வார்த்தை குளத்திலிருந்து
மீன் எலும்புக்கூடுகளை எடுத்து
ஒரு கூடு செய்து
காட்டுக்குருவியாய் என் கோபத்தை அடை காக்கிறேன்

உணர்வுகளைத் தூர மேகத்தில் பதுக்கி வைக்கிறாய்..

எண்களை ஏணியாக மாற்றி எண்ணிக்கையைக் கூட்டும்
ஒரு நாளில்
உன் புன்னகையைக்
கடித்த கட்டெறும்பு
என் பார்வையைக் கடித்தும்
விழிப் பள்ளத்தாக்குகளில் ஈரம்

ஆலங்கட்டியாய்
என்னை அசைத்து
துளித்துளியாய் நனைத்ததும்
மீன் கூடுகள் நீந்தப் போய்விட்டன..

உரை பனியில் சுடப்பட்டு சாம்பலாகின வேற்றுமைச் சுள்ளிகள்..

ஊடல் வலி மறக்க
உன் தலை கோதலுக்குக்
காத்திருக்கும்
சிறு நேசம் நான்!


நீள் நிலத்தின்
பிளவுகளில்
நிறைந்து கொள்கிறது சகதி….

மண் நனைந்த நொடி…
இலை துளிர்ப்பையும்
சிறு மலர் அசைவையும்
கனியின் நறுமணத்தையும்
எதிர்பார்க்கிறது மர நிழல்…

சிறு பிள்ளையின்
அறியா நேசத்தைப் போல
அந்த ஈரத்தை
இறுகப் பற்றிக் கொண்டு
திடம் இழக்கிறது மண்…

சூடு பாயச்சி
மேக‌ வலம் போகும்
வானின் காட்சி பிம்பத்தைக்
கலைத்துப் போகிறது கதிர்…

சிறகடிக்கும் தட்டான்களின்
நிழலை வளைத்துக்
காட்டுகிறது காற்று…

நனைத்தது நதியல்ல
அதுவும் கானலென அறிந்து
தன் மூன்று கண்கள்
வழியே அழுகிறது
தலை சீவப்பட்ட நுங்கு!!

About the author

மலர்விழி

மலர்விழி

கவிஞர் மலர்விழி பெங்களூரில் வசிக்கும் மென்பொறியாளர், கவிதைகள் எழுதுவதோடு மொழிபெயர்ப்பும் செய்து வருகிறார். ஓவியங்கள் மீதும்  வரைவதிலும் மிகுந்த ஆர்வம் உடைய,
இவருடைய கவிதைத் தொகுப்புகள் :
’விடாமல் துரத்தும் காதல்’ (எமரால்டு பதிப்பகம்),
“ஜூடாஸ் மரம்” (வேரல் புக்ஸ் ),
மற்றும் மலர்விழியின் மொழிபெயர்ப்பில் ‘அகாசியா மலர்கள்’
- பன்னாட்டு மொழிபெயர்ப்புக் கவிதைகள். (வலசை பதிப்பகம்0

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website