cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 35 கவிதைகள்

சவிதா கவிதைகள்


நிகழ்தகவு

கற்களுக்கு பதில்
முத்துப்பரல்களை
மாற்றியிருக்கிறாய்.
உட்கார சிம்மாதனம்.
மயிலிறகில் சாமரம்.
விரல்களில் ஒளிரும்
வைரங்கள்.
சரமாய் ஜாதிப்பூ.
அடர்பச்சையில்
சரிகையிழைத்த பட்டு.
கண்டவுடன் தோளணைத்து
விளையாட அழைக்கிறாய்.

அசையாது நிற்கும்
காதலை
வீசும் பகடையில்
நகர்த்த முயல்கிறாய்.
பந்தயத்திற்கு காத்திருக்கும்போது
பன்னிரண்டிற்கும்
தாயத்திற்கும்
பெரிதாய் வேற்றுமையில்லை.
கெலிக்க நிகழ்தகவுகள்
சிறிதாயினும்
இடுங்கிய கண்களில்
தெறிக்கும் பிரகாசத்திற்கு
கட்டத்தின் அருகிலிருந்து
அகலாமலிருக்கிறேன்.

அடுத்த நகர்வில்
பிடிகள் தளரக்கூடும்.
பிரமாணங்கள்
கலையக்கூடும்.
யாரென்று மறக்கக்கூடும்
நிதானம் மாறக்கூடும்.

‘காலமென்னும் தேரே
ஆடிடாமல் நில்லு’
ஒலிக்கிறது.
பகடையை உருட்டும்முன்
நீயே சொல்.
இக்கணத்தைப் போல்
இனி எக்கணம்.?


விலகிச் செல்

உட்புகுந்தது
சிறு துவாரமென்ற பயமுனக்கு.
பாவனைகள் வீண்.
அதே வெற்றி மாலையணிந்து செல்.
அதே பட்டு பீதாம்பரமும்.
அதே குறுநகை பொலியும்
முகமும், முத்தாரம்
அசையும் மார்புமாய்
நீ செல்ல
மகிழ்ந்து விசையை அழுத்தி
நாதாங்கி ஒலியிட திறந்து வைப்பேன் மணிக்கதவை.

வருவதென்பதும் போவதென்பதும்
அத்தனையும் எளியது
என் பாதையில்..
உன்பொருட்டு
ஒளிரும் சாலையில்
மின்மினிகளென முத்தங்கள்
பரிசளித்ததற்கு
என் தரப்பு நன்றி இது.


ஒரு விடைத்தாள்

பூட்டுகள்,
அரும்புகள்,
கண்கள்,
செப்பனிடாத வயல்.
ஆழ் குழி
ஆழி
ஆகாயம்
நட்சத்திரம்

திறக்கத் தெரியும்.
மலர்கையில்
நெருக்கத்தில் விரிவதை
ஏந்தத் தெரியும்.
கள்ளூறும் போதையை
தூண்ட
கருவி கொண்டு நிரவ,
புதிதாய் விதை ஒன்றாய் ஊன்ற,
முழுகி முத்தெடுக்க,
எடையற்று பறக்க,
மினுங்கி மறைகையில் கையில் ஒளிக்க
எங்கெங்கு எது உள்ளதென்பதை எப்படியறிந்தாய்?

பூத்து வா பொற்கொடி.
உன்னுடையதன்று.
என்னுடையதென்பதை மறந்து என்ன கேள்வி இது?

*
எப்போதறிந்தாய்?

முதலடி நெருங்குகையில்
மூச்சை இழுத்துப் பிடிக்கையில்
தாழப் பார்த்த விழிகளின்
மயக்கத்தில்
கைவிரல்களின் பிணைப்பில்.

எங்கிருந்தாய்?

உன் சென்மத்து தொடக்கத்தில்,
ரோமத்தில்,
இமைமயிரில்,
சிவப்பு நிற மருவில்,
மூளை மடிப்புகளில்
உன் பதின்மத் தடுமாற்றங்களில்.

எதற்கித்தனை தாமதம்?

பொறுத்து வந்தால்
பொய்களைப் புரிந்திருப்பாய்.
சலனங்களை உடைத்திருப்பாய்.
திமிர் வற்றியிருக்கும்.
நிஜத்தை நெருங்குவாய்.

இன்னும் மீதமிருக்கிறதா?

ஆம். தீராமல் நானிருக்கிறேன்.
உட்கொள் கண்மணி.
வாழ்வின் கடையோரத்தில்
ஈவுகளாய் மீதமிருப்பது
நாமும் நம் பெருங்காமமும்.


கவிதைகள் வாசித்த குரல்:
சவிதா
Listen On Spotify :

About the author

சவிதா

சவிதா

தமிழ்நாட்டிலுள்ள சேலத்தில் வசிக்கும் சவிதா., இது வரை ‘யாமத்தில் அடர்ந்த மழை’, ‘உபாசகி’, ‘கைநிறை செந்தழல்’,
‘ஊன்முகிழ் மிருகம்’ என நான்கு கவிதைத் தொகுப்பு நூல்களை வெளியிட்டிருக்கிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website