cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 35 கவிதைகள்

இது கமலாம்மாள் சரித்திரம்


தமிழ் சாகித்திய சரித்திரம் படித்தவர்களுக்குக்
கமலாம்பாளைத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு
அல்லது தெரியாவிட்டாலும் பாதகமில்லை
நான் சொல்லப்போவது கமலாம்மாள் சரித்திரம்
இவரும் ஒரு நாவலின் கதாநாயகி ஆகத் தகுதியான
எல்லா சோகத்தையும், சாதனையும், நீங்காத சிரிப்பையும்
கொண்டு வாழ்ந்தவர்தான்…

**

கமலாம்மாவை நான் அவரின் மூப்பில்தான் முதல் முறை பார்த்தேன்.
அகலாத புன்னகை அவர் அருளுவார் எனத் தெரியாததற்கு முன்பு
நான் அவர் பால் மிகவும் ஐயம் கொண்டிருந்தேன்.
நான் நுழைந்த, நான் அனுமதிக்கப்பட்ட முதல் பார்ப்பனர் வீடு
அவருடையதுதான்…
நலம்தானா அம்மா…?? பத்து’’ 1 உங்கள பத்தி ரொம்ப சொல்லுவார்
நல்லா இருக்கீங்களா…. என்றார்
நிஜம்தானா?? இது என்பதற்குள்
அன்பே வடிவான அம்மா என்னை அதற்கப்புறம்
பல நாட்கள் அவர் வீட்டில் பத்திரமாய்ப் பார்த்துக்கொண்டார்.
என் சோகை உடம்புக்கு அதுவரை அதிகப் பரிட்சியமில்லாத நெய்யை
நான் தயங்கும் போதெல்லாம் தாராளமாய் ஊற்றுவார்.
என்ன நீங்கச் சரியா சாப்பிட மாட்டேங்குறீங்க…
வளர்ர புள்ள சாப்பிட வேண்டாமா??? என்பார்…
தாராளமாய் நெய் ஊற்றும் கையும்
தாராளமாய் அன்பு பொழியும் மனசும்
தாராளமாய் அவருக்கு வாய்த்திருந்தது..

**

என் முதல் சந்திப்பின் போது அவர் மீது எனக்குத் தெரியாத
சோகம் அப்பிக் கொண்டது…
சமையலைத் தவிர்த்து அந்த வீட்டில் எல்லா வேலைகளையும்
அவரே பார்த்து வந்தார்…
முதுமையால் தேய்ந்து போன அவருடைய கால் எலும்புகள்
அவரைத் தத்தித் தத்தித்தான் நடக்க வைத்தன…
ஆனாலும் அவருக்கொரு ஓய்வில்லை…
அவருக்கொரு தூக்கமில்லை
தன்னருகே ஒரு பெரியவர் படுக்கையில் சதா ஏதோ புலம்பியபடி
மூத்திரம் சொட்டிக் கொண்டிருந்தால்
யாருக்குத்தான் தூக்கம் வாய்க்கும்???
அதுவும் அவர் தன் கணவராய் இருந்துவிட்டால்…??

**

கமலாம்மா பல தோல்விகளைக் கண்டிருந்தார்…
முதல் மதிப்பெண் பெற்றும் அவளை யாரும் படிக்க அனுப்பவில்லை
சிறு வயதிலேயே கல்யாணமும் கட்டி வைத்தார்கள்…
தன் பிள்ளைகள் ஏனோ சராசரியாகப் பிறக்கவில்லை…
ஒரு பெண், இரண்டு ஆண்கள்…
அவர்களுள் ஒருவருக்கு மூளை குறைபாடு,
பார்வையும் இல்லை; மற்றொருவருக்கு மாற்றுப் பார்வை..
எனக்கொரு சந்தேகம் அப்பிக்கொள்ளும்
கமலாம்மா இதற்கெல்லாம் வருந்துவாரா???
நான் கமலாம்மாவைக் கேட்க முயலும் போதெல்லாம்
அதை அவர் தெரிந்து கொண்டதைப்போலச் சிரிப்பார்..
நல்ல படியாய் அவர்களை ஆளாக்கிக் காட்டி இருந்தார்…
அவர்களுள் ஒருவர் பல்கலைக்கழக வாத்தியார்….
வேறென்ன சாதனை வேண்டும் அவரை மெச்ச???

**

என் வாத்தியார் டாக்டர் பட்டம் பெற
அவரம்மா படாத பாடுபட்டார். அவருக்காக வேண்டி எல்லா நாவல்களையும்
அவரே முதலில் படித்தார்; பிறகு திரும்பவும்.
எந்த நிமிசமும் ஜெயகாந்தன், யு. ஆர். அனந்தமூர்த்தி நாவல்களைக்
கவனப்பிழை இன்றி சொல்வார்.
’அம்மா எனக்கொரு சந்தேகம்’ என்று அவரின் பத்து’’க் கேட்டும்
போதெல்லாம் கதாபாத்திரங்களையும், கதைப்போக்கையும்
அவர் தாமதமின்றிச் சொல்லுவார்..
அப்போதெல்லாம் பல ஆயிரம் பக்கங்கள் அவர் மூளையில்
வேகவேகமாய்த் திருப்பப்படும்..
நான் உடனே சொல்லுவேன்: சார், டாக்டர் பட்டத்தை
உங்க அம்மாவுக்குத்தான் கொடுக்கனும்…

**

தமிழின் ஓர் அபூர்வ வாசகி என்றால்
கமலாம்மாவைச் சொல்ல வேண்டும்;
தன் மகனின் எல்லா புஸ்தகங்களையும்
கிட்டத்தட்ட அவர் படித்திருந்தார்…
ரொம்பவும் சிலாகித்துப் பேசுவார்…
மேலும், என் வாத்தியார் இன்றும் படிக்காத என் தொகுப்பை அவரே
முதலில் படித்தார்.. ரொம்ப நல்லா எழுதி இருக்கே விமல் என்பார்…
அவர் போல் அவர் பிள்ளைகள், அவர் போல் அவர் பேரன்கள்…
அச்சுபோல் இலக்கிய வாசகர்கள்…
தன் பேரன் ஒரு சின்ன பத்தியை மொழிபெயர்த்ததை எண்ணி
அவர் மிகுந்த புலகாகிதம் அடைந்தார்;
அதுதான் அவரோடு நான் கடைசியாய் பேசிய தருணம்.

**
கமலாம்மாள் கடந்த வாரங்களில் கதி அடைந்தார்…
வயதின் மூப்பு அவருக்கு அதைத் தந்திருந்தது.…
எனக்கொரு அதிர்ச்சி இல்லை;
ஆனால் செய்தி கேட்டு வாதை என்னை உடனே கவ்விக் கொண்டது
கமலாம்மாவைப் பார்க்க முடியாமல் போன சோகம்
எனக்கு ஏற்பட்டது; என்றபோது வாய்த்த அவருடைய கடைசி படத்தில்
மிச்சமிருந்த அவரது பொக்கை வாய்ப் பல்லை ரொம்ப நேரம்
நான் பாத்துக்கொண்டேஎ இருந்தேன்…. போய் வாருங்கள் என்றபடி.

**

கமலாம்மாவை நினைத்தால் வரும் ஒரு சந்தோஷம்
கமலாம்மாவை நினைத்தால் அப்பும் ஒரு சோகம்
கமலாம்மாவை நினைத்தால் வாய்க்குமொரு தெம்பு
கமலாம்மாவின் அழகே வதனமான அவள் பருவ படமும்
அவர் மூப்பின் சிரிப்பும்
என் கண்முன்னே வந்துசெல்லும் அவ்வப்போது ஒருங்கே
இனி அவரின் இறுதி முகமும் எனும்போதுதான்…

**
தமிழ்க் கவிதைகள் பலவும் படித்த கமலாம்மாவுக்கு
தானுமொரு கவிதையாகி இருப்பது மட்டும்
இனி தெரிய வாய்ப்பில்லை அல்லவா….?


** றாம் சந்தோஷின் ஆசிரியரும் நலன்விரும்பியுமான கு. பத்மநாபன் அவர்களின் தாயார் திருமிகு கமலா அம்மையாரின் நினைவுகளுக்கு…

About the author

றாம் சந்தோஷ்

றாம் சந்தோஷ்

வேலூர் வாணியம்பாடியிலுள்ள உதயேந்திரம் கிராமத்தில் பிறந்த றாம் சந்தோஷின் இயற்பெயர் சண்முக.விமல் குமார். ஆந்திரா மாநிலம் குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ், மொழிபெயர்ப்பியல் துறையில் பட்டம் பெற்றார். திராவிடப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் 'நச்சினார்க்கினியரின் தொல்காப்பியக் கோட்பாடு' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். சண்முக.விமல் குமார் என்ற இயற்பெயரில் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எழுதுகிறார். றாம் சந்தோஷ் என்ற பெயரில் கவிதைகள், புனைவுகள் எழுதுகிறார்.

சொல் வெளித் தவளைகள், இரண்டாம் பருவம் ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அடிகோபுல வெங்கடரத்னம் எழுதிய தெலுங்குக் கவிதைகளை ’கண்ணீரின் நிறங்கள்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தார். தெலுங்கிலிருந்து சிறுகதைகளை தமிழில் மொழியாக்கம் செய்து இலக்கிய இதழ்களில் வெளியிட்டுள்ளார். 'இடைவெளி' கவிதைக்கான காலாண்டிதழின் ஆசிரியர்களுள் ஒருவர்.
தமிழவன், ஞானக்கூத்தன், சி.மணி, ரமேஷ் பிரேம், ஆண்டாள், ஜெயங்கொண்டார் போன்றோரை ஆதர்சமாகக் கூறுகிறார். கவிஞர் அப்துல் ரகுமானை தொடக்ககால ஆதர்சமாகக் கூறுகிறார். தொல்காப்பியவியல், கவிதையியல், கலை, இலக்கியத் திறனாய்வு, கோட்பாடு, நாட்டார் வழக்காற்றியல், ஒப்பிலக்கியம் சார்ந்த கட்டுரைகள் எழுதியுள்ளார்.

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
காளி

ஆத்மார்த்தமான குறிப்பு.
மனமார்ந்த அஞ்சலி!!!

You cannot copy content of this Website