cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 35 கவிதைகள்

கண்ணுக்கு தெரியாத நூல்கள்


நான் வீடு திரும்புகிறேன்,
பழக்கமான நிசப்தம் இல்லை
என் காலடிச் சப்தம் அல்லாத
விசித்திரமான ஒலிகள்.

புதிய அமைதி குடியேறியிருக்கிறது
என் காலணிகள் சுத்தமாக துடைக்கப்பட்டு
சோடியாக அருகருகே வைக்கப்பட்டிருக்கிறன.

ஏலக்காய் மணக்கிற தேனீர் கோப்பையில்
பதிந்திருக்கும் உதடுகள்
என்னுடையவை அல்ல.

அலமாரிகளில் எளிதாக அடுக்கப்பட்ட மளிகைகள்
பாண், முட்டை, வெங்காயம், தேங்காய், மாசித்துருவல்.
எல்லாம் துல்லியமாக அதனதன் இடத்தில்.

சூரியன் எங்கு விழும் என்பது தெரிந்தது போல்
என் ஈர உடைகள்
பின் கட்டில் தொங்க விடப்பட்டிருக்கின்றன.

நான் கேட்காத கருணையுடன்
எனது பறவை தீவனக்கூடுகள் நிரப்பப்பட்டிருக்கின்றன.

குளிர்சாதனப் பெட்டியை திறக்கிறேன்.
பதட்டத்தின் துளிகள் காற்றில் நழுவுகின்றன.
தக்காளி, உப்பு தேசிக்காய், அம்பரங்கா தோசி
எனக்குச் சொந்தமில்லாத
புதிய வரிசை.

மஞ்சள் ரோசாத் தொட்டியிலிருந்து
காய்ந்த இலைகள் அகற்றப்பட்டிருக்கின்றன.

அழுத்திக் கூட்டிய சுத்தமான தரை
மாற்றப்பட்ட பல் துலக்கியின் தலை
நான் குழம்பியிருக்கிறேன்.

என் வாழ்க்கை
இன்னும் ஏதோவொன்றாக…
மிக சராசரியானதொன்றாக
அமைதியிழக்கச் செய்கிறளவுக்கு
சுத்தப்படுத்தப்பட்டிருக்கிறது

என்னை அச்சத்தில் ஆழ்த்தியது
என் காலணிகளோ, துடைப்பானோ அல்லது
மேசையில் ஆவிபறக்கின்ற சுருட்டாப்பமோ அல்ல.

அது என் சொந்த பயத்தின் வெறுமை
பாதி இங்கே பாதி அங்கே இருக்கும் வீட்டில்
என் சோற்றுச் சட்டியைக் கிளறி
என் துணிகளை மடித்து
என் தோலுக்குள் ஊடுருவிய அந்நியன்
விட்டுச் சென்ற வெற்றிடம்.

இவ்வளவு அவதானிக்கப்படுபவளாகவும்
ஆனால் அவதானிக்கப்படாதவளாகவும்
நான் முன்னெப்போதும் உணர்ந்ததில்லை.

இவ்வளவு அக்கறை,
எனக்கு ஒரு போதும் கிடைத்ததில்லை.

ஆனாலும்
அடையாளமே காண முடியாதொரு வாழ்க்கைக்குள்
என்னை மடித்து வைத்திருக்கிற
அந்தக் கரங்கள்
பேரச்சத்தை ஊட்டுகின்றன.


 

About the author

ஷமீலா யூசுப் அலி

ஷமீலா யூசுப் அலி

பெண்களை மையமாக கொண்டு இயங்கும் பெம் ஏசியா ( FemAsia Magazine) இதழை இங்கிலாந்திலிருந்து நடத்தி வருகிறார் ஷமீலா யூசுப் அலி.

தன் எழுத்துக்கள் மூலம் சுயம், அடையாளம் போன்ற விடயங்களை ஆராய விரும்புவதாகவும், . கடந்த காலத்தையும் நினைவுகளையும் எல்லையற்ற படைப்பாற்றல் மற்றும் முடிவற்ற சாத்தியக் கூறுகளின் வெளியாக இனங்காண்பதாக கூறும் ஷமீலா யூசுப் அலி, தனது எழுத்துக்கள் மூலம் தன்னைச் சுற்றியுள்ள உலகின் அழகுக்கான மெச்சுதலுடன் வாழ்தலின் சாரத்தை வெளிக்கொணர முயல்வதாகவும் குறிப்பிடுகிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website