1.
திருடுவதற்கென்றே வளர்க்கப்படும் பூனைகளுக்கு
இரவை திறந்தே வைத்திருக்கிறேன்.
சராசரிக்கும் கீழே பெய்த மழையை வஞ்சித்து என்ன பயன்
நாம் தான் மரங்களை அழித்துவிட்டோமே
சரி,
எதன் பொருட்டு கண்ணை மூடிக் கொள்கிறது பகல்?
எதன்பொருட்டு மல்லாக்கப் படுத்திருக்கிறது
கரப்பான் பூச்சி?
2.
சீதையும், கண்ணகியும், பேச்சு வழக்கில் படிமமாகி நெடுநாளாகின்றன
நவீன ஓவியத்தில் பிகாசோவும், வான்காவும் ஒரு படிமமாகிவிட்டனர்
நீர், குளம், மரம், மீன், சூரியன், நிலாக்கள், பறவைகள், பூக்கள்,
வண்ணங்கள், கோடுகள், மரணங்கனெ
கவிதைக்கு முன்பும், சொற்களுக்கு முன்பும், மௌனத்திற்கு முன்பும் கூட
எல்லாமும் படிமங்களாகிவிட்டன
நாம் செய்வன யாவும் படிமத்தின் மீதான ஒருமேற்பூச்சு.
அல்லது
ஒரு படியெடுத்தல்.
3.
கிளையில் அமர்ந்த ஒவ்வொரு பறவையும்
ஒரு மரத்தை எடுத்துக் கொண்டு செல்கின்றன.
உதிர்ந்த சருகுகள் யாவும்
ஒரு சூரியனையாவது உலுக்கிவிட்டு வீழ்கின்றன.