1
உனக்கு எதுவுமே தெரியாது
பேசாமலிரு என்ற
காலங்களிலெல்லாம் அம்மா
எதையாவது பேசத் துடித்திருக்கிறாள்.
உனக்கென்ன சும்மா இருக்கிறாய்
என்ற காலங்களிலெல்லாம்
அம்மா எதையாவது
செய்து கொண்டே இருந்திருக்கிறாள்.
நீ ஒழிந்து போ என்றவர்கள் மத்தியில்
எல்லாம் அம்மா
வாழ்ந்து காட்டியிருக்கிறாள்.
அன்பை அன்பாகத் தரத் தெரியாதவர்களைக் கூட
அம்மா நேசித்திருக்கிறாள்.
தனிமையில் வாழ
சபிக்கப்பட்ட பின்னும்
நிராதரவுகளை சந்திக்கப் பழகியிருக்கிறாள்.
இத்தனைக் காலம்
அவள் சுதந்திரத்தைப் பற்றியிழுத்த
பாவங்களை எண்ணி
அம்மாவிடம் மன்னிப்பாய்
விழுந்து கிடக்கிறார் அப்பா.
முதலும் கடைசியுமாக
நிம்மதியாக உறங்கிப் போனாள்
அம்மா.
2
கடவுளை நம்பாத என் அறையில்
என்னைத் தழுவுகிற எல்லாமே
கடவுள்.
ஒரேயொரு சிகரெட்டுக்கு நாள்
முழுக்கக் காத்திருந்து பின்
வாங்கித் தந்தவனொரு கடவுள்.
ஒருவேளை உணவுக்கு
கண்களில் உயிர் தேக்கியிருந்த என்
கரங்களில் இனாமாய் உணவுப் பொட்டலம் திணித்தவனொரு கடவுள்.
என்றைக்கும் திரும்பிப் பார்க்காதவள்
இன்று சிரித்து விட்டே போகிறாள்
கடவுள் போல.
அறையைப் பகிர வந்தவனுக்கு
என் குறை புரிந்தது.
அவன் பைகளில் இரண்டு மதுபாட்டில் கடவுள்கள்.
எட்டி உதைத்தும் என் அறையின் வாசலிலேயே படுத்துக்கொண்டது.
நாய் ஒரு கடவுள்.
அறியாத பிணத்திற்காக
சிலதுளி அழுதேன்.
பிணமொரு கடவுள்.
விலைமகள் அழைத்தாள்.
இழந்த காதலி நினைவு வந்தது.
அவளொரு கடவுள்.
பழைய நண்பன்
சில ரூபாய்கள் தந்து
பழைய கடன் தீர்த்தான்.
இன்று இந்த இரவு ஒரு கடவுள்.
உடல் எடையிழந்து
உலகம் பாரமாய் அழுத்தியது.
மனமொரு கடவுள்.
இந்த வாழ்வின் அறை திறந்தென்ன பயன்.
இழுத்து மூடுகிறேன்.
ஞானம் ஒரு கடவுள்.
யாராவது போனால்
யாராவது திரும்புகிறார்கள்.
எனக்கு
நான் தான் கடவுள்.