நடுவில் நிற்கிறேன்
முன்னேயும்
பின்னேயும்
எதுவுமேயில்லாதபோதும்
நடுவிலேயே நிற்பதாக
நினைத்துக் கொள்கிறேன்
பெருங்காடொன்று திடீரென்று
முழுதாக காலியானதைப் பற்றியோ
பெருங்கடலொன்று
திடீரென்று முற்றிலும்
வறண்டு போனதைப் பற்றியோ
ஈஎம்ஐ கட்டும்
யாரும் நினைத்துப் பார்க்கவே முடிவதில்லை…
தானாக முளைத்துவிடுகின்றன
தானாக வளர்ந்துவிடுகின்றன
தானாக அழுகிச் சாகின்றன
நடுவிலே
நிழல் பூ காய் பழம் பலகை
என்று மாறி மாறித் தோன்றும்
மரங்களுக்குத்தான் எத்தனை பெயர்கள்?
ஏமாந்துவிட்டேன்
ஏமாறுகிறேன்
ஏமாறத் தயாராகவும் இருக்கிறேன்
அதனால் என்னை ஏமாற்றியதைப் பற்றி பெருமையாக யாராவது சொன்னால்
சிரித்துவிடுங்கள்…
கங்கு பொறுத்துப் பொங்கி எரிகிறது
மலை மீது படர்கிறது
மலையின் பெருநிழல் ஊர் மீது விழுகிறது
மலை மீது விழுந்த மர நிழல்கள்
நீண்டு நெடுகிப் பறக்கிறது
வெப்பத்தின் மத்தியில்
நதி மீது விழுந்த ஒளி
பரப்பிய நிரந்தரமற்ற பகலை நம்பி
குதிக்க எத்தனித்த மீன் குஞ்சை
லாவகமாகக் கவ்வி வாய்க்குள் இழுத்துக் கொண்ட தாய் மீன்
சொன்னது,
“ஒளியெல்லாம் பகலல்ல”