1. பதினைந்து கோடைகள் உறங்கிய ரகசிய உலகம்
பதினைந்து கோடைகள் கழிந்தபின்
ரகசியமொன்றின் மென்னுடலை
ஓர் உரையாடலில் திறக்கிறாள் செளந்தர்யத்தின் மகள்.
மனதின் சாளரத்தின் வழியே உள்நுழைந்த
ரகசியத்தில் அவன் விதிர்விதிர்த்துப் போகிறான்.
அந்த ரகசியத்தின் உடலின் வழியே பயணித்து
மறுபுறம் செல்கிறான்.
அங்கே,
பட்சிகள் ஆயிரமாயிரம் பறந்து திரிகின்றன
பஞ்சு ரோமங்களைக் கொண்ட சிறுவிலங்குகள்
புல்வெளியை மேய்கின்றன.
அகண்ட தடாகமும் அதன் கரையில் விருட்சங்களும்
ஓவியமென காட்சியளிக்கின்றன.
நீண்டதூரம் ஒற்றையடி பாதையில்
நடந்து செல்லும் அவனைத் தொடர்கின்றன
மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சிகள்.
தூரத்திலிருந்து வருகிறது அகவல் ஒலி.
ஒலி வந்த திசையிலிருந்து அவனை நோக்கி
ஓடி வந்து மார்பில் புதைந்து தளும்புகிறது
மயிலொன்று.
கோடைகள் இல்லாத அவ்வுலகின் முதல் மழையில்
கூத்தாடுகின்றன
ரகசியங்கள் நிரம்பிய இரு மென்னுடல்கள்.
2.தேவைகள் என்றொரு பனிப்பாறை
தன்னுடைய தேவைகளுக்கான பொழுதில் மட்டும்
விழித்துக்கொள்ளும் அந்தப் பனிப்பாறை.
தன் வனமுலை ததும்ப
தேவைகள் ஒவ்வொன்றையும்
மருங்குல் ஏற்றி நிலம் அதிர நாட்டியமிட்டு சிரிக்கும்.
பனிப்பாறையின் வதனத்தில் பட்டுத் தெறிக்கும்
நிலவொளியில் வீழ்வார்கள் அறிவிலிகள்.
நிலமெங்கும் சிதறிக்கிடக்கும் கனவுகளை
மிதித்தழித்து மிதித்தழித்து
தேவைகளை பூர்த்தி செய்து களிக்கும்.
தேவைகள் தீர்ந்த நாளொன்றின்
உச்சி வெய்யிலில் கரைந்துருகி
காற்றில் கலந்து மறையும்.
அறிவிலிகள் கண்களில் நீர்மல்க
காத்திருக்க துவங்குவார்கள்.