1. கூதிர் காலம்
ஒரு சங்கிலி பிணைப்பிருக்கிறது
மறந்ததாய் நம்பும் உறவிற்கும்
விட்டு விட்டு பெய்யும் இந்த மழைக்கும்
கோடை காலம்
கூட்டத்தில் கையசைத்து நகரும் நண்பனைப் போல
எந்த சுமையையும் நமக்குத் தருவதில்லை
நடந்து நடந்து அயர்ந்த நத்தை உறங்கிக் கொள்ள
ஒரு கூட்டை சுமப்பது போலத்தான்
இந்த டிசம்பர் குளிர் நினைவுகளைத் தாங்கி அடைகாக்கிறது
ஆனால் இந்த கூதிர் காலம்
ஈரக்காலுடன் நடக்கும் நங்கையாய்
அகம் முழுக்க மோகத்தை விதைத்து விடுகிறது
இல்லையென்றால்
எங்கோ நீர் குடித்த மேகம்
சிதறவிட்ட துளிகள்
சமுத்திர ஆழத்தில் கிடந்த சிப்பியை
கடற்கரையில் எறிந்து விட்டுப் போவதாய்
உன் முத்தத்தை நினைவிலிருந்து ஏன் மீட்டெடுக்கிறது
இந்த நாள்!!
2. பிரியம் வலுத்த கணம்
அலை அலையாய் அடித்து ஓய்ந்தபின்
சலனங்களை ஒதுக்கி
நீர்த்தேக்கமாய் நிற்கிறேன்
கடந்து செல்லும் போது
சொல்லைக் கல்லாக விட்டெறிகிறாய்
குமிழி குமிழியாய்
உடைந்த போதும்
மேலெழும் நினைவுகள்
ஆன்மாவை சிதறிடுகிறது
அவற்றை தின்ற மீன்கள் எல்லாம் பருந்தாகி பறந்திட
எடையிழந்த அரசன்
அரியணையை நோக்குவதாக
உன்னைத் தேடுகிறேன்
நினைவு மணல் நெருட
நுரை கூடி நகர்கிறேன்
கரையை தழுவித் தழுவி,
பாதச்சுவடு கண்டறிய
அலைகளைக் கோருகிறேன்
மட்டுப்படாத ஆசையில்
சூரியனை விழுங்கி சந்திரனை உமிழ்ந்த போதும்
தேடலைக் கைவிடவில்லை இந்தச் சமுத்திரம்
பறவை உதிர்த்த இறகு
காற்றின் உள்ளங்கையில் சேர்ந்தது கண்டு
உன்னை எனக்குள் தேடத் துவங்கினேன்
பரிசுத்த ஆவியின் பெயரில்
பிராத்தித்த அன்பின் வழி
உணர்ந்து கொண்டேன்
அன்று என்
ஆழத்தில் முயங்க
நீ வீசி எறிந்த
சொல் – காதல்
3. வேட்கை
தலைகோதும் அன்பின் பிடிப்பில்
தவிக்கும் மான்குட்டியின் மருண்ட விழிகள்
இந்த மனநிலை
நேசத்திற்கு ஏங்கும் பொழுதில்
வேரை மறுக்கும் மணலில்
பிடிவாதம் காட்டும் தாவரம்
என் காதல்