புலப்படாமல்
பக்குவப்படாத கோவத்தின் உள்ளிருட்டை
பதம் செய்கிற மலையின் மேல்
நின்று எரிகிறது
நமது பழைய வெளிச்சம்
இப்போதும் தெளிவுறாத பாதைகளின் வழி
நினைவின் ரோமக் கால் சிலிர்க்க
வளர்கிற கனவுக்குள்
நின்று எரிக்கிறது பழைய குளிர்
அசைவின்றி கிடக்கும் மனத் தாழ்வாரத்தில்
வெயில் எரிந்த வேகத்தின்
மழைக் கீறல் விழுந்த நிழலுக்குள்
அதே தாகம்
♠♠♠♠♠♠
காத்திருப்பின் இசை
கீழே விடத் தெரியாத உயரங்களால்
புலர்கிறது கனம்
தந்தவர்கள் ஏற்றிய பொதி மூட்டைக்கும்
மூட்டையாய் மாறிய சென்றவருக்கும்
இடையே வளையா சுயத்தில்
வளர்கிறது மூங்கில் வனம்
பிறர் அசைவுக்கு ஆடும் மனம்
இசையா வனத்தை வரிக்கிற குழல்
புழங்காத வரை புரிவதில்லை
துளையின் இசை
♠♠♠♠♠♠
எட்டா வேதம்
இனி தேவை இல்லை என்பதாக
தொடங்கிய ஏற்பாட்டை
வேதமாக்கும் மனத்தின் திண்மத்தின் மேல்
அமர்கிறது
நான் வளர்த்த கர்வம்
பொருட்படுத்தாத அன்பில்
அடைந்துவிட்ட சலிப்பு
இரை கேட்கும் பொழுகளில்
நானொரு மாமிசப் பண்டம்
பசிக்க வரும் கோவத்தை
தவிக்கும் சொல் மேல் மோதச் செய்த பின்
அடங்கும் தருணங்களை
நூலெனத் திரித்துக் கோக்கிறேன்
உருளும் மூளைக்குள்
திரளும் நியாபகங்களின் மையத்தில்
பிரபஞ்ச சிலந்தி
♠♠♠♠♠♠
செயல் மீன்கள்
தொடங்கிவிட்ட பயணம்
கொண்டு சேர்க்கும் இடத்தின் மேல்
கேள்விகள் உண்டு
பிராதனம்
கம்பளம் விரிக்கும் ஒற்றுமையை
அகலத் திறந்து பார்க்கிறது
ஒப்புமை
அகப்படாத விழித்திரைக்குள்
வெளிச்சமென காட்டிய சொற்கள்
கலங்கரையாகா கடலுக்கு
எந்த சொல்லை துடுப்பாக்க
விரல் தின்று பசியாரும் மீன்கள்
என் கனவுகள்
அதற்குள் எழுத எழுத
பிறக்கும் வெளிச்சம் அகல் விளக்கு
பழக்கம் கடலாகும் நாளில்
துடுப்பாகும் வெளிச்சம்
என் மீன்கள்