பணி நீக்கச் சந்தையில்
அடிமாட்டு விலைக்குக் கூட வாங்கப்படுவதில்லை தொழிலாளர்கள்
தொழிற்சாலையின் துருப்பிடித்த
உலோகத் துகள்களைப் போல உதிர்ந்து கிடக்கிறார்கள்
எரிந்த நிலக்கரியின் சாம்பலைக் கொட்டும்
கொஸஸ்தலை ஆறாக நுரைக்கிறார்கள்
இறைச்சிக் கூடத்தின்
அழுகிய எலும்புகளைப் போல் நாற்றமெடுக்கிறார்கள்
பாழடைந்த பின்னிமில்லின் வேர்களோடிய மதிற்சுவரைப் போல்
விரிசலுற்று நிற்கிறார்கள்
சந்தையின் நடைபாதை காய்கனிகளைப் போல
மிதிபட்டுக்கொண்டிருக்கிறார்கள்
பணி நீக்கச் சந்தையில்
அடிமாட்டு விலைக்குக் கூட வாங்கப்படுவதில்லை தொழிலாளர்கள்
*******
தன் மணிக்கட்டில்
கால முட்களைச் சுழலவிட
நீண்ட நாட்களாய் ஆசைப்படுகிற மகன்.
பள்ளிக்குச் செல்லும் முன்னும் பின்னும்
களவு போன தன் பாதங்களைக்
குறுக்கும் மறுக்குமாய்த் தேடியலைகிறாள் மகள்.
கிழிந்த ஆடைகளைத் தைத்து
அரிவாள்மனையில்
விரல்களை அரிந்துகொள்ளப் பழகுகிறாள் மனைவி.
வெற்றுக் காகிதத்தில்
வாக்கிய அமைப்பைச் சரிபார்க்கவும்
அனுப்பப்படாத மின்னஞ்சல்களைப்
பதிவிறக்கம் செய்யவும்
மீண்டும் மீண்டும் பணிக்கப்படுகிறேன்
தற்காலிகப் பணியில்.
*******
அடையாள அட்டையை
வீட்டு ஆணியில் தொங்க விட்டு
அலுவலகம் சென்றேன்.
எனது நிழலும் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை
இன்று பணிசெய்ய வேண்டாமா என்றேன்
அட்டை மட்டும் வந்தால்கூட அனுமதிப்போம்
ஆனால், நீ மட்டும் வருவாயானால்
சூரியனுக்குக் காவல்தான் நிற்க வேண்டும்.
பின், என்னை வீட்டு ஆணியில் தொங்க விட்டு
அடையாள அட்டையை மட்டும்
அலுவலகம் அனுப்பி வைத்தேன்.
*******
முதுகெலும்பை உருவிய முதலாளி
அதை என் உச்சி மண்டையில் செருகி
முதலாவதாக
கடைசித் துளி இரத்தத்தையும்
இரண்டாவதாக
கடைசித் துண்டுச் சதையையும்
மூன்றாவதாக
கடைசி நரம்பிழையையும் உறிஞ்சினார்.
பசியடங்கா முதலாளி
என் குடும்பத்தின் ஒவ்வொரு உச்சி மண்டை மீதும்
அவரவரின் முதுகெலும்புகளைச் செருகத் தொடங்கினார்.
*******
பணியிழந்த தொழிலாளர்கள்
துருப்பிடித்த இரும்புச் சாமான்களுடன்
தங்களின் இரைப்பைகளையும்
எடைக்குப் போடுகிறார்கள்.
எடையற்ற இரைப்பைகளை மட்டும்
நடுச்சாலையை நோக்கி எறிகிறார் கடைக்காரர்.
அவை தரையில் வீழ்வதற்குள்
கவ்விச் செல்கின்றன
கழுகுக் கால்கள்.
*******
அவன் கைரேகையின் மீது
சானிடைசர் தெளித்த மனிதவள அதிகாரி
கணினியுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
கால்களுக்கிடையே எலிகளின் உரசல்
பின்னந்தலையில் பூனையின் பிராண்டல்
ஆனாலும் வீட்டில் இருந்து பணிசெய்தபடி
இரண்டு மாதச் சம்பளம் பெற்றிருந்தான்.
பணி விலகல் கடிதம் கேட்டு
இடைவிடாது வாட்ஸப்பில் மன்றாடிய மனிதவள அதிகாரி
சிறிதும் இடமற்ற தன் இரைப்பைக்குள்
சூடான சாம்பலை இட்டு நிரப்புகிறார்.
ஆணியில் தொங்கும் பணியிழந்தவனின் கன்னக்குழியை
மறைத்தாடுகிறது செவ்வந்தி மாலை.
சிறப்பான கவிதைகள் தோழர்