மிச்ச இயலாமை.
கண் முன்னே கரையும்
மணல் வீடு
மீளுருவாக்கவியலாது
வயது கூடிப்போனதால்.
நிதானிப்பதற்குள்
நிகழ்ந்து விடும்
விபத்துக்களுக்கு
அரியதொரு
காரணமிருக்கும்
பொருந்தாத
போதாமையில்.
அக்கரையற்றுப்போன
தள்ளாமை.
மை தொடாமல்
மழிக்கிறது.
முகத்தை
வெள்ளைக்கு வெட்கப்பட்டு
வண்ண ஆடைகளுடுத்தி.
வியாபாரத்தில்
விழுந்துவிட்ட
தேகத்தை
வென்று விடுகிறது
மருத்துவம்
சேமிப்புகளை சேதரமாக்கி
கால நீடிப்பில்.
தோல்க் கூடில்
தொலைந்த
இலக்கு
கால் நடையில்
பின்னிக் கிடக்கிறது
நாளையில் வரவாக்கும்
மிகு நம்பிகையில்.
சமரச ஏற்பாட்டில்
காணாமல் போன
அசலை.
நினைவூட்டும்
ஏதோவொன்று
பெரு மூச்சாக
வெளியேறி
பிடித்தாட்டி
பிதற்றுகிறது
தடுமாறிய தருணத்தை
நினைவூட்டி
எப்பொழுதும்
அல்லது
எப்பொழுதாவதும்.
மென்று தின்னும் பொழுதில்.
அகல மறுத்த துயரம்
பொழிவைத் தின்றது
பிள்ளைகள் கலங்குமாறு.
பஞ்சு மெத்தையின்
முள் வலி
சொல்லிப்புரியாது
பார்க்கும்
தோரணையில்
வசதிகள் கூடி இருப்பதால்.
சலிப்பாகத்தான்
இருக்கிறது.
வாழ்க்கை
சவக்கூடாரத்தில்
இருப்பதாக
எப்பொழுதும்.
குப்பைத் தொட்டியாக
நாறியிருக்கும்
நரக வாயிலென.
நண்பன்
வாய்க்காது போயிருந்தால்.
சில
நல்லறங்கள்
துளிர்க்கிறது
வாழும் ஆசையை
நீடித்தலாக.
சுவாசத்தில்
சுடர்விடுகிறவனை
நினைத்து
காலத்திற்குள்
கணிப்புகள் கடந்தும்
சில இருப்பதால்.
நேசமெய்கிய நித்தியக் குடித்தல்.
சொற்களை நிரப்பி
சூடாக
கோப்பைகளில்
எப்பொழுதும்
எங்காவதொரு இடத்தில்
தேநீர் தயாரிக்கப்படுகிறது
நறுமணப் பொய்களில்.
விற்பனைக் கடைகளின்
தேநீரில்
நிரம்பியவைகள்
இயலாமைச் சுவையில் இருந்தது
அலுப்புகள் கூடி ஆத்தியபொழுதில்.
தனித் தயாரிப்பின்
விருந்தோம்பலில்
தளும்பிய
கௌரவ ஆடையில்
அபி நயம் பிடித்தது
ஆவிகள் சுருளாக
உள் வார்த்தைகளை
உதிர்க்காமல்.
குடிசைகளின்
கசாயங்களில்
கோபுர கனவுகள்
மிதந்தது.
நெளிந்த குவளைக்குள்
நீராக சுடுமாறு.
திக்கெட்டும்
பறந்து வந்த
தேயிலை பொதிகளில்
கசப்பு வார்த்தைகள் தான்
கைரேகைகளாக
எப்பொழுதும்
கரைந்தது
நிறைவேறாத
நெடிய துயரை சொல்லிவிட.
மலட்டு மண்ணிற்குள்
செயற்கை
நுண்ணறிவால்
செய்த தேயிலை
விண்ணைத் தொடும்
விலையில்
ஏழை நாடுகளுக்கும்
வந்தது
உறிஞ்சிக் குடிப்பவர்களுக்காக.
நிறைந்த சொற்களோடு
நின்றிருக்கும்
யாவருக்கும்
வழிந்தபடிதான்
இருக்கிறது
வாழ்க்கை
நிம்மதிகளற்ற
கொதிப்பாக
பருக முடியாத
தேநீரென.
நேசித்தலை
நிரப்ப
தருணம் பார்க்கிறது
வாய்க்கும் குவளையில்
வாழ்க்கை
திகட்டாத
தேநீரை பருகுவதற்கு.