Share :
Nutpam -Podcast
Nutpam -Podcast
பெர்டோல்ட் பிரெக்ட்-இன் மூன்று கவிதைகள்
Loading
/

இளைய அலெக்சான்டர்
இந்தியாவை வெற்றி கொண்டார்.
அவர் தனியனாகவா வெற்றி கொண்டார்?
சீசர் கால் பிரதேசத்தை வென்றார்.
அவருடன்
ஒரு சமையல்காரர் கூடவா இருக்கவில்லை?
ஸ்பெயின் மன்னர் பிலிப்
தனது படையணிகள் வீழ்ந்தபோது
குலுங்கி அழுதார்
அவர் மட்டும்தானா அழுதார்?
இரண்டாவது பிரெடரிக்
ஏழாண்டு கால யுத்தத்தில் வென்றார்
அவரோடு பிறர் எவர் வென்றார்?
ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு வெற்றி
வெற்றி பெற்றவர்களுக்கு விருந்தை
யார் சமைத்துப் போட்டார்கள்?
ஒவ்வொரு பத்தாண்டிலும்
ஒரு மாபெரும் மனிதர் உருவாகிறார்
யார் இவற்றிற்கு விலை கொடுத்தார்?
பல்வேறு அறிக்கைகள்
பல்வேறு கேள்விகள்

லெனின் மறைந்தது என்பது
இலைகளிடம் மரம்
நான் போகிறேன்
என்று சொல்வது போல இருந்தது
தொழிற்சங்கங்களின்
கட்டிடத்தொகுதியின் முன் நிர்மாணிக்க
60 அடி உயரத்திற்கு
இலியிச்சின் சிலையை வடிக்கும் சிற்பியே
உங்களிடம்தான் சொல்கிறேன்
பல்வேறு மனிதர்கள் ஞாபகமூட்டியவாறு
அவர் அதை எதிர்கொண்டர் என நான் கேள்வியுற்றது நிச்சயம்தான்-
வறுமையின் சின்னமாக
லெனினது காலணியில் இருந்த
அந்தத் துளையை மறந்துவிடாதீர்கள்
மேற்கில், இங்கு வாழ்கிற பலரும்
அவர்களது காலணிகளில்
துளைகொண்டோர் அனைவரும் இதனால்
லெனின் தம்மில் ஒருவர்தான் என்பதை
இனம் காண்பார்கள்

இது பகுத்தறிவுக்கு உகந்தது
இதனை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்
அவ்வளவு எளிமையானது
நீங்கள் சுரண்டலாளன் இல்லை
உங்களால் புரிந்துகொள்ள முடியும்
உங்களுக்கு இது நல்லது
இதனை ஆழ்ந்து நோக்குங்கள்
முட்டாள்கள் இதனை முட்டாள்தனமானது என்பர்
அசிங்கமானவர்கள் இது அசிங்கம் என்பர்
இது அசிங்கத்துக்கும் முட்டாள்தனத்திற்கும் எதிரானது
சுரண்டலாளர்கள் இதனைக் குற்றம் என்பர்
நமக்குத் தெரியும்
இது அனைத்துக் குற்றங்களினதும் இறுதி
இது பைத்தியக்காரத்தனம் அல்ல பைத்தியக்காரத்தனத்தின் இறுதி
இது குழப்பநிலை அல்ல
ஒழுங்கு
செயல்முறையாகக் கடினமான
அத்தனை எளிதான விஷயம் இது


பெர்தோல்ட் பிரெக்ட் (Bertolt Brecht)

(பிறப்பு : 10-02- 1898 – இறப்பு 14-08-1956) ஒரு ஜெர்மனியக் கவிஞர், நாடகாசிரியர் மற்றும் நாடக இயக்குநர் ஆவார். இருபதாம் நூற்றாண்டு நாடகத்துறையில் குறிப்பிடத்தக்க பங்காற்றி உள்ள பிரெக்ட் நாடக வடிவாக்கலில் புதுமையை மேற்கொண்டு நிகழ்காவிய அரங்கு என்ற நாடக வகையை உருவாக்கினார். பிரெக்டும் அவரது மனைவி ஹெலன் வீகலும் இணைந்து இயக்கிய பெர்லினர் ஆன்செம்பிள் என்ற நாடக கம்பனி பல இடங்களுக்கும் பயணித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

கல்வியை முடித்துக் கொண்டு, ஜெர்மன் இராணுவ மருத்துவமனையில் சிலகாலம் பணிபுரிந்தார். முதல் உலகப் போர் முடிவுற்றதும் இராணுவப் பணியிலிருந்து விலகி பவேரியப் பொதுவுடைமைப் புரட்சியில் பங்கு கொண்டார். 1933-இல் ரீச்ஸ்டாக் என்ற இடத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பின், இவர் ஜெர்மனியை விட்டு வெளியேறினார், ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து, ஆகிய நாடுகளில் ஏழாண்டுகள் எளிய வாழ்க்கை மேற்கொண்டு சுற்றித் திரிந்தார். 1941-ஆம் ஆண்டு உருசியநாடு வழியாகப் பயணம் செய்து, அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியாவை அடைந்தார். உருசியாவில் பயணம் செய்த காலத்தில் அந்நாட்டில் ஏற்பட்டிருந்த திட்டமிட்ட முன்னேற்றங்களைக் கண்டு மிகவும் வியப்படைந்தார். தன்னை அறியாமல் இவர் உள்ளம் மார்க்சீயத்தின்பால் ஈர்க்கப்பட்டது. இவருடைய படைப்புக்களில் மார்க்சீயத்தின் தாக்கம் மிகுதியாகக் காணப்பட்டது.

பிரெக்ட்டின் நன்கறியப்பட்ட இன்னெரு முகம் கவிதை சார்ந்தது. அவருடைய நாடகங்களில் வரும் பாடல்கள் பலவும் கவித்துவம் மிக்கவை. அவற்றுக்கும் அப்பால் அவர் நூற்றுக்கணக்கான கவிதைகளையும் எழுதியுள்ளார். இடதுசாரி இலக்கியப் பரப்பில் பிரெக்ட்டின் கவிதைகளுக்கு முக்கியமானதொரு இடமுண்டு. கிழக்கு ஜெர்மன் அரசாங்கம் மக்கள் கிளர்ச்சி ஒன்றை தவறாக கையாண்ட போது, பிரெக்ட் அதை விமர்சிக்க தவறவில்லை. அவ்வாறு எழுதப்பட்ட ஒரு கவிதையைக் வைத்து பிரெக்ட்டுக்கும் ஸ்டாலினுக்கும் கடும் முரண்பாடு கற்பிக்கும் முயற்சிகள் இன்னமும் உள்ளன. பிரெக்ட் இறுதி வரை ஸ்டாலினினதும், சோவியத் ஒன்றியத்தினதும் நண்பனாகவே இருந்தார்.

நன்றி : விக்கிபீடியா


Listen on Spotify : 

Author :

யமுனா ராஜேந்திரன்
யமுனா ராஜேந்திரன்
”மார்க்சியமே மனித விடுதலையின் வற்றாத ஜீவ ஊற்று”
என நம்பும் யமுனா ராஜேந்திரன் கோவையில் பிறந்து தற்போது லண்டனில் வசிக்கிறார். கவிஞர், நாவலாசிரியர், அரசியல் கோட்பாட்டாளர், சினிமா விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் என பன்முக ஆளுமையாளராக திகழ்கிறார்.
இலக்கியம், கோட்பாடு, திரைப்படம், அரசியல், கவிதை, மொழியாக்கம் என இதுவரை 40க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகி இருக்கின்றன.
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
சிவரஞ்சனி

அற்புதமான கவிதைகள், அருமையான மொழிபெயர்ப்பு, அழகான வாசிப்பு, அட்டகாசமான பின்னணி இசை கோர்ப்பு. இவ்வாறு கவிதைகள் கேட்டவாறு வாசிக்கும் புது அனுபவம் தந்தமைக்கு நன்றி நுட்பம் !