cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 4 கட்டுரைகள் கவிதைச் சார்ந்தவைகள்

தமிழின் பின்நவீனக் கவிதைகளின் பொருளும் பற்றுக்கோள்களும்


தமிழின் பின்நவீன இலக்கிய வகைமைகளில் காணக்கூடிய கூறுகளாகக் கீழ்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

  • சுய உணர்வு கொண்டவை
  • மெட்டா புனைவுக்கூறுகள்
  • குத்துக்கோட்டு மொழி
  • வடிவமற்ற, கலாச்சார படிமங்களுக்கு எதிரான, மாயாஜால நடப்பியல் சார்ந்த படைப்பு
  • வாசகர்கள் உருவாக்கும் பொருள் கொண்ட படைப்பு

 

இந்தக் கூறுகளைக் கொண்டதோடு மேலும் மேலும் புதிய சோதனைகளை மேற்கொள்வதாக இருக்கும் படைப்புகளைப் பின்நவீன வகைமையில் சேர்க்கலாம்.

தமிழில் பின்நவீன கவிதையின் தொடக்கம் நகுலன் எழுதிய கவிதைகளிலிருந்தே தொடங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அது உறுதியான ஒரு வடிவத்தை பிரம்மராஜனின் கவிதைகளில் அடைந்தது. அதன் பின் பிரேதா-பிரேதன் கவிதைகளில் உயிர்ப்பித்திருந்தது. அதன் பின் அது போன்ற கவிதைகளை அதிகம் காண முடியவில்லை. யவனிகா ஸ்ரீராம் எழுதிய சில கவிதைகளில் இந்தப் பின்நவீனகவிதையின் துளிர்ப்பு இருந்தது. நேசமித்திரன், ஈழக்கவிஞரான ஹரி ராஜலட்சுமி போன்ற சிலரின் கவிதைகளிலும் பின்நவீனத்தின் கூறுகள் இருந்தன. மேலும் சிலரின் கவிதைகளிலும் பின்நவீனத்தின் நிழல் மட்டும் காணக் கிடைத்தது.

நவீனகவிதை காலத்தில் எழுதிய நகுலனிடமிருந்து பின்நவீனத்துவக் கூறுகள் இலக்கியத்தில் தொனிக்கத் தொடங்கின எனலாம். நகுலனின் பொருளற்ற சொற்சேகரங்கள் உருவாக்கிய கவிதை உலகம் வாசிப்பில் பெயர்த்தலைத் தந்தது. அதுவரையான வாசிப்பை மாற்றியமைத்தது.

நகுலன்தன்மிதப்பு

யார் தலையையோ சீவுகிற
மாதிரி அவன் பென்சிலைச்
சீவிக் கொண்டிருந்தான்
அவனைப்போல் பென்சிலும்
பேசாமல் இருந்தது – அது
கூடத்தவறு, அந்த நிலையில்
அவன் தன் கழுத்தை
இன்னும் இவனுக்குச்
சௌகரியமாகச் சாய்த்துக்
கொடுத்திருப்பான் – இந்த
நிலைமையையும் தன்னுடைய
வெளித்தெரியாத
ஆற்றலால் சமாளிக்க
முடியுமென்ற தன் மிதப்பில்

 

இந்தக் கவிதையில் பென்சில் சீவுவதும் தலையைச் சீவுவதும் ஒன்றாக்கப்பட்டிருக்கிறது. பென்சில் சீவுவது இயல் உலகில் நடந்தால் தலையை சீவுவது அகஉலகில் நடக்கிறது. இப்படி தலையைச் சீவும் கற்பனையையும் தன்மிதப்பால் சமாளித்துவிட முடியும் என்று ஒரு பாத்திரம் எண்ணுவது கவிதையாகியிருக்கிறது. பென்சிலாக தலை ஆகிவிடக்கூடாது என்ற மறுதளிப்பை வாசிப்பில் உருவாக்குகிறது இந்தக் கவிதை. இயல் உலகுக்கும் அக உலகுக்கும் மாறி மாறி  பயணிக்கிறது கவிதை. பென்சிலாக, ஒரு பாத்திரத்தை மாற்றிவிடும் பிறழ்ச்சி இந்தக் கவிதைக்குள் நிலவுகிறது. அது பின்நவீனத்துவத்தின் வகை மாதிரியாகத் தெரிகிறது. பின்நவீன சிந்தனையின் தொடக்கக்கால படைப்பாக்கத்தில் எழுந்த கவிதை போல் இது உள்ளது.

அதன் பின் பிரம்மராஜனின் கவிதைகள் பின் நவீனக்கூறுகள் கொண்டு கட்டமைக்கப்பட்ட கவிதைகளாகவே இருந்தன. அவருடைய மொழி ஆளுமை, ஞானத் தேடல், அறிவியல் முறைமைகள் கவிதைக்குள் தனி ஒரு வினையை நிகழ்த்துபவையாக உள்ளன. அவருடைய கவிதைகள் தமிழ் மொழியின் எல்லைகளை நீட்டித்தவை. கவிதையின் வாசிப்புக் கோட்பாட்டை மாற்றி அமைத்தவை. பன்முறை வாசிப்புக் கோருபவை. இவருடைய கவிதைகளிலிருந்து பின் நவீனத்துவக் கூறுகளை அடையாளப்படுத்த முடியும். தமிழில் கவிதையியிலின் பிரதிநிதித்துவங்களை முன்னெடுக்க பிரம்மராஜன் கவிதைகள் உதவுகின்றன.

 

பிரம்மராஜன் கவிதை 

அந்தரத்தில் மிதப்பதென்பதால்
அதைக் கூடென்றோ கோளென்றோ
சொல் தளராது வீடென்று கொள்
விண்ணில் விதைத்த விதை
மண்ணில் விழுந்து வீறிட்டாக வேண்டுமே
மலரும் தோட்டக்காரனும்
ஒருவரேயென்றாலும்
துரிதம் குறைவுறு தெளிப்பான்கள்
மறைக்காட்டுக்குச் சொல்வதுண்டாம்
எடை ஈரம் வடிந்து
ஈய வைக்கோல் காய்ந்து
சுழன்றடிக்கும்
தர்க்க நாணல்
ஒரு நாள்
ஒரே
நாளில்.

அந்தரத்தில் இருக்கும் ஒரு கூடு அல்லது வீடு அல்லது ஒரு கோள் அங்கிருந்து ஒரு விதை முளைப்பது மண்ணில்தான். அதைப் பராமரிக்கும் தோட்டக்காரன் சிவனின் மறைக்காட்டில் ஆற்றலுற்று மலராக முளைக்க முடிகிறது. இதில் இருக்கும் தர்க்கம், நாணல் போல் ஒரு நாள் சுழன்றடிக்கக்கூடும் என்று கவிதை ஓர் அறிவிப்பைச் செய்கிறது. முளைப்பதை, பிறப்பதை, முன்னெடுக்கும் தர்க்கம் மட்டும் நிகழ்ந்துவிட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் இயல்பும் அதற்குக் காரணகாரியங்களை நாடாது தூரப்படுத்தும் மறைபொருளும் இணையாக இருப்பதிலிருந்து பொருள் தருவிக்கப்படுகிறது. பறவையின் கூடும் பறவை விண்ணில் வீழ்த்திய விதையும் உருவாக்கும் மாயத்தின் மயக்கத்தை உட்செறித்த கவிதையாக இது உள்ளது. பிரம்மராஜனின் படைப்புலகம் நவீனகவிதையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட களத்திலிருந்து உருவானது. பிரம்மராஜனின் கவிதைகள் பன்முறை வாசிப்பு கோரிய கவிதைகளாக இருந்தன.

அடுத்து ரமேஷ் பிரேதனின் கவிதைகள் பின் நவீனகவிதைகளாக வடிக்கப்பட்ட கவிதைகளாக இருந்தன.

 

ரமேஷ் பிரேதன்சொல் என்றொரு சொல்

கண்ணாடிச் சில்லுகள் பதிக்கப்பட்டு
முடிவற்று நீளும் மதில் மீது
நேர்த்தியாக நடந்து செல்கிறது
பூனை என்ற ஒரு சொல்
ஆம் ஒரு சொல்
அதைக் கொஞ்சம் பின் தொடர்ந்தால்
அது ஒரு வாக்கியமாவதையும்
வாக்கியத்தின் நீண்ட அசைவில்
கண்ணாடிச் சில்லொன்று பொத்துவிட்டால்
மதிலின் பக்க வாட்டில் வழியும் குருதி
கவிதையாவதையும் வாசிக்கலாம்
அது பூனையைப் பற்றிய கவிதையாக இருக்குமென்று நீங்கள் எதிர்பார்த்தால்
ஏமாந்து போவீர்கள்.

இந்தக் கவிதையில் பூனையைச் சொல்லாகவும் சொல்லைப் பூனையாகவும் இடமாற்றம் செய்த வினை நிகழ்கிறது. மேலும் கவிதைசொல்லியின் இருப்பு கவிதைக்குள் வெளிப்படுகிறது. அது ஒரு மெட்டாஃபிக்ஷன் போன்ற தன்மையை இந்தக் கவிதைக்கு நல்குகிறது. நகுலன் கவிதையில் வெளிப்பட்ட கவிதைசொல்லிக்கும் இந்தக் கவிதையின் கவிதை சொல்லிக்கும் இருக்கும் வேறுபாடு பென்சில்/மனிதன் என்ற மயக்கம் இயல்பானதாக ஆக்க நகுலன் கவிதையின் கவிதைசொல்லி முனைகிறது. ரமேஷ் பிரேதனின் கவிதையில் பூனை/சொல் என்ற பிளவு வலிந்து அறிவிக்கப்பட்டு நடக்கிறது. சுய உணர்வுடன் நடத்தப்பட்டதாக அது காட்டிக் கொள்கிறது.

 

எஸ்.சண்முகம்நியான் சத்தம்

அதீத சப்தத் துளியின் அசைவில்

நொடியின் நுட்பமென

யாரற்ற இசையுள்

நிறங்கள் தாவும் கூட்டமாய்

டிசைன்கள் படர்ந்து

பூர்வீகம் தலைகீழான

பாதத்தில்

மறந்துபோன அப்பாக்களின்

ஞாபகமுள்ள அம்மாக்களின்

யூகமாகிய மகன்களின்

அங்கங்கள் தன் இடங்கள் மாறிய

இருப்பின் முகவியப்புள்

கால்கள் வளர்ந்து

கான்வாஸ் ஷூ நிரப்பிய

தலை நிமிரும்.

மனம் அலையும்

பிரதிபலிப்பில்

கட்டைவிரல் தலையில் முளைத்த

என் முந்தைய முகமோ

கார்ட்டூன்.

இந்தக் கவிதையின் பொருள் தளம் நவீனகவிதை அறிமுகப்படுத்தியிருந்த பொருளாம்சத்திலிருந்து வேறுபட்டிருப்பதைப் பார்க்கமுடிகிறது. இதில் குறுக்குவெட்டாகப் பார்த்தால் ஒரு குடும்பப் புகைப்படத்தின் வர்ணனை மறைமுகமாக வெளிப்படுவதைக் காணமுடிகிறது. அப்பாக்கள், அம்மாக்கள், மகன்கள் எல்லாமே பிரதிபலிப்பின் ஏதோ ஒரு சாயலில் யூகத்தின் காரணமாகத் தொடர்புற்று இருக்கிறார்கள். ஃப்ளாஷ் லைட் ஒலிக்கும் அந்தக் கணத்தின் இசையில் யாருமே இல்லாத ஒலியைப் போல இருக்கிறது. அதில் தன் முகத்தைத் தேடிய கவிதை சொல்லி, தன் முந்தைய இளைய முகமாக இருந்த ஒன்றைக் கார்ட்டூன் முகமாகத் தேர்ந்துவிட்டது. நவீனகவிதைக்கான பொருள்களம் முற்றிலும் அழிக்கப்பட்டு பின் நவீன தேர்வு கவிதைக்குள் நடந்திருக்கிறது. இந்தக் கவிதையிலும் ரமேஷ் பிரேதன் கவிதையிலும் நவீன மனிதனை அகற்றிவிட்டு அங்கு மனிதமற்ற பொருள் கோடலை மட்டும் இட்டு நிரப்பலாக இந்தக் கவிதைகள் மாறியுள்ளதைப் பார்க்க முடிகிறது. இது பின்நவீனத்துவத்தின் குணாம்சங்களாகக் கருதப்படவேண்டியவை.

யவனிகா ஸ்ரீராம்வாசனைத் திரவியம் தயாரிக்கும் வழிகள்

நண்பகல் பாறைசூட்டின் ஆவி
பாழுங்குளத்து பாசி
வேசியின் வெற்றிலைச்சாறு
குழந்தையின் எதுக்களித்த தாய்ப்பால்
ஒரு விரற்கடையளவு வெந்த சுண்ணாம்பு
அல்லது இரண்டு நத்தைக் கூடு
அதன் சமன் அளவில் கற்பூரமும்
ஒரு துண்டு பன்றிக்குடலும் சேர்ந்திடித்து
ஆவி வடிப்பு முறையில்
சுமார் பத்துதுளி காய்ச்சி எடுத்தால்
ஒரு துளிக்கு நாய்கள் வரும்
இரு துளிக்கு பறவைகள் வீட்டின் மேல் அமரும்
மூன்று துளிக்கு பெண் பருவத்திற்கு முன்பு ருதுவாவாள்
நான்கு துளிக்கு பொருந்தா காமம் கண்டவன்
தற்கொலை செய்துகொள்வான்
ஐந்து துளி அசங்கினால்
மேம்பாலத்தில் கார்கள் இடித்துக் கொள்ளும்
ஆறுதுளி சிந்திவிழ
பூமிக்கடியில் நீர் வற்றும்
ஏழுதுளி வெளிப்பட்டால்
வாசனைக்கு பட்டணத்து வீடுகளில்
ஆள் தங்கமுடியாது
எட்டுதுளியோ சுட்டுப் போட்டாலும் ஆகாது
நாட்டமைச்சன் மண்டையைப் போடுவான்
ஒன்பது துளிக்கு காற்று கிலியடைய
பெண்கள் ஆண்களைப் பிரிவார்கள்
பத்தையும் மொத்தமாகப் பயன்படுத்தினால்
ஊழி கொதித்து பிரளயம் வெடித்து
மூக்கு இல்லாத மனிதனும்
இறக்கை இல்லாத பறவையும்
வரப்பில்லாத நிலமும்
உழைப்பே இல்லாத உணவும்
களைப்பே இல்லாத போகமும்
விளையும்.

 

வாசனைத் திரவியம் தயாரிக்கும் பெரிய நிறுவனங்களை உதாசீனப்படுத்த ஒரு புதிய வழி முறையை இந்தக் கவிதைத் தேர்ந்திருக்கிறது. வாசனைத் திரவியங்கள் கூட வாழ்வின் போக்கை மாற்றச் செய்வதாக விளம்பரங்கள் ஏற்படுத்தும் மாயையை இந்தக் கவிதை பிறழ் உயர்வு நவிற்சியாகச் சொல்கிறது. பொருளாதார தாராளமயத்திற்குப் பின் வந்த நுகர்வுக் கலாச்சாரம் மனித வாழ்வை மாற்றியமைத்தது. அதன் பக்க விளைவாகத் தோன்றியவற்றை இந்த வகையிலான கவிதைகள் வழி உதாசீனப்படுத்துவது ஓர் எதிர்ப்புணர்வாக உள்ளது. தாராளமயத்தின் கலாச்சார உடைப்பை இந்த வகையில் எதிர்க்கிறது இந்தக் கவிதை.

நேசமித்திரன்லேசர் பொன்வண்டுகளும் மாரீசப் பெண்ணும்

நீர்ச்சிலந்தி கண்கள்
நெய்தபடி இருக்கிறது நீத்தார்
கடனொப்ப ஆகாயம் பார்த்த சொற்களுடன்
ஆதிக் குகையில் ஒளித்த சிக்கி முக்கி கல்
நடுக்கடலின் நங்கூரம்
லேசர் பொன்வண்டுகள் மொய்க்கும்
நடனத்தரையில்
சொட்டு உதிரம்….
துளிர் -சருகு குழப்பத்தில்
தேவாலயத்தின் பாதி எரிந்த மெழுகை ஏற்றுகிறது ஏதுமற்ற மற்றுமோர் கரத்தின்
பிரார்த்தனை
பேழைக்குள் உறங்குகிறது தைலமிட்ட உடல்
யுகங்கடந்து தீண்டும் கருந்துளை சூரியனுக்கு
தன் மத்தகம் சிதறச் சிதற கொலுசொலித்து
மயன் செய்த குளம்போக காத்திருக்கிறாள்
மாரீசப் பெண்.

 

மாரீசன் என்ற புராணப் பாத்திரத்தின் அடியொற்றி பெண்ணாக உருமாறுகிறது இங்கு. புராணங்களின் நவீன சொல்லாடலாக கவிதை மாறியிருக்கிறது. இந்தக் கவிதையில் புராணமும் வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய குறிப்பும் இணைந்து இருப்பதைக் காணமுடிகிறது. புடமிட்ட உடல்கள் அண்டங்களின் அழிவு வரை காத்திருப்பதைச் சொல்லும் ஒரு வரி. மாயன் என்ற ஆதி இனத்தின் குளத்தில் செவ்வாய் கிரகத்துப் பெண் இறங்குவது போல் ஒரு கற்பனையை இறுதியில் சொல்லிச் செல்கிறது கவிதை. புராணத்தின் கூறுகளை எடுத்து வேற்றுக்கிரகச் செய்திகளுக்குள் புனைந்து இந்தக் கவிதை எழுதப்பட்டிருக்கிறது. முன்னோர்களின் இறுதிச் சடங்கும் பூமிக்கு மீண்டும் வரப்போகும் இறை குமரனை தரிசிக்கக் காத்திருக்கும் பிரார்த்தனையும் இதில் அவநம்பிக்கைக் கொண்டவர்களாக வேற்றுக்கிரகவாசிகள் இருப்பார்கள் எனற கற்பனையும் கொண்டு உருவான நாடகீயத்தைப் பற்றி புனையப்பட்டிருக்கிறது இக்கவிதை. ஒரு மாயாஜால எதார்த்தம் போன்ற சித்திரத்தைத் தருகிறது இக்கவிதை.

ஹரி ராஜலெட்சுமி 'பத்தெட்டிக் ஃபாலஸீஸ் டியுரிங் எக்ஸைல்'

பொழுதேயாகாத பகல்

வீழ்ந்து வீழ்ந்து

இலையிலையாய் அழும்விலோ

என்றொரு கவிதை

சீச்சீயென்று

வெற்றிலையுள் சொல்மடித்துப்

பாக்கின்றி மென்று

துப்புவேன் தமிழென்று சொல்லி

சிவப்பாய்th/சிகப்பாய்th

தோன்றி வழியும்-பின்

உறையும்

தாஸ்தாயெவ்ஸ்கியின் பனியிலோ

பாமுக்கின் பனியிலோ

காலெற்ற ஆளின்றி.

 

இந்தக் கவிதை ரமேஷ் பிரேதனின் கவிதையின் தன்மையை ஒத்திருக்கிறது. சொற்களைப் படைப்பாக்கம் செய்வதை மெட்டாஃபிக்ஷன் வகையில் கூறுகிறது இக்கவிதை. மேலும் நாடு கடத்தப்பட்டவர்களின் படைப்பாக்கங்களின் ஒற்றுமையை இணைக்க முனைகிறது கவிதை. பாமுக்கின் பனி நாவலிலும் தாஸ்தாயெஸ்விகியின் பனியிலும் உறைந்திருக்கும் துயரத்தை உள்வாங்கி இந்தக் கவிதையை வாசித்தால் தமிழின் துயரும் சிவப்பாய் அல்லது சிகப்பாய் உமிழப்படும். அது துயரத்தின் குருதி கொண்ட நிறமாய் எல்லா துயரங்களுக்கும் பொதுவானதாய் சிவப்பானதாய் இருக்கும் என்கிறது கவிதை.

 

றாம் சந்தோஷ் 'தலைவன் தலைவி செய்யத் தேவையான பொருட்கள்'

ஆமைகள் – 2 ,

கெளிற்று மீன்கள் – 10 (நல்ல சூல்கொண்டவை),

இரண்டு குன்றுகளை உடைய மலை – 1,

தாமரை மலர்கள் – 2 , வைராங்குசம் – 1,

புலிவாய் – 1 மற்றும் குடைகவிழ் மயிர்கள் –

தேவையான அளவு – என்பன முறையே

கால்கள், விரல்கள், மார்பு, கண், மூக்கு,

வாய், மாமுடி எனும் உறுப்புகளாகும் வரை

கடுஞ்சூட்டில் வறுக்கப்பட்டவன் மயிர்த் தொடை தலைவன்

 

மீண்டும் தொடங்குகிறான் தலைவி தேடும் தன் பயணத்தை

அங்கொரு தலைவியும் அவனுக்காய் தாளிக்கப்படுகிறாள்

ஆம்பல் பூக்கள் மற்றும் இளமுலைகளுடன்

ஒருபிடி அளவு இடை

முக்கியமாய் அந்த விரியோனி இட்டு.

(சுவை கூட்டலுக்காக)

(திருத்தக்கத் தேவனுக்கும் – ஜி.யூ. போப்பிற்கும்)

 

பகடிகளின் மூலம் புராணங்களை மறுபடைப்பாக்கம் செய்வது பின்நவீனக் கூறுகளில் ஒன்று. அதை இந்தக் கவிதையும் பின்பற்றுகிறது. பக்தி இலக்கியங்கள் எழுதிய திருத்தக்கத் தேவருக்கும் பக்தியைப் பரப்ப வந்து மொழிபெயர்ப்பாளராக மாறிய ஜி.யு.போப்பிற்கும் இந்தக் கவிதை சமர்ப்பணமாகிறது. பக்தியின் மூலமாக மனிதர்களைப் படைத்தல் சாத்தியம் என்றால் விரும்பிய வகையிலான மனித உருக்களைப் படைத்தளிப்பதற்காக இந்தக் கவிதை புராணத்தின் ஆசிரியருக்கும் பக்தியின் மொழிபெயர்ப்பாளருக்கும் சமர்ப்பிக்கப்படுகிறது. உச்சபட்ச ஆண்,பெண் உடல், வீரம் போன்ற வர்ணனைகளைப் பகடி செய்ய வலிந்து கொள்ளப்பட்ட படைப்பாக்கம் போன்ற கற்பனையை இந்தக் கவிதை தருகிறது.

தமிழின் பின்நவீன கவிதைகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே எழுதப்படுகின்றன. அவற்றின் பொருளாம்சம் மெட்டாஃபிக்ஷன் வகைமையைச் சார்ந்தவையாக அதிகம் இருக்கின்றன. பகடி செய்வதும் இணையத்தின் தொழில்நுட்பத்தை நவீன மதிப்புகளில் ஏற்றிக் கூறுவதும் நவீனத்தின் கூறுகள் மறைந்தது பற்றிய குறைக் கொண்டிருப்பவையாக இருப்பதும் என பின்நவீனகவிதைகளின் பற்றுக்கோள்கள் மாறிக்கொண்டே உள்ளன.


 

About the author

முபீன் சாதிகா

முபீன் சாதிகா

தமிழ் இலக்கியத்தில் முதுகலையும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். தற்போது முனைவர் பட்டத்திற்கான ஆய்வை முடித்திருக்கிறார்.

'அன்பின் ஆறாமொழி,' மற்றும் 'உளம் எனும் குமிழி' ஆகிய இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. '
உறையும் மாயக் கனவு' என்ற தலைப்பில் இவரது நேர்காணல் நூலாக வந்திருக்கிறது.
இவருடைய படைப்புலகம் பற்றிய நூலும் வெளிவந்திருக்கிறது. 40 தமிழ்ப் பெண் கவிஞர்களின் படைப்புலகம் குறித்து இவர் தொகுத்த நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழ் இலக்கிய இதழ்களில் வெளிவந்த இவரது கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப் பெற்று நூலாக வெளிவந்திருகிறது. சமீபத்தில் ‘நூறு புராணங்களின் வாசல்” என்ற இரு குறுங்கதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

இவர் ஆங்கிலத்திலும் கவிதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகளும் கட்டுரைகளும் பல தேசிய சர்வதேச இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. உலக பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பில் இவருடைய ஆங்கிலக் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன. ஆங்கிலத் தொகுப்பு ஒன்றில் இவரது கட்டுரை இடம்பெற்றிருக்கிறது.

பல்வேறு தேசிய சர்வதேச மாநாடுகளில் பங்கேற்று பெண்ணியம் குறித்தும் பின்நவீனத்துவம் குறித்தும் கட்டுரை வாசித்திருக்கிறார். தமிழகத்திலும் நாட்டின் பல இடங்களிலும் குறிப்பாக போபால், டெல்லி போன்ற இடங்களில் சாகித்ய அகாடமி நடத்திய பல்வேறு கட்டுரை வாசிப்புகளிலும் கவிதை வாசிப்புகளிலும் பங்கேற்றிருக்கிறார்.

மலேஷிய கவிஞர்களுடன் கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக் கழகத்திலும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திலும் பங்கேற்றிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் சாகித்ய அகாடமிக்காவும் பிற பதிப்பகங்களுக்காகவும் மொழிபெயர்க்கிறார்.

தொலைக்காட்சி சேனல்களில் தயாரிப்பாளராகவும் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். செய்தி வாசிப்புக்கான பயிற்சிப் பள்ளி நடத்துகிறார்.ஓவியங்களை வரைவதில் ஆர்வம் உள்ளது. நூல் அட்டைப் படங்களுக்கான ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

குறியியல் குறித்து இவர் மொழிபெயர்த்த நூல் விரைவில் வெளி வருகிறது. இலக்கிய வீதியின் அன்னம் விருதைப் பெற்றிருக்கிறார். 2019ஆம் ஆண்டிற்கான ’மேலும்’ விமர்சன விருதைப் பெற்றிருக்கிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website