cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 25 கட்டுரைகள்

வண்ணக்கலவைத் தொட்டியில் அலையும் குதூகலம்


லக்கிய வாசிப்பு ஒவ்வொரு வடிவத்திற்கும் வேறானது. நாவலை வாசிப்பதுபோலவே நாடகத்தை வாசித்துவிட முடியாது.   நாவலையும் நாடகத்தையும் விரும்பி வாசிக்கும் ஒருவருக்கு சிறுகதைகளும் கவிதைகளும் விருப்பமில்லாமல் போகவும் வாய்ப்புண்டு. சிறுகதைகளுக்குள் நுழைந்து மனம் ஒப்பும் ஒன்றைக் கைப்பற்றிக் கதையை ரசித்து விடும் ஒருவர் கவிதையின் வாசலைக் கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கவும் கூடும். 

இலக்கிய வடிவங்கள் ஒவ்வொன்றுக்குமான தன்மைகளை உணர்ந்து எழுதுபவர்களைப் போல, அதனதன் இயல்பறிந்து வாசிக்கும் வாசிப்பை நோக்கி நகரும்போது வாசிப்புத் திளைப்பு உருவாகும். ஒவ்வொன்றையும் கொண்டாடத் தூண்டும்; தனதாக்கிக் கொள்ள நினைக்கும்; விலக்கிவைத்து விவாதித்து முரண்படவும் செய்யும். இந்த நிலைக்கு நகரும்போது இன்னொரு ஆபத்தும் உண்டாகும். அந்த ஆபத்து வாசகரை, விமரிசகராக மாற்றி வைத்து வேடிக்கை பார்க்கும். அந்த ஆபத்தைச் சந்திக்காமல் தவிர்ப்பதற்காக வாசிக்கப்படும் வாசிப்பு ஒவ்வொரு இலக்கியப்பனுவலின் வடிவத்திற்குள்ளேயே நின்றுவிட முயற்சி செய்யும். கவிதைகளை வாசிக்கும் பலரும் இப்படித்தான் வாசிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு கவிதையின் கவிதையியல் முக்கியமல்ல; அந்தக் கவியின் ஒவ்வொரு கவிதையும் உண்டாக்கும் தனித்தனியான அனுபவமே முக்கியம்.

 இன்பாவின் இந்தத்  தொகுப்பு – கடல் நாகங்கள் பொன்னி – அப்படி மட்டும் வாசித்து விட்டுப் போகாமல் வாசிப்பவர்களுக்கு அதிகப்படியான வேலையைத் தரும் விதமாக இருக்கிறது. அதனைச் செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தத் தொகுப்புக்குள்   நான்கு விதமான கவிதைகள் உள்ளன என்பதை அவரே கண்டறிந்து  வகைப்படுத்தித் தந்துள்ளார்.   “மந்தாரை மணக்கும் நிலம், ஈஸ்ட்ரோஜனைத் தின்னும் நாகங்கள், முள் கரண்டியில் புரளும் விரல்கள், கடல் கடக்கும் சொற்கள்” எனத்தலைப்பிட்டுப் பிரிக்கப்பட்டுள்ள இவ்வகைப்பாடு வாசிப்பவர்களுக்கு உதவும் நோக்கம் கொண்டது. 

தனிமனிதத் தன்னிலையின் இருப்பும் அலைதலும் சார்ந்து நவீனத்துவக் கவிதைகளாக வெளிப்படும் இன்பாவின் கவிதைகள் இடம்பெறும் காலம் மற்றும் நிலவெளி அடையாளங்களாலும், கருப்பொருள் விவரிப்புகளாலும் சங்கச் செவ்வியல் கவிதைகளாகவும் வெளிப்படுகின்றன. அதன் காரணமாகவே இந்தப் பிரிப்புச் செயல் நடந்திருக்கிறது என நினைக்கிறேன். 

நான்கு உட்தலைப்புகளோடு பிரிக்கப்பட்டுள்ள இத்தொகுப்புக்குள், வாழிடச்சூழலின் கருப்பொருள்களோடு விரிக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பாக மந்தாரை மணக்கும் நிலமும்,காதலுக்கும் காமத்திற்குமான அந்தரங்கக் குறியீடாக நிற்கும் ஈஸ்ட்ரோஜனைத் தின்னும் நாகங்களையும் வாசிக்கும்போது தனிமனித தன்னிலையின் அலைதலை வாசிக்கலாம்.  இவ்விரண்டும் முதன்மையாக அகம் சார்ந்த கவிதைகள். மற்ற இரண்டும் அதன் எதிரிணையாகப் புறநிலைக் கவிதைகளாக வாசிக்கத் தூண்டுபவை. விரிவான உணவுப்பண்பாட்டையும், புலம்பெயர் அலைவுகளின் சத்தங்களையும் பிரிவின் ஆற்றாமையை மௌனங்களாக்கியிருக்கும் தன்மையையும் வாசிக்க நேர்கிறது.   அதே நேரம் கறாரான பிரிப்பிலிருந்து விலகிய திணைமயக்கக் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.  வகைப்படுத்தித் தருவதின் மூலம் வாசிப்பவர்களுக்கு உதவும் இந்தத் தன்மையை இதற்கு முந்திய தொகுப்பான ‘லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள்’ கொண்டிருந்தன என்பதும் நினைவில் இருக்கிறது. 

 லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள், தொகுப்பிலிருந்த கவிதைகளை வாசிக்கும்போது ஒரே மூச்சில் வாசிக்காமல் – வாசிக்க முடியாமல் தவித்திருக்கிறேன். அதன் பின்பு கொஞ்சம் நிதானத்தோடு, அவரது கவிதையியலை உள்வாங்கிக் கொண்டு வாசித்த பின்பே முழுமையாக அவற்றை ரசிக்க முடிந்தது. அதே வாசிப்புத்தடைகளை, இத்தொகுப்பின் கவிதைகள் உருவாக்கவில்லை. ஆனால் புதிதாக நுழைபவர்கள் கொஞ்சம் மெனக்கெடத்தான் வேண்டும். அந்த மெனக்கெடல்கள் அவர்கள் கூடுதல் திளைப்பைப் பெறுவதற்கான மெனக்கெடல்கள் என்பதை உள்வாங்கினால் போதுமானது.   

 *****

 நிமிடச் சேலையைப் பிடித்திழுக்கின்றன செந்நிலத்துக் கிளிகள் –இப்படியொரு வரியோடு முடிந்த ஒரு கவிதையை வாசித்தவுடன், அடுத்த கவிதைக்கு உடனடியாக    நகர முடியவில்லை. செந்நிலம், கிளிகள் என்பன காட்சிப்படிமங்களாக முன்னே வந்து விரிந்தன. சிவப்பு மூக்கோடு பசுங்கிளியொன்று தலையசைக்கும் காட்சிகளை வெவ்வேறு வெளிகளில் பார்த்ததின் விளைவாக அந்தக் காட்சி, கிளியோடும் மரங்களோடும் செடிகளோடும் தனியாகவும் இணையோடும், இன்னும் சில கிளிகளோடும் என நகர்ந்துகொண்டே இருந்தன. அதே நேரம், நிமிடச் சேலை என்ற சொற்கூட்டம், காட்சிப்படிமமாக மாற மறுத்து நின்றது. திரும்பவும் தலைப்பை நோக்கிச் சென்றபோது, ‘செந்நிலத்தின் பூங்கிளிகள்’ என்ற சொற்கூட்டம் அதே காட்சிப் படிமத்தை உருவாக்கி நகர்த்தியது. தொடர்ந்து அந்தக் கவிதையை வரிவரியாக வாசித்து நகரும்போது, காட்சிப்படிமங்கள் தொலைந்து,  எண்ணப்படிமத்தை நோக்கி நகர்த்தி, ‘நிமிடச்சேலை’யாக மாறிய மாயம் நடந்தது.   அந்த மாயத்தை இப்போது நீங்களும் வாசித்துப் பார்க்கலாம்:

  • செந்நிலத்தின் பூங்கிளிகள்

 ஒரு வாரமாகக் காய்ந்துக்கிடந்த

செடிகளின் இலை நகங்களுக்கு

நீர்ச்சாயம் பூசுகிறது மழை

பொந்துக்குள் நுழைந்த கிளிக்குஞ்சுகளாய்

அதிகாலைத் தொடரியில்

முகக்கூட்டங்கள் நிரம்பி வழிகின்றன

எல்லோரும் வேகவேகமாக நடக்கிறார்கள்

எல்லோரும் கூந்தலைப் படியப் படிய வாரியிருக்கிறார்கள்

எல்லோரிடமும் வாசனை திரவிய  நறுமணம் வீசுகிறது

எல்லோரும் தேய்த்த ஆடையை அணிந்திருக்கிறார்கள்

எல்லோருடைய இதழ்களும் சிவந்திருக்கின்றன

எல்லோருடைய கைகளிலும் திறன்பேசிகள் இருக்கின்றன

எல்லோருடைய காதுகளும் அடைபட்டிருக்கின்றன

எல்லோருடைய தலைகளும் குனிந்திருக்கின்றன

நிமிடச் சேலையைப் பிடித்திழுக்கின்றன செந்நிலத்துக் கிளிகள்

இப்படியான மாயத்தைச் செய்யும் கவிதைச் சொற்கள் தொகுப்பு முழுவதும் பரவிக் கிடைக்கின்றன. 

 “பால்வெளியாவையும் என் தங்கக் கண்களால் வருடுகிறேன்”, 

 “சிற்பங்களின் உளியோசையும் சலங்கைகளும்” , 

 “ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு முகமாய் உருளுகிறது”

 “சாலையில் மழையின் கண்ணாடி நரம்புகள்”, 

 “காத்திருந்து கிடைக்கும்,

 “கலவிக்குப்பின், மூளைக்கும் இதயத்திற்கும் பெரும் சண்டை”. 

இவை சில தான்.  இந்தக் கவிதைச் சொற்களை வாசித்து, யோசித்து, அசைபோட்டுப் பார்த்தபோது தமிழின் முதன்மையான நவீனத்துவக்  கவிகளின் அழகியல் வெளிப்பாடொன்று நினைவுக்கு வந்தது .

எப்போதும் கவிதைக்குள் தன்னை – தன்னிலையைச் சொல்லுமிடத்தில் வைத்துக் கொண்டு முன்னே இருக்கும் எல்லாவற்றையும் காட்சிப்பொருளாக்குவது முதன்மையான கவிகளின் ஆக்கமுறைமை அல்லது வெளிப்பாட்டுப் பாங்கு.   படிமங்களை உருவாக்கி அதன் பரிமாணங்களில் வாசகர்களை நிலை நிறுத்தும் கவிகள் அதனையே நவீனக் கவிதையின் அழகியலாக நினைக்கிறார்கள். எனது வாசிப்புக் காலத்தில் தேவதச்சனின் பெரும்பாலான கவிதைகள், இத்தகைய கவிதைப்பாங்குடன் வெளிப்பட்டிருப்பதைக் கவனித்திருக்கிறேன். அவரது கவிதைகளில் உயிரற்றனவும் இடம்பெறுவதுண்டு. மனிதர்களும் இடம்பெறுவார்கள்; மனிதர்கள் அல்லாத உயிரினங்களும் இடம்பெறுவதுண்டு.

முதன்மையாக அவர் தனது சொற்களால் செய்து காட்டுவது காட்சியின் வரைபடம். வரையப்படும் அக்காட்சிக்குள் நிலையாக நின்று கொண்டிருக்கும் இருப்பைவிடவும், அசைவுகளோடு கூடிய – நகர்வுத்தன்மை கொண்ட பொருட்களை நிரப்பிக் காட்டுவார். அவ்வாறு நிரப்பப்பட்ட காட்சியை விரிப்பதின் நோக்கம், அதன் மீதான கவிதைசொல்லியின் பார்வைக்கோணத்தை – மனச்சாய்வைச் சொல்லி விட்டு ஒதுங்கிக் கொள்வதாக இருக்கும். ஒதுங்கிக் கொண்டபின் எழும் உணர்வலைகள் கவியிடமிருந்தும், கவியால் உருவாக்கப்பட்ட கவிதை சொல்லியிடமிருந்தும் விலகிக் கவிதையை வாசிப்பவர்களின் உரிமையாக்கி விடும். அவர்கள் அதுபோன்ற காட்சிச் சித்திரத்தில் – சலனக்காட்சிகளில் தங்களின் இடம் என்னவாக இருந்தது என்பதை நினைத்துக் கொள்வார்கள். தேவதச்சன், கலாப்பிரியா, போன்றவர்களிடம் வெளிப்படும் இந்தத் தன்மையைத் தனது கவிதைகளில் உருவாக்கி அந்த வரிசையில் நிற்கிறார் கவி இன்பா. ஆனால் அவர்களிடமிருந்து இன்பா  வேறுபடவும்  நினைத்துள்ளார். அவர்களைப் போல வாசிப்பவர்களுக்கு இடமளித்து விலகாமல்,  தானே   விவரித்துச் சொல்ல வேண்டும் என்பது அவரது கவிதையியலாக இருக்கிறது. அவர்கள் சொல்லாமல் விட்டநிலைக்கு மாறாக இவர் சொல்லிச் சொல்லி நகர்த்துகிறார்.   மழையோடு நடத்தல் எனும் தலைப்பிட்டு எழுதப்பட்டுள்ள இந்தக் கவிதையை வாசித்துப்பாருங்கள். சொல்லாமல் நிறுத்திக்கொள்ள வேண்டுமா? சொல்லிச் சொல்லி நகர்த்த வேண்டுமா? என்பதை உங்களுக்கே விட்டுவிடுகிறேன்.

 

கரும்பஞ்சு மேகங்களுக்கிடையில்

வானில் செருகிய ஐபோன் ஆப்பிளைப் போல்

பாதி கடிக்கப்பட்டு கிடக்கிறது நிலவு

பெருந்தூறல் தொடங்கியது

எல்லோரும் பயந்து ஓடுகிறார்கள்

சாலையோரம் கிடந்த

தகரக் குவளையில் மீதமிருந்த

கோக்கோ கோலாவை அங்கோர்

உறிஞ்சு குழல் போட்டுக்

குடித்துக்கொண்டிருந்தது மழை

மிதிவண்டிகள் சிணுங்கிக் கொண்டே கடந்தன

இலைகள் நீரில் மிதக்கின்றன

பெருங்கற்கள் மூழ்கின

மழை விட்டபாடில்லை

எந்தப் படகுக் காரும் அருகில் வந்து நிற்கவில்லை

ஞாழல் மலர் மலர்ந்து சிரிக்க

என் இதழ்களில் நீர் வழிந்தோடுகிறது

மழையோடு நடக்கிறேன்

இரண்டு கைகளையும் விரித்து

மழைக் கதிர்களைக்

கொத்தாக நெருக்கிப் பிடித்து

ஒரு பக்க நுனிகளை இறுக்கி முடிந்து

சாலையைக் கூட்டிக்கொண்டே நடக்கிறேன்

மழையை மிதித்துவிடாமல்

 *****

தமிழ்ச் செவ்வியல் கவிதைகள் அது அகமாயினும், புறமாயினும் தனிக்கவிதைகளாக வாசிக்கப்படும்போது கிடைக்கும் காட்சிப்படிமங்களும், உணர்வெழுச்சிகளும் தனித்துவமானவை. அதன் வழியாக எழுதிய கவிகளை விதந்துபேசும் வாய்ப்பை உருவாக்குபவை. அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவு, இற்றைத்திங்கள் இவ்வெண்ணிலவு என உருவாகும் காட்சிப்படிமத்தை இங்கே நினைத்துக்கொண்டு, அதற்குள் அலையும் கையறுநிலைத் தன்மையை வாசிக்கும் அனுபவத்தை நினைத்துக்கொண்டால் போதுமானது. இந்த உணர்வெழுச்சியும் உருவகச் சித்திரங்களும் அகத்தொகையாகவும் புறத்தொகையாகவும் வாசிக்கும்போது கிடைக்காது. அதற்குப் பதிலாக அந்த வாசிப்பு ஆவண வாசிப்பாக நகரும் நிலையை ஒவ்வொருவரும் உணர்வார்கள்; நான் உணர்ந்திருக்கிறேன். 

இதிலிருந்து மாறுபட்ட வாசிப்பைத் தேடி, ஒரே கவி எழுதிய அகக்கவிதைகளையும் புறக்கவிதைகளையும் தனியாகத் தொகுத்து வைத்து வாசித்திருக்கிறேன். பெண்கவிகளில் ஔவை, மாறோக்கத்து நப்பசலை, ஒக்கூர் மாசாத்தி, காக்கைபாடினி நச்செள்ளை, அள்ளூர் நன்முல்லை போன்றவர்களையும் ஆண்கவிகளில் கபிலர்,   மாங்குடி மருதன், பெருங்கடுங்கோ, கயமன், கோவூர்கிழார்  போன்றவர்களின் கவிதைகளைத் தொகுத்து வைத்து வாசித்துப் பார்த்ததுண்டு. அந்த வாசிப்பு, சங்கச் செவ்வியல் கவிகளுள் தனித்துவமான கவிதையியலோடு இயங்கிய கவிகளை அடையாளம் காணும் நோக்கத்தோடு வாசிக்கப்பட்ட வாசிப்பாகும். இப்படியான வாசிப்புகள் நவீனக் கவிதைகளுக்கும் தேவை.   அந்த வாசிப்பு அவர்களின் கவிதைப் பார்வையையும் கவிதை ஆக்க முறைமையையும் கண்டுசொல்ல உதவும். தொகையாகவோ, தனியொரு கவியின் தொகுப்பாகவோ வாசிக்கும்போது உண்டாக்கும் திகட்டலிலிருந்து விடுபட இத்தகைய வாசிப்புக்குள் உதவும். அப்படியொரு வாசிப்பை நோக்கி நகரும்போது நகர்த்தும்போது பட்டியலிடப்படும் முதன்மையான கவிகளுள் ஒருவராக இன்பாவும் இருப்பார் என்பதை இன்பாவின் கவிதைகள் உறுதி செய்கின்றன.

தனிமனித அகத்துக்குள் பயணம் செய்து நமது காலத்தின் இருப்பின் மீதான கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கும் கவிதைகளுக்கு இணையாகவே ஆவணத்தன்மை கொண்ட, வாழிடப் பண்பாட்டு மோதல்களை மேலெழுப்பிக் கொண்டுவரும் கவிதைகளும் இன்பாவால் எழுதப்பட்டுள்ளன. முள் கரண்டியில் புரளும் விரல்கள் எனத் தொகுத்துத்தரப்பட்டுள்ள பகுதியில் ஆவணத்தன்மையைச் சுற்றுலாப் பயணியின் குதூகலத்தோடு ஒலிக்கலவையாக மாற்றித்தந்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து இன்னொரு நாட்டில் – பல்மொழி, பல்சமய, பல்பண்பாட்டுச் சூழலில் – சிங்கப்பூர் போன்ற பொருளியல் வளர்ச்சி அடைந்த சூழலில் இருக்க நேரும்போது உண்டாக்கும் அலைவு மனத்தை அந்தக் கவிதைகள் முன்வைக்கின்றன. 

பத்துக் கபாலங்களுடன்

என் கருவறையை முட்டி முட்டி

மோதி உடைக்கிறாள் காளி

என எழுதி நகரும் மனமும்

பழக்கமில்லாத நீர்க்குமிழியும்

பழகிய நீர்க்குமிழியும்

புதிய இடத்திற்குப் பறக்கின்றன

ஒவ்வொரு நிமிடமும் அடுத்த நிமிடத்தை

ஆக்கிரமித்துக் கிடக்கிறது

எனத்தவிக்கும் மனமும் சொல்ல விரும்புவன அதைத்தான்.

முகநூலில் தெரிவிக்கும் வாழ்த்துகள்

உப்பே போடாமல் சமைத்த

உணவைப் போலிருக்கின்றன

 

 பட்டும்படாமலும் அனுப்பும் வாழ்த்து

 வாசற்படியிலேயே அமர்ந்திருக்கின்றது

 இன்னும் சில வாழ்த்துகள்

 நடுத்தெருவிலேயே நிற்கின்றன

என அலுத்துக்கொள்ளும் மனதிற்குள் ஒரு புலம்பெயர்ந்த மனம் மட்டுமே இருப்பதாகவும் சொல்லமுடியாது.   சமகால வாழ்வை முழுச்சுற்றாகப் பார்த்துச் சொல்லும் கவிமனம் இருக்கிறது. நூறுக்கும் குறைவான கவிதைகளே இருக்கும் இத்தொகுப்பை வாசித்து முடிக்கும்போது சில நூறு கவிதைக்கணங்களை வாசித்த அனுபவங்கள் கிடைக்கின்றன என்பதைச் சொல்லி முடிக்கிறேன்.


v

குறிப்பு :
மேற்கண்ட பதிவு  கவிஞர் இன்பாவின்“கடல் நாகங்கள் பொன்னி” கவிதைத் தொகுப்பிற்கு பேராசிரியர் அ.ராமசாமி எழுதிய அணிந்துரை.

வெளியீடு : சால்ட் பதிப்பகம் [/su_service]

About the author

அ.ராமசாமி

அ.ராமசாமி

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியஅ.ராமசாமி; கல்விப்புலம் சார்ந்தவராக மட்டுமல்லாமல் நிகழ்காலத் தமிழ் இலக்கியம், அரசியல், கலை, பண்பாடு சார்ந்த சிற்றிதழ்களில் 1983 தொடங்கிக் கட்டுரைகள் எழுதி வருவதன் மூலம் திறனாய்வாளராகவும் அறியப்படுபவர்.
சிங்கப்பூர் முதலான நாடுகளுக்கும் சுற்றுலாப் பயணியாக நார்வே, டென்மார்க், ஆஸ்திரியா, ஹங்கேரி போன்ற நாடுகளுக்கும் பயணம் செய்துள்ளார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website