cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 26 கட்டுரைகள்

கடவுளின் இருப்பை அனுபவிக்கிற பரவசம்

Getting your Trinity Audio player ready...

ழுதுதல் என்பதே புதுமை செயல்பாடுதான்.

தமிழ் போன்ற கனிந்த மொழியில் எழுதுவோருக்குப் புதுமை செய்யும் வேட்கை அதிகம். அது வள்ளுவன் தொடங்கி பூவிதழ் உமேஷ் வரையான தமிழ்க் கவிகளுக்கு இருப்பதில் ஆச்சரியமில்லை. சமீபகாலமாக நான் படித்த கவிகளுள் அதிகம் புதுமை செய்பவராக பூவிதழ் உமேஷ் விளங்குகிறார்.

சமீபத்தில் தமிழில் aphorism வகையில் அமைந்த கவிதைகளை பூவிதழ் உமேஷ் முயன்றிருக்கிறார். ஓர் உண்மையை அறிவார்ந்த முறையில் வெளிப்படுத்தும் சிறு தொடரையே aphorism என்கிறோம். மருத்துவ உண்மைகளைச் சுருக்கமாக எழுதிய ஹிப்போகிரேட்டஸின் வடிவமாக அஃபோரிசத்தை இலக்கிய விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். கிட்டத்தட்ட இதே காலக்கட்டதில் எழுதப்பட்ட திருக்குறளையும் aphorism வகைமையில் சேர்க்கலாம்.

aphorism என்பதை பழமொழி, பொன்மொழி, ஞானமொழி, மணிமொழி இப்படி பல்வேறு வகைகளில் சொல்லலாம். அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தும் கலையிது. கனிந்த ஞானத்திலிருந்து விளையும் கவிவகை.

பூவிதழ் உமேஷூக்கு இளம் வயதில் இந்த ஞானம் சித்தித்திருக்கிறது. சங்கம் மருவிய காலத்தில் எழுதப்பட்டவை பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள். அவற்றுள் ஒன்று பழமொழி நானூறு. எழுதியவர் முன்றுரை அரையனார். சமண முனிவர். வள்ளுவர் சமயம் கடந்தவர். வள்ளுவத்தில் பௌத்தம் சமணம் விரவிக்கிடக்கிறது. உமேஷும் வள்ளுவரின், முன்றுரை அரையனின் தொடர்ச்சிதான்.

aphorism போலவே மேலும் சில வடிவங்கள் இருக்கின்றன. Adage, Proverb, Idiom, Quote, epigram போன்றவை அவை. இவை aphorism போன்ற மயக்கத்தை உருவாக்குபவை. நாட்டார் வழக்கில் கையாளப்படும் பழமொழிகளையொத்தவை Adage, Proverb போன்ற வடிவங்கள் . Idiom மரபுத்தொடர். நேரடியாக அர்த்தத்தை வழங்காமல் தொடர்புடைய வேறு பொருளை வழங்குபவை. உதாரணமாக kill two birds with one stone என்கிற Idiom ஒரே கல்லில் இரண்டு பறவைகளைக் கொல்வதைக் குறிப்பதல்ல. ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை முடிப்பது! epigram என்பதோ ஒரு வேடிக்கையான திருப்பம். ஒரு நையாண்டி அறிக்கை. கிண்டல் அல்லது நையாண்டி. ஒரு அஃபோரிசம் எபிகிராமை உள்ளடக்கியிருக்கலாம். அதேவேளை எபிகிராம், அஃபோரிசம் ஆகிவிடாது.

ஆகவேதான் Viking Book of Aphorisms என்றொரு நூலில் W.H ஆடன் அஃபோரிசத்தை ‘பிரபுத்துவ எழுத்து வகைமை’ என்கிறார். மேற்கண்டவற்றிற்கான இடைவெளிகளை விளங்கிக் கொண்டால் அஃபோரிசம் வகைமையின் முக்கியத்துவத்தை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும்.

உமேஷின் அஃபோரிச கவிதைகள் எந்த அளவுக்கு புதிதாக, மலர்ச்சியாக, இருக்கிறதோ அதே அளவு திருக்குறள், பழமொழி போன்ற பழந்தமிழ் இலக்கியங்களின் தொடர்ச்சியாகவும் இருக்கிறது. அஃபோரிச வடிவத்துக்கே உரித்தான தத்துவச் செருக்கோடும் அங்கதத் தன்மையோடும் இவை மிளிர்கின்றன.

A woman wihout a man is like a fish without a bicycle. இரினா டன்னின் இக்கூற்றும் ஒரு விதத்தில் aphorism தான். ‘if you judge a fish by its ability to climb a tree, it will live its whole life believing that it is stupid!’ எனும் ஐன்ஸ்டினின் கூற்றும் aphorism தான்.

பின்நவீனத்துவ இலக்கியங்கள் வளர்ந்த லத்தீன் அமெரிக்காவிலும் இன்று அஃபோரிசம் எழுதப்பட்டு வருகிறது. அதேவேளை நவீன இலக்கிய வெளியில், அஃபோரிசத்திற்கான இடம் என்னவாக இருக்கிறது? என்றும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. சமகால அமெரிக்க அறிவியக்கத்தின் Dark Lady என்றழைக்கப்படும் மறைந்த சூசன் சொன்டாக் (Susan Sontag) அஃபோரிசத்தை, பிரபுத்துவச் சிந்தனையின் அடையாளமாகப் பார்க்கிறார். அஃபோரிஸ்ட்டுகள் வாசகர்களை தங்களுக்குச் சமமானவர்களாகப் பார்க்கவில்லை.

பொன்மொழிகள் . ‘ The aphorism talks to you as if you were an idiot ‘ என்கிறார் பேட்டர்சன். ‘There is nothing more difficult to define than an aphorism’ எனக்கூறுகிறார் உம்பெர்டோ ஈகோ. வாசகர்களின் நம்பிக்கைகளைப் பொருட்படுத்தாமல், உலகளாவிய பொது உண்மையைக்கூறி, வாசகர்கள் அஃபோரிசத்தை நம்பவேண்டும் என எதிர்பார்ப்பதாக W.H. ஆடன் குறிப்பிடுகிறார்.

‘ஆசிரியர் இறந்துவிட்டார்’ என நம்பும் காலத்தில் அஃபோரிசம் பொருந்துமா? என்கிற ஒரு சிக்கலான கேள்வியைதாம் இவர்கள் வெவ்வேறு வடிவத்தில் கேட்கிறார்கள். உலகில் ஒவ்வொரு குழுவுக்கும், உண்மைகள், நீதிகள், அறங்கள் வெவ்வேறாக இருக்கின்றன. ஆனால், அஃபோரிசங்களோ மூடுண்டவைகளாக இருக்கின்றன. அஃபோரிசத்தில், வாசகர்கள் தமக்கான திறப்பை கண்டடைவதில் சோர்வடைவதாக விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

நல்வாய்ப்பாக பூவிதழின் அஃபோரிசத்தில் இத்தகைய மூடுண்ட தன்மை இல்லை. ஒற்றை அர்த்தம் செயல்படுவதும் இல்லை. இறுதி அர்த்தங்கள் கொண்டவையாக இல்லை.

பூவிதழ் உமேஷ் அஃபோரிஸத்தை முற்றிலுமாக நவீனத் தன்மையோடு கையாள்கிறார். அவற்றில் இயங்குகிற அரசியல் நிச்சயம் பிரபுத்துவ அரசியலாக இல்லை.

‘என் நாடு அற்புதங்களின்

தொட்டில்

அதில் புல்டோசராகளை நீங்கள்

நிறுத்திய பிறகு

மறைந்திருக்கும் சரஸ்வதி

நதி அழுகிறது’

இந்தக் கவிதை எக்காலத்துக்கும், எல்லா நிலத்துக்கும் பொருந்தக் கூடியதாக இருக்கிறது. இயற்கையை அழிக்கிற அரசியல். எளிய மனிதர்களின் வாழ்விடங்களைக் கைப்பற்றுகிற, ஆக்கிரமிக்கிற அரசியல், என விரிவடைந்தபடி இருக்கிறது.

இது ஒரு நீதிமொழியாக இல்லை.

தன்னளவில் இது ஓர் உருவகமாக அணுகுபவர்களின் உள விரிவுக்கேற்ப அனுபவங்களை வழங்கக் கூடிய கவிதையாக இருக்கிறது. உமேஷின் இன்னொரு கவிதை.

‘என்னுடைய சொந்த வாழ்க்கையின்

பார்வையாளராக நான் இருப்பதால்

எனக்கு பொழுதுபோக்குக்குப் பஞ்சமில்லை’

இதைப் படிக்கும்போது ஷேக்ஸ்பியரின் As you like it நாடகத்தின் புகழ்பெற்ற வரிகள்தாம் ஞாபகத்துக்கு வருகிறது. இந்த உலகை, ஒரு நாடக மேடையாகப் பார்க்கிறார் ஷேக்ஸ்பியர். இங்கு ஆண்கள் , பெண்கள் அனைவரும் நடிகர்களே. வெளியேறவும், உள் நுழையவும் அவர்கள் வாயில்களைக் கொண்டுள்ளனர். உலக வாழ்வை ஓர் உண்மையாகப் பார்க்காமல், அதை ஒரு நாடகமாகப் பார்க்கிற பார்வை முக்கியமானது. இந்த வாழ்வு உண்மைகளால் மட்டும் ஆனதல்ல. அபத்தங்களாலும் ஆனது. இது தரும் அனுபவங்களுக்காக மகிழவோ அழவோ தேவையில்லை. சினிமாவில், நாடகத்தில், துன்பியலும் ஒரு காட்சி அனுபவமே. பொழுது போக்கே. இதைப் பெருவாழ்வு என துதிக்காமல், பொழுதுபோக்கு எனக் கடந்து செல்கிற நிலைதான், இதை ஒரு பொன்மொழியாக ஆக்காமல் நவீனத் தன்மையுடைய கவிதையாகவும் மாற்றுகிறது.

‘துக்கத்தைப்போல

எதுவும் நெருக்கமாக இருப்பதில்லை.

எனவே துக்கத்தைப்போல

என்னிடம் நெருக்கமாக இருங்கள்’

என்று எழுதும் பூவிதழ் உமேஷ். இப்படி நிறைய ஆச்சரியப்படுத்துகிறார்.

மனிதர்களின் விசேடக் குணமே துக்கம்தான். ஒரு காடு துக்கமாக இருப்பதில்லை. ஓர் ஆடு துக்கமாக இருப்பதில்லை. துக்கம்தான் மனித இருப்பு. சுய முனைப்புதான் மனிதர்களைத் துக்கமாக உணரவைக்கிறது. துக்கமானவர்களிடம் மனிதர்கள் ஆறுதலாக நடந்து கொள்கிறார்கள். பரிவு காட்டுவார்கள். மதங்களின் புனிதநூல்கள் அனைத்தும் துக்கமான மனிதர்களுக்காக எழுதப்பட்டவைதாம். வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களை எதிர்நோக்கித்தான் தன் இரு கைகளையும் விரித்துக் காத்திருந்தார் ஏசுநாதர். துக்கம்போல என்னோடு இணைந்திருங்கள் என்கிறாரே உமேஷ், இது ஒருவித மீ இறையியல் அணுகல். யோசித்துப்பாருங்கள். துக்கமாக இருக்கும்போதுதான் மனிதர்கள் மிகவும் இணக்கமாக இருக்கிறார்கள்.

அஃபோரிசத்தை ஞானமொழி என மொழிபெயர்ப்பது எவ்வளவு பொருளுடையதாக இருக்கிறது. அறிவுக்கும் ஞானத்துக்குமிடையே தூரம் அதிகம்.

அறிவாளி என்பவர் வெறும் பயோ கம்ப்யூட்டர்தான். ஞானம் இன்னும் உயர்ந்தநிலை. இக்கவிதைகள் எவ்வகையில் ஞான மணிகளாக உயர்ந்திருக்கின்றன ?

உமேஷின் ஒரு அஃபோரிசம்,

‘இருளைவிட

வெளிச்சத்தை நாம் அதிகம்

விரும்புவது என்பது

முன்பே இருக்கும் நாக்கைவிட

பிறகு முளைத்த பற்களை

விரும்புவது போன்றது’

இந்தக் கவிதையைப் படிக்கும்போது ஜலாலுதீன் ரூமிதான் இம்முறை தமிழகத்தில் வந்து பிறந்துவிட்டாரோ எனத் திகைத்தேன். சிறிய வாக்கியங்களுக்கிடையே எவ்வளவு செறிவு! எல்லாவற்றையும் புரிந்துகொள்ள விரும்புவது அறிவது. எல்லாவற்றையும் அனுபவிப்பது ஞானம்.

இக்கவிதை ஞானத்தின் விளைச்சல்.

புத்தர் சொல்லும்போது அது ஞானத்தின் சொல். சீடர்களிடம் சென்றடையும்போது அது அறிவின் சொல்லாகிறது.

சராசரி மனம் அறிவை விரும்புகிறது. ஞானத் தேடலுக்கு no mind எனும் வெளியை உருவாக்க வேண்டியிருக்கிறது. நூலகத்தால் உங்களை அறிவாளியாக்கத்தான் முடியும். ஞானியாக்க முடியாது. ஞானம் என்பது இருப்பின் நிலை. நமது இருப்பின் நிலையை உணரவைப்பதற்கான ஒளியை தன் சொற்களின் வழி உருவாக்குகிறார் உமேஷ்.

‘அன்றாட வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் சிறிய விஷயங்களைக் கண்டுபிடிப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்’ என்கிறார் பாவ்லோ கோய்லோ.

 ‘நம் கால்கள் ஒவ்வொரு

பாதையிலும் செல்ல

முடியாது

ஆனால் ஒவ்வொரு பாதையும்

நம் கால்கள் இருக்கும்

இடத்தில்

ஏதோ ஒரு வகையில்

இணைக்கப்பட்டிருக்கிறது.’

இந்தக் கவிதை எவ்வளவு சிறியதாக இருக்கிறது. ஒரு நெடிய வாழ்வை வாழ்ந்து முடித்த மனிதனைத் தனக்குள் மூடி வைத்திருக்கும் மம்மியைப்போல.

உமேஷின் அஃபோரிசக் கவிதைகள் பார்க்கச் சிறியவை போலத் தோற்றம் தருவது ஒருவித மயக்கம். மேலும் வின்சென்ட் வான்கோ சொல்வதையும் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. ‘சிறிய விசயங்களால் இணைக்கப்பட்ட தொடரால் செய்யப்படுபவைதான் பெரிய விசயங்கள்.’ இந்தக் கவிதைகள் அதைத் தான் செய்கின்றன.

உமேஷ் கவிதைகள் நம்மை வாழ்வின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு அழைத்துச் செல்கிற வேலையைச் சத்தமில்லாமல் செய்கின்றன. ஒரு வரியில் உள்ள ஒரு கவிதையைப் பாருங்கள்,

“ஆறுதலாகப் பேசுவது உலகின் பழமையான மருத்துவமுறை”.

மிக இளம் வயதில் இத்தகு கவிஞானத்தை உமேஷிடம் கண்டு திகைக்கிறேன். திரும்பத் திரும்ப முக்கியமில்லாத வேலைகளைச் செய்வதின் சோர்விலிருந்து தப்பிக்கும் உபாயத்தை உமேஷ் அறிந்திருக்கிறார். படைப்பதுதான் விரக்தியிலிருந்து வெளியே வருவதற்கான உபாயம். உமேஷ் வெளியே வருகிறார். நம்மையும் வெளியேற்றுகிறார். இவர் கவிதைகள் ஒரு தியானம் போல் இருக்கின்றன. நம் மனதின் அமைதியான இடங்களில், சிறிய சொற்களை வெடிக்க வைத்து, கடவுளின் இருப்பை அனுபவிக்கிற பரவசத்தைத் தருகிறார் . ‘தண்ணீரின் சிரிப்பு’ தொகுப்பின் மூலம் தமிழுக்கு ஒரு புதிய வடிவத்தை அளித்திருக்கிறார் ,

‘உங்கள் இதயம் எனக்கு ஒரு பள்ளத்தாக்கு’ எனக்கூறும் பூவிதழ் . உமேஷை நிரப்பிக் கொள்வோம்.


நூல் விபரம்

நூல்:  தண்ணீரின் சிரிப்பு (தமிழின் முதல் அஃபோரிச கவிதை நூல்)
ஆசிரியர் :  பூவிதழ் உமேஷ்
வெளியீடு : எதிர் வெளியீடு
ஆண்டு : 2024
பக்கங்கள்: –
விலை: ₹

  மேற்கண்ட பதிவு கவிஞர் பூவிதழ் உமேஷின் “தண்ணீரின் சிரிப்பு “ கவிதைத் தொகுப்பு நூலுக்கு கவிஞர் கரிகாலன் எழுதிய அணிந்துரை.

About the author

கரிகாலன்

கரிகாலன்

கடலூர் மாவட்டம் மருங்கூரில் பிறந்த கரிகாலன்; தொன்னூறுகளிலிருந்து தமிழிலக்கியத்தில் இயங்கிவருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கும் இவர் ஆசிரியராகப் பணிபுரிகிறார். இவர் எழுதிய சில கவிதைப் படைப்புகள் ஆங்கிலம், இந்தி, வங்காளம் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ‘களம் புதிது’ என்னும் இதழை நடத்தியுள்ளார்.
அப்போதிருந்த இடைவெளியில், புலன் வேட்டை, தேவதூதர்களின் காலடிச் சத்தம், இழப்பில் அறிவது, ஆறாவது நிலம், அபத்தங்களின் சிம்பொனி, தாமரை மழை ஆகியவை இவரது கவிதைத் தொகுப்புகள். தேர்ந்தெடுக்கப்பட்ட ‘கரிகாலன் கவிதைகள்’ தொகுப்பாக உயிர் எழுத்து வெளியீடாக வெளிவந்துள்ளன. ‘நிலாவை வரைபவன்’ என்னும் நாவல் உள்பட பல படைப்புகளை எழுதியுள்ளார்.

இவரது மனைவி சு.தமிழ்ச்செல்வி தமிழின் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website