cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 27 கட்டுரைகள்

ஐந்து தேநீர் கோப்பைகளில் உறைந்திருக்கும் சொற்கள்


சிங்கப்பூர் தங்கமுனை விருது பெற்ற கங்காவின் கவிதைகள் குறித்து.

சிங்கப்பூர் கவிஞர் கங்கா அவர்களின் தங்கமுனை விருது பெற்ற ஐந்து கவிதைகளை ஒருசேர வாசிக்க வாய்ப்புக் கிட்டியது. எப்பொழுதும் கவிதையுடன் புழங்குவதில் எனக்கொரு தயக்கம் இருக்கும். கவிதை படிமங்களை உருவாக்கி அகத்திற்குள் விரிவதற்கான இயல்பும் நெகிழ்ச்சியும் தத்துவத் திறப்பும் கொண்ட கலை வடிவம். அதன் கூரறித்தன்மை சவால்மிக்கதும் செறிவுமிக்கதும் ஆகும். அதற்குத் தோதான தருணம் வாய்க்க வேண்டும். அத்தகையதொரு நெகிழ்ச்சியான மனம் சிலசமயங்களில் இல்லாமல் போவதால்தான் கவிதைகளுக்குரிய இருப்பு நமக்குள் விரிவாகுவதில்லை. எத்தனைமுறை மோதினாலும் ஒன்றும் கிட்டாமல் சொற்களுடையே அலையும் மனம் வந்துவிடும். அது அயர்வையும் உண்டாக்கிவிடும். தேவத்தேவன், கலாப்ரியா, மனுஷ்ய புத்திரன், இசை, வெய்யில், யவனிகா போன்றவர்களின் கவிதைகளைத் தொடர்ந்து வாசிப்பதன் மூலம் இத்தகைய மனநிலையிலிருந்து இன்னுமும் கவிதைக்குள் பரவசத்துடன் உலாவும் மனநிலையைத் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது.

தேநீர் தொடர்பான மொத்தமாக ஐந்து கவிதைகள் வாசிக்கும்போது முதலில் பரவசம் உருவாகிறது. தேநீர் விரும்பிகளுக்கே ஏற்படக்கூடிய மனநிலை அது. கடந்த இரு மாதக் காலமாக மாலையில் தேநீர் குடிப்பதை மீண்டும் வழக்கப்படுத்திக் கொண்டதன் விளைவாக நான் எடுத்த முடிவு சரிதான் என்பது போல கங்காவின் கவிதைகள் சமாதானப்படுத்தி ஆதரவளிக்கின்றன. தேநீரை ஐந்து உணர்வுகளாகப் பிரித்துள்ளார். முதலில் சலனம், பிறகு வெறுமை, அடுத்து இலக்கிய ஆசுவாசம், நான்காவதாக கைவிடப்படுதலிலுள்ள ஆற்றாமை, இறுதியாக காதல் என விரிகின்றன. தேநீரைச் சுற்றி அவர் பின்னும் வெவ்வேறான மனநிலைகள் பன்முகத்தன்மைகள் கொண்ட குறியீடாக மாறும் தருணத்தை உருவாக்குகின்றன. தேநீரை இத்தனை பிரிவுகளுக்குள் உட்புகுத்தி அதனைப் படிமமாக்கி கவிதைமொழிக்குள் தருவிக்க முடியும் என்கிற அவருடைய முயற்சி என்பதைவிட உணர்தல் நிலையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

‘தேநீரும் இலக்கியமும் 

இரட்டை குழந்தைகள்’ 

எனக்குப் பிடித்த கவித்துவமான மேற்கண்ட வரி அல்லது ஒப்பீடு முதல் முறை வாசிக்கும்போது ஏதோ கிளேஷத்தனம் மாதிரி தோன்றகூடும் அல்லது ஒன்றைக் கூற முயலும் கூற்றுத்தன்மை மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் தோன்றகூடும். ஆனால், மீண்டும் வாசிக்கையில் அது அவருடைய பிரக்ஞையைத் தாண்டி அனுபவத்தின் பெருக்குள்ளிலிருந்து உருவாகும் தருணம் என்பதை உணர முடியும். முழுக் கவிதையை வாசித்து முடிக்கும்போது இந்த ஒரு வரியின் இடம் இரசிக்கும்படியாக மாறிவிடுகிறது. இலக்கியம் பேசுபவர்களுக்குள்ளும் இலக்கியக் கூட்டங்களுக்கு அடிக்கடி செல்பவர்களுக்குள்ளும் உருவாகும் நூதனமான புரிதல் இது. இப்படி ஐந்து கவிதைகளிலும் ஆங்காங்கே கவித்துவமான இடங்கள் வருகின்றன. அதுவே கவிதைக்குள்ளிருந்து நம்மை மேலெடுத்துச் செல்கின்றன.

ஒவ்வொரு மிடறிலும் சகக் கவிஞரை வியத்தலும்

மிடறு இறங்கியவுடன் இகழ்தலும் 

என்கிற இடத்தில் மனித மனம் நாடகத்தனமானது என்றும் அந்த நாடகத்தை நிகழ்த்துவது தேநீர்தான் என்றும் கவிஞர் உருவாக்கும் இடம் இரசிக்கும்படியான மாயத்தன்மையை ஏற்று வெளிப்படுகிறது. இதுவொரு மாயச்சாயலைப் பூசிப் பார்க்கும் இடம். தேநீர் அதற்குக் காரணமில்லை என்று தெரிந்தும் கவிஞர் அப்படியான சாயலைத் தான் எடுத்துக் கொண்ட குறியீட்டின் மீது பூசி விளையாடுகிறார். சொற்கள் அவரின் வித்தைக்கேற்றவாறு இயந்து வருகின்றன. 

தேநீர் எப்பொழுதும் 

கவிதையின் ஊற்றாக இருப்பதாலோ 

என்ற வரியில் கவிஞர் கவிதையையும் தேநீரையும் இணைக்கும் இடம் அரூபமாகத் தெரிகிறது. தேநீர் என்கிற குறியீட்டைக் கொண்டு கவிதைகள் ஏராளமாகப் புனையப்பட்டுள்ளன. ஒரு மாலை நேரத்துத் தேநீரையும் அது கொடுக்கும் சாந்தமான இடைவெளியையும் கவிஞர் கவிதைகள் ஊற்றெடுக்கும் கணமெனப் புனைகிறார். இது பெரும்பாலான கவிஞர்களுக்கு இசைந்து கொடுக்கும் வரியாகப் பார்க்கிறேன்.

ஒரு குவளை தேநீர்

எப்பொழுதும் தேநீராக 

மட்டுமே இருந்ததில்லை.

மேற்கண்ட வரியின் மீதுள்ள இடைவெளிக்குள்தான் அவருடைய மொத்த ஐந்து கவிதைகளுக்கான தருணங்களையும் ஏற்றிப் பார்த்துள்ளார். ஒரு கவிஞன் அல்லது ஒரு சமூகம் தனது கவிதைக்கான குறியீடுகளையும் படிமங்களையும் எங்கிருந்து பெறுகிறது? அல்லது உருவாக்குகிறது எனப் பார்க்கும்போது இயற்கையே மனிதனின் வாழ்வில் நெருங்கிய தொடர்பில் இருப்பதைக் கண்டறிய முடிகிறது. இயற்கை பிடிவாதமாக வைராக்கியம் நிரம்பிய ஒரு தனிமைக்குள் இருக்கிறது. அதிலிருந்து அதன் மௌனத்திலிருந்து தன் வாழ்க்கையைப் பார்க்கும் கவிஞன் இயற்கையையே தனது குறியீடாக எடுத்துக் கொள்கிறான். ஒரு சமயம் மரம், மலைகளைத் தனிமைக்கான குறியீடாக ஆக்கிக் கொள்கிறான். ஜென் கவிதைகள் மலைகளைத் தியானத்தில் இருக்கும் துறவி எனச் சொல்கின்றன.

இயற்கையிலிருந்து குறியீடுகளைப் பெற்றுக் கொள்ளும் கவிஞன் மரம் என மட்டுமல்லாமல், பறவைகள், வானம், மேகம், தாவரங்கள், மண், நிலம், மழை எனத் தன் கவிதை பரப்பை மேலும் விரிவாக்கிக் கொண்டான். சமீபத்தில் எழுதப்பட்டு வரும் நவீன கவிதைகள் புதுக்கவிதை கொடுத்த சத்தங்களின் சலிப்புத் தாளாமல் மீண்டும் மௌனத்திற்குத் திரும்புகின்றன. பிரச்சாரம் செய்வதை விட்டுவிட்டு மௌனமாக உரையாடுகின்றன. முந்தைய தத்துவார்த்தமான சூழலிலிருந்து மாறுப்பட்டு தனிமையின் குரலாக ஒலிக்கின்றன. நவீன மனிதன் சந்திக்கும் நெருக்கடிகளைப் பிரதிபலிக்கும் தனிமனித, தனி மனத்தின் நினைவோட்டங்களாக நவீன கவிதை மாறுகிறது. பெருநகர் வாழ்வின் பரப்பரப்பில் இயந்திரத்தனமான செயல்பாடுகளின் சிக்கிச் சிதைந்திருக்கும் நவீன மனிதனின் குரலாகக் கவிதை மாறுகிறது.

கங்காவின் கவிதைகளை அவ்வாறான தொனியில் ஒலிப்பதாகவே உணர்கிறேன். ஐந்து நிலையிலான உணர்வலைகளைத் தனக்குள்ளிருந்து எழுந்து வருவது போலவே அவர் எழுதியிருக்கிறார். கைவிடப்பட்ட தேநீர் கவிதையில் கவிஞர் தேநீரை இரசனை ஒருமையுடன் இணைத்துப் பார்க்கிறார். இக்கவிதையில் தேநீர் என்பது மதுவாகவும் மதுவிற்கு இணையாகவும் மாறுகிறது. இலக்கிய இரசனை மாறுபடும்போது தேநீர் ஒவ்வாமையானதாகக் கருதப்படுகிறது. அதுவரை இலக்கியம் பேசத் தேநீர் கைக்கொடுக்கிறது. இரசனை, இலக்கியத்திலிருந்து மதத்தின் மீது குவியும்போது தேநீர் கைவிடப்படுவதாகக் கவிஞர் உருவகிக்கிறார். அனைத்தையுமே தன் அகம் உணரும் தருணங்களாக மாற்றி எழுதியுள்ளார். அவை அலட்டலில்லாமல் மிகவும் நிதானமாக ஒலிக்கின்றன.

ஒரு கருப்பொருளைக் கொண்டு கவிதைகளைப் பன்முகப்படுத்தும் ஆற்றல் இவரிடம் உள்ளது. அதனைப் பரிசோதனை முயற்சியாகச் செய்து பார்த்துள்ளார். ஆனால், இதிலேயே இருந்துவிட வேண்டாம். எல்லாம் நிலைகளிலும் இதுபோன்று எழுதும்போது தமக்கே அது சலிப்பூட்டுபவையாகவோ அல்லது வலிந்து உருவாக்கும் நிலையோ வரக்கூடும். அது போல இக்கவிதைகளில் சில இடங்கள் வெறும் கூற்றுகளாக வந்தொலித்து ஓய்ந்துவிடுகின்றன. அதனுள் தகவல்களைத் தாண்டி வேறொன்றாக மாறிக்கொள்ள கவித்துவமான இடங்கள் உருவாகும் வாய்ப்பில்லாமல் போகின்றன. கவிதை கச்சிதமும் சொற்சிக்கனமும் கொண்ட வடிவம் என்பதால் இருக்கும் சொற்களைவிட இல்லாமல் மறைந்து இன்மைக்குள் இருக்கும் சொற்களுக்கு வலிமை அதிகம் என்பார்கள். அதனை ஓர் இடைவெளியாக கவிதைக்குள் அரூபமாக வைத்துவிடுவதே கவிஞனுக்கான சவால். கவிதையில் சொல்லும் தன்மை அகன்று அதிகமாகிவிடக்கூடாது என்பார்கள். அதிகம் விளக்குதல் கவிதையின் கூர்மையை நீர்த்துவிடச் செய்யும். ஆக, இன்னும் சொற்சிக்கனத்துடன் முயன்றால் கவித்துவம் பெருகி வரும். கங்காவின் மூன்றாவது கவிதையான இலக்கியமும் தேநீரும் அதற்கு நல்ல உதாரணம் என்பேன். கச்சிதமாக எழுந்து கூர்மையுடன் வெடிக்கிறது. கங்காவின் கவிதை சொல்லாடலிலுள்ள எளிமையும் சத்தமற்ற நிதானமும் என்னை அவருடைய கவிதைகளை நோக்கி எழுத வைத்தது என்று நினைக்கிறேன்.

சே குவாரின் கோபம் புரட்சியானது; பாரதியாரின் கோபம் கவிதையானது என எங்கேயோ வாசித்ததாக நினைவு. ஆக, கவிதை உருக்கொண்டு வெளிவர ஓர் உணர்வு தேவையானதாக இருந்திருக்கிறது. அது கோபமாக இருக்கலாம்; கவலையாக இருக்கலாம்; ஆனால், நிச்சயமாக கவிதை தனக்கான  சொற்களைத் தேடி உருப்பெற்று கொள்ள உணர்வு நூதனமான பங்காற்றுகிறது என்றே சொல்லலாம். இன்றைய நவீன சூழல் கவிதையை உணரும் தளத்தை வேறிடத்திற்கு மாற்றி மாற்றி விளையாடிக் கொண்டிருக்கிறது.

‘கவிதைக்குள் ஒரு சொல் புதியதாகத் திறந்துவிடப்படுகிறது’

– ஜெயமோகன்.

எல்லாம் சொல்லுக்கும் அது புழங்கிற மொழி சார்ந்த கலாச்சார கட்டுமானங்களும் படிமங்களும் இருக்கவே செய்யும். ஒவ்வொரு சொல்லும் நாம் அறியப்படுகிற விதம் அதன் நுட்பமான மதம், அரசியல், பண்பாடு சார்ந்ததாகவே இருக்கும். அதன் பின்புலத்தைக் கொண்டே ஒரு சொல்லுடன் நாம் உறவு கொள்கிறோம்; புரிதலை உருவாக்கி வைத்திருக்கிறோம். அங்கிருந்து கொண்டே ஒரு கவிஞன் தன்னுடைய நூதனமான உணர்வுத் தளத்திலிருந்து கவிதைக்கான வார்த்தைகளை மறுகண்டுபிடிப்பு செய்து உபயோகிக்கிறான். கங்கா ‘தேநீர்’ என்கிற சொல்லைக் கொண்டு தன்னுடைய ஐந்து கவிதைகளிலும் வார்த்தைகளோடு விளையாடி பார்க்கும் விதங்களே இக்கவிதைகளுக்கு ஒரு புதிய முகத்தை உருவாக்க முயல்கின்றன. ஆனால், இவை இங்கே நின்றுவிடக்கூடாது. இன்னும் அவர் தனது கவிதைக்கான எல்லைகளை விரிவாக்கிச் செல்வார் என நம்புகிறேன்.


 

About the author

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்

மலேசியாவிலுள்ள கடாரம்(கெடா) என்கிற மாநிலத்தில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வரும் கே.பாலமுருகன்; 2000க்குப் பிறகு எழுத வந்த மலேசிய நவீனப் படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளராகவும் சிறார் நாவலாசிரியராகவும் கருதப்படுகிறார். பன்முக நவீனப் படைப்பாளியாக சிறுகதைகள், நாவல்கள், திரைப்படங்கள் சார்ந்த கட்டுரைகள், குறுங்கதைகள், அறிவியல் புனைக்கதைகள், சிறார் நாவல்கள், கவிதைகள் என இதுவரை பதினேழு நூல்கள் இயற்றியுள்ளார்.

சிறார் இலக்கியத்திலும் பங்களித்துவரும் பாலமுருகன் இதுவரை சிறார்களுக்கு 100க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுகதைகள், நான்கு சிறார் நாவல்கள், பத்துக்கும் மேற்பட்ட சிறுவர் குறும்படங்கள், சிறுவர் சிறுகதை வழிகாட்டி நூல்கள் படைத்திருக்கிறார். இவருடைய ‘பேபிக் குட்டி’ என்கிற சிறுகதை தமிழ்நாட்டு அரசின் மேல்நிலை முதலாம் வகுப்பு (11ஆம் வகுப்பு) மாணவர்களுக்கான ‘சிறப்புத்தமிழ்’ என்கிற அரசுப் பாடநூலில் அயலக சிறுகதைப் பிரிவில் பாடமாக இணைக்கப்பட்டுள்ளது.

இதுவரை கலை, இலக்கியத் துறையில் இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவருடைய முதல் கவிதை தொகுப்பு ' கடவுள் அலையும் நகரம்' சிங்கப்பூர் தங்கமீன் பதிப்பத்தால் 2009ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
கங்கா

மிகவும் நன்றி தோழர். 🙏

You cannot copy content of this Website