cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 35 கட்டுரைகள்

விளக்க முடியாத ஆற்றல்.

Getting your Trinity Audio player ready...

(றாம் சந்தோஷின்  ‘சொல் வெளித் தவளைகள்’ குறித்து …)

றாம் சந்தோஷின் கவிதைகளை இப்போது நிறையபேர் படித்துக்கொண்டிருப்பார்கள். அது நல்லது. நான் இவர் பல கவிதைகளை பிரசுரமாவதற்கு முன்பே படித்தேன். சிற்றேடு  இதழுக்கு வந்தன. ஒரு கவிதையைக்கூட நிராகரிக்கவில்லை. எல்லாம் பிரசுரமாயின. சிற்றேடு இதழின் நோக்கம் தமிழ்த்துறை மாணவர்களை கவிதை எழுதவும், சிறுகதை எழுதவும் தூண்டுவது. இவருக்குத் தமிழகத்தில் மிகப்பெரிய கவிதை விருது கிடைத்திருப்பது பல கேள்விகளுக்கு மகிழ்ச்சியான விடையை எனக்குத் தருகிறது. 

எதிர்காலத்தில் உலகம் முழுசும் உள்ள தமிழ்த்துறைகள் தன்னைச்சுற்றி எழுப்பியுள்ள இரும்புக்கோட்டையை நிச்சயம் உடைக்கும். சிங்கப்பூர்,இலங்கைபோன்ற இடங்களிலும் புராதனத்தமிழ்த்துறை அப்படியே அச்சு மாறாமல் உள்ளது. இவர் தொல்காப்பியத்தைப்பல இடங்களில் பயன் படுத்துகிறார். ஓரிடத்தில் இன்று யாருக்கும் தெரியாத பழந்தமிழில் உள்ள அளபெடையைப்பயன் படுத்துகிறார். ஆனால் பழமைப்பற்றால் அல்ல. பழமையை அப்படியே புரட்டிப்போடுவதற்காக.

அப்படிப் புரட்டிப் போடுவதில் ஒரு கவிஞரின்  நவீன அரசியலும் வாயைத்  திறக்காத கேலிச்சிரிப்பும் அதுபோல, படிப்பவர்களுக்குள் எழுப்பும் நகைச்சுவை, வலி ஏற்படுத்தும் குத்தல் எல்லாம் உண்டு. கேலியின் உணர்வும், சிரிப்பும் அரசியலும்  ஒன்றுக்குள் ஒன்று பிணைந்திருக்கும். அந்த மூன்றும் மாறிமாறி மின்விளக்குகள் போல மாறிக்கொண்டேயிருக்கும். கேலி இருந்த இடத்தில் அரசியல் வரும். குத்தல் இருந்த இடத்தில் நகைச்சுவை வரும். இத்தகைய வரிகளை இவர் எழுதுவதைப் பார்த்து பல முறை நான் அதிசயித்தது உண்டு. 

  ஞானக்கூத்தன் தன் ஆரம்பக் கவிதைகளை நிறுத்திய இடத்திலிருந்து இவர் தொடங்கி, தன் கவிதையை, இன்னும் சற்று மாறுபாட்டையும் சேர்த்து எழுதுகிறார் என்று நினைத்து வருகிறேன். ஆனால் எனக்குத் தெரியும் இவர் ஞா.கூ. கவிதைகளை அப்போது படித்ததில்லை. ஈழத்திலிருந்து நவீன கவிதை பற்றிய புதிய கருத்துக்களைச் சொல்லும் றியாஸ் குரானாவிடம் சிற்றேடு சார்பில் ஒரு கருத்துப்பரிமாற்றம் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தபோது அவரிடம் றாம் பற்றிய இவ்விஷயம் தெரிவிக்கப்பட்டது. ஞா.கூ. பற்றிய பிரஸ்தாபம் எதுக்கு என்றால், றாம் கவிதைகள் மொத்த புதுக்கவிதைகளில் எந்தப் பாதையில் வளர்கிறது என்பதை அறிவதற்குத்தான். ஒவ்வொருவருக்கும் ஒரு மரபு உண்டு. ந. பிச்சமூர்த்தியைக் கேட்டால் பாரதி தான் தன் மரபு என்று கூறுவார்.  

றாம், இப்போது எல்லோரும் அங்கீகரிக்கும் இடத்துக்கு வந்திருக்கிறார். இந்த அங்கீகாரம் ஏன், எப்படிக் கிடைத்தது என்பதற்கான காரணத்தை இவர் கவிதைகளில் தேட வேண்டும்.

அடுத்து இவர் கவித்துவத்தின் மையமான இடம் என்று எனக்குத்தோன்றும் ஒரு கருத்து பற்றிச் சில சொல்லவேண்டும்.”காற்றுச்சரடு கிழிக்கிறது என்னுடம்பை  “பிரிவதன் வருத்தம் என் முதுகைச்சொறிகிறது. உடலெல்லாம் பசலை  படிவதுபோல்..” “இனி எழுந்து நடக்க -லாம் என்றால் என் முதுகு எங்கே, வயிறோ மண் தவழ.” “முளைத்து வளர்ந்து உடலானேன்” நகங்களை ஆயுதமாக்கி உடலெல்லாம் கீறுகிறேன்.. ரத்தம் வருகிறது உடல் சிவக்கிறது, சிவப்பு, புரட்சியின் நிறம். புரட்சி ஓங்குக. அரிப்பு ஓங்குக.” இப்படி இப்படித் தொகுப்பு முழுதும் உடலில் தொந்தரவு வருகிறது. கடைசிக் கவிதை வேதனையும் விளையாட்டையும் (அரிப்பு ஓங்குக) இணைக்கிறது. இது தான் இவரது பெரும்பானமைக் கவிதைக்குள்ளே இருக்கும் விளையாட்டின் தத்துவம். ஒரு எப்போதுமான வேதனை. வேதனைக்கு ஒன்னொரு பக்கம் உண்டு. அது நகைச்சுவை என்று கூறுகிறார். அப்படிக் கூறுவதை நேரடியாக வாசிப்பவர்கள் அறிய முடியாதபடி பிரதியின் கீழ் இவர் கவிதைகள் ஒளித்து வைக்கின்றன. மேலே ஒரு பொருள் தெரியும். உள்ளே இன்னொரு தொனி ஏற்பட்டு மேல் தெரியும் பொருளுக்கு மேல் ஏறிசாயம் பூசும்.  ஓருதாரணம்.  தொல்காப்பியர் பற்றி ஒரு கவிதை. 

”என் பாட்டன்களின் நைனா தொல்காப்பியன் சாயா குடித்துக் கொண்டிருக்கிறான்” எனத் தொடங்கும் கவிதை ஒரு தொல்காப்பியச் சூத்திரத்துடன் முடிகிறது. இங்கு ஒளித்து வைக்கிற வேலை நடக்கிறது. எது சீரியஸ், எது பகடி, கேலி, என முடிவு  தெரியாதபடி ஆடுபுலி ஆட்டத்தில் சில ஒளிக்கப்படுகின்றன.  

அக்கவிதையில் தொல்காப்பியர் பிரஞ்சு பியர்டுடனும் பெல்ஸ்பாட்டம் பேண்டுடனும் காட்சி தருகிறார். இக்காட்சி உயர் நிலைப்பள்ளி மாணவர்களின் கற்பனை. ஆசிரியரை இப்படி நோட்டுக்குள்ளே கேலிச்சித்திரம் தீட்டி விளையாடுவார்கள். இவருடைய பெரும்பாலும் கவிதைகள் பலருக்கும் ஒரு மாயக்கவர்ச்சியைத் தருவதற்கான காரணம் (பார்க்க: கணையாழியில் வந்த ஆத்மார்த்தியின் கட்டுரை) எல்லா வயதினரின் அனுபவமும் இக்கவிதைகள் பலதிலும் ஒவ்வொரு இடத்தில் வெளியே பாதி தெரிந்தும் உள்ளே பாதி மறைந்தும் காணப்பதுவதால்தான். இப்படி ஒளித்து வைக்க பல உத்திகளைக் கவிதைகளில் பயன்படுத்துகிறார். 

அடுத்து இவர் கவிதைகளில் திடீர் என வெளிக்கிளம்பும் ஒரு பண்பையும் கூறவேண்டும்.

“கொல் என்று சிரித்து

ஒருமுறை துப்புவார்

துப்பும் அவர் எச்சிலோடு

பற்களும் கிடைப்பதுண்டு”

வேறு ஒரு கவிதையின் இன்னொரு வரியைப் பாருங்கள்:

“ஆயிரம் குறிகள் முளைத்தவளாய் அகோரமாய் ஆனாள்.”

திடீரென எதிர்பாராத படிமம் எழுந்து முகத்தில் அறைகிறது. இந்த திடீர்த் தன்மை கவிதையில் ஏற்கனவே முன் வரியில் இருக்கும் ஒன்றையும் அடுத்துவரும் ஏதோ ஒன்றையும் இணைக்கும். ஆயிரம் குறிகள் முளைத்த முகம் என்று இதுவரை யாரும் எழுதியதாகத் தெரியவில்லை. ஏன் இவருக்கு மட்டும் இந்த மிகவும் வித்தியாசமான படிமம் தோன்றியிருக்கிறது? தொல்காப்பியர் பிரஞ்சு பியர்ட் வைத்திருப்பது யாரும் எழுதலாம். ஆனால் எச்சிலோடு பல் கிடைக்கும் பாக்கியம் மற்றும், ஆண்குறி முளைத்த பெண் என்ற சித்திரிப்புகள் ஒரே நபரின் மனதில் தோன்றுகின்றன. இதுதான் படைப்பின் விளக்க முடியா ஆற்றல்.

இன்னொரு குணம் பற்றியும் சொல்கிறேன். பல் விதமான சொற்களைப் பயன்படுத்துகிறார். ஆங்கிலச் சொற்கள், பழந்தமிழ் (கொடார்ப் பழித்தல், மது வேண்டார் பரணி), இடக்கரடக்கல், திடிர் திடீரென பல விதமான பேச்சொலிகள் (வடபோச்சே, வியர்வைத் துளியாச்சும், குழியாச்சு மண் பரப்பில்,) சொல்லிணைவுகள் (மயில் லார்ட், அவர் ஒரு மருத்துவர் இன்றி பெரும் மகத்துவர்), இப்படி இப்படி. இச்சொற்களின் தன்னெழுச்சிதான் நான் பேச வந்த இடம். இச்சொற்களைக் கொண்டு வந்த வேகம் தோன்றுமிடம் ஒரு கவிதைஸ்தானம். 

இதனை வேறு சில உதாரணங்கள் தந்து விளக்குகிறேன். “ஒரு செத்த எலி சயனித்துப் படுத்திருக்கிறது/ என் கடவுளைப் போல”. கடவுளைப் போல என்பது எதிர்பாரா வரவு.  “காற்றுப்போல் ஆடி இலைகள் / என் சொல் உதிர்க்கும்.”   “ஏசுவோ ஏனோ விருப்ப மற்றவராய்/ ஒரு ஸ்விப் ஒயினே போதுமென்றார்” திடீரென சம்பந்த சம்பந்த மற்றதாய் கடைசி வாக்கியமோ, சொல்லோ வந்து ஒரு இடைவெளி / இணைப்பை உருவாக்குகிறது. இடைவெளியும் இணைப்பும் முரண் சொற்கள். நடக்க முடியாதது. அதை நடத்திக்காட்டுவதுதான் கவிதை. இவர் அதைச் செய்கிறார். இப்போது ஏன் எதிர்பாராச் சொற்கள் வந்த இடமும் எதிபாராத் தொடர்கள் வந்து சேர்ந்ததும் ஒரே கவித்துவச் செயலின் இரண்டு முகங்கள் என்பது எல்லோருக்கும் விளங்கும் என்று நினைக்கிறேன். 

இறுதியாய் இவர் கவிதைகளில் வெளிப்படும் அரசியல் பற்றி. பொதுவாய் புதுக்கவிதையில் சமீபகாலத்தில் அரசியல் வெளிப்படையாய் வருவதில்லை. ‘வழக்கம் போல் ஒரு ஊர்த்திருடன், தலைவன் என்றே அறியப்படுகிறான். பண்புகள் மாறாதவனாய் சொற்களைப் பிடுங்குகிறான்.’ பண்புகள் மாறாதவனாய் என்பதில் ஒரு இருண்மை வருகிறது. திருடனுக்கு என்ன பண்பு இருக்கும்? இன்னும் இரண்டு சொற்களைப் பாருங்கள். “சொற்களைப் பிடுங்குகிறான்”, (பிடுங்குதல், ஒரு பேச்சு வழக்கு இல்லையா?) இங்கே நான் தந்துள்ளவை முதல் மூன்று வரிகள். அடுத்து ஐந்து வரிகள் புரிந்து கொள்ளக் கடினமானவை. அவை மிகவும் புரியும்படி எழுதிய முதல் மூன்று வரிகளின் மீது இருண்மையை மீண்டும் மீண்டும் பூசுகின்றன. அப்புறம் ஒரு விசயம், இருண்மை இல்லாவிட்டால் புதுக்கவிதை உண்டா? சரி,  புரியாமல் இருந்தும் ஏன் புதுக்கவிதைகளைத் தொடர்ந்து எழுதவும் வாசிக்கவும் செய்கின்றனர்? பதில்: புரியாத ஒன்று இச்சமூகத்துக்கு வேண்டியிருக்கிறது. 

இவரை விருதுக்குத் தேர்ந்தெடுத்த அமைப்பையும் நடுவர்களின் ஆழ்ந்த கவிதை அறிவுத் தைரியத்தையும் வியந்து பாராட்டுகிறேன்.


[குறிப்பு: கடந்த 2020 ஆண்டு ‘சொல் வெளித் தவளைகள்’ நூலுக்குக் கவிஞர் ஆத்மாநாம் விருது அறிவிக்கப்பட்டபோது, அது தொடர்பாக அறக்கட்டளைக் கொண்டு வருவதாகக் கூறிய தொகை நூலுக்காக இக்கட்டுரையைத் தமிழவன் எழுதினார். தொகை நூல் கொண்டு வரப்படாததால் இத்தனை ஆண்டுகள் கழித்து அவரின் அனுமதி பெற்று பிரசுரிக்கப்படுகிறது; விளக்கம் வேண்டி உபதலைப்பு சேர்க்கப்பட்டுள்ளது.]

About the author

தமிழவன் .

தமிழவன் .

தமிழ் ஆய்வாளர்களில் குறிப்பிடத்தக்கவராக திகழும் தமிழவன் சிறுகதைகள்- புதின எழுத்தாளர், விமர்சகர் மற்றும் திறனாய்வாளர்

இவரின் இயற்பெயர் கார்லோஸ் சபரிமுத்து. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர். திருநெல்வேலி, திருவனந்தபுரத்தில் படிப்பை முடித்து, பெங்களுர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றியவர். போலந்து வார்சா பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டுகள் தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றியிருக்கிறார். அதன் பிறகு ஆந்திர மாநிலம் குப்பம் நகரில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். தமிழ் தவிர மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் எழுதவும் பேசவும் தெரிந்தவர். பல ஆண்டுகளாகப் பெங்களூரில் வசிக்கிறார்.

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
அயாத் அக்பர்

உண்மைகளை உரக்கச் சொல்வதில் தமிழவன் என்றுமே தயங்கியதில்லை, இவர் ஒருவரை அடையாளம் காணுகின்றார் என்றால் அவர் ஆகச் சிறந்த படைப்புத் திறன் கொண்டவராக இருப்பார்.கவிதை உலகில் றாம் சாந்தோஷிற்கு இக்கட்டுரை மூலம் நிரந்தர கிடைக்கும்.வளர்க றாமின் படைப்புகள்.

You cannot copy content of this Website