cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 6 விமர்சனம்

பூவிதழ் உமேஷின் “சதுரமான மூக்கு” – ஒரு திறனாய்வு


விதை என்பது உணர்ச்சிக் குவியம்!! கவிதை என்பது அழகியல் சேர்க்கும் பெட்டி!! கவிதை ஒலியின் உற்ற தோழி!! கவிதை சொற்களின் கைபிடித்து நிலம் திறக்கும் வேர்!! இப்படி கவிதைகளைப் பற்றிப் பல கருத்துக்கள் நிலவினாலும் கவிதையை விரும்பாதவர் யார் உண்டு? ஒரு கூட்டுக்குள் புழுவாய் நெளிய மறுத்து, தனக்கான சிறகுகளோடு வண்ணத்துப் பூச்சியாய் பறக்கும் முரண்பாடுதான் நவீனக் கவிதை.

தற்போது நவீனக் கவிதைகளில் தனக்கான ஒரு இடத்தை பிடித்திருப்பவர் கவிஞர் பூவிதழ் உமேஷ் அவர்கள். அவருடைய கவிதைத் தொகுப்பான சதுரமான மூக்கு புத்தகத்தை புத்தகக் கண்காட்சியில் என்னிடம் கொடுத்தார்.

புத்தகத்தை கையில் எடுத்ததும் என்னை சிந்திக்க வைப்பது அதன் தலைப்பு, மூக்கு எப்படி சதுரமாக இருக்கும்? என்ற கேள்வியோடு இந்தப் புத்தகத்தைப் புரட்டினால், எனக்குள் இன்னும் நிறைய கேள்விகள் சேர்ந்து கொண்டன…. அமைதியான யாழின் நரம்புகளை மீட்டும் விரல்களைப் போல நம் சிந்தையை தொட்டு விட்டுப் போகின்றன நிறைய கவிதைகள்… படித்து முடித்த பின்னும் அந்த அதிர்வலைகள் ஓய்வதில்லை!!

இத்தொகுப்பை பற்றிய அணிந்துரையில் சித்துராஜ் பொன்ராஜ் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்… “அனைத்தையும் புதுமையாக்கு” என எஸ்ரா பவுண்டின் சொன்னதற்கு ஏற்ப கருத்திலும், காலத்திலும், காட்சியிலும்,மொழியிலும் புதுமையை கொடுத்திருக்கிறார் உமேஷ். மேலும் அவர் உலகத்தின் உயிர்கள் அனைத்தின் மீதும் வைத்த அன்பில் எழுதப்பட்ட தொகுப்பு இது அப்படி இருக்க… அன்பு எப்படி ஜெயிக்காமல் போகும்? என்ற கேள்வியோடு முடிக்கிறார்.

முன்னுரையில் “மாறுபட்ட சொற்களை உருவாக்கி, சொற்களால் செய்த பொம்மை போல் அவற்றை வைத்து விளையாடுவதும், ரசிப்பதும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது”. என்கிறார் ஆசிரியர். அதுபோல வழக்கமான போக்குகளை கடந்து வேறு வேறு புதுப்பிப்புகள் இன்றைய நவீன கவிதைகளுக்கு தேவையாக இருக்கிறது என்றும் சொல்கிறார்.

சரி இனி கவிதைகளுக்குள் செல்லலாம்… முதல் கவிதையே முத்தாய் பிரகாசிக்கிறது!!

“என் ஒவ்வொரு விரலிலும்
ஒரு சன்னல் இருக்கிறது
விரல்களை மாற்றி மாற்றி பிடித்து நடக்கும் குழந்தை
ஜன்னல்களை திறப்பதும்
மூடுவதுமாக வருகிறது”

இந்தக் கவிதை படித்ததும் அவர் ஏன் சிறுவர் இலக்கியத்தில் பெரிய எழுத்தாளராக இருக்கிறார் என்பதை உணர முடியும்.

அரசு இயந்திரம் சாமானிய மக்களின் மனதில் போடும் துழையை.. மலை நாடனும், சமவெளி நாடனும் உரையாடும் படி எழுதப்பட்ட கவிதை விளக்குகிறது.

” சம வெளிநாடன் – விளையும் வயல்களின் குறுக்கே வரும் அரசை எதிர்ப்பதால் இறக்கிறோம்

மலைநாடன்- உயர்ந்த மலைகளின் குறுக்கை உடைக்கும் அரசை எதிர்ப்பதால் இறக்கிறோம்”

உச்சரிப்புகளின் உள்சென்று திறம்பட இன்னொரு கவிதை சமைத்திருக்கிறார் கவிஞர்..

“வளர வளர செம்மறியாட்டின் கண்ணீரின் நிறம் போல
என் பெயர் மாறிவிட்டது
யாராவது அழைத்தால்
பெயரின் இரண்டாவது எழுத்தை மட்டுமே கூப்பிடுவதாக தோன்றுவது பிரமை இல்லை”

இவரின் பெயரின் இரண்டாவது எழுத்தை(மே) அனைவரும் உச்சரிப்பதால் வந்த எண்ணத்தை, ஒரு கவிதையாக மாற்றியது நயம்!!

கவிஞர் ஆசிரியராக இருப்பதால் வினாத்தாள் வடிவிலும் ஒரு கவிதை படைத்திருக்கிறார். துயரங்களின் வினாத்தாள்/மகிழ்ச்சியின் வினாத்தாள் என்னும் கவிதையில் 10 கேள்விகளும் சுவாரசியமாக இருக்கின்றன.

கேள்வி எண்:7
உங்கள் துயரம்/ மகிழ்ச்சி தொலைக்காட்சியில் வரும் போது ஒலி அளவை குறைப்பதா? கூட்டுவதாக? (கட்டாயம் அணைக்கக் கூடாது)

கேள்வி எண்:9
சரக்கு ரயிலின் கடைசி பெட்டி… கடைசி பேருந்து இவற்றுள் துயரம் எது? மகிழ்ச்சி எது? – விளக்குக

“பூனைகளை தலையணையாக கேட்கும் விருந்தினர்கள்” எனும் தலைப்பில்

 “இலக்கம் 5
என் இதயம் எப்போதும்
துடித்தபடியே இருக்கும் மீன் கொஞ்சம் அன்பைக் கரைகட்டி
ஒரு சிறிய நீர் நிலையை உருவாக்கித் தர முடியுமா”

என்ற வரிகள் எரிமலை வெடித்த இடத்தில் பெய்யும் முதல் மழை போல இதம் தருகிறது…

“மலையைப் பார்த்த குழந்தை செத்துப் போன டைனோசரை புதைத்த இடம் இது தானா?
என்று கேட்டது
அருகில் கடலைப் பார்த்துக் கொண்டிருந்த அம்மா
கடலை காகிதமாக நம்பி யாரோ ஒருவன்
தொலைவில் கப்பலை தீட்டி இருக்கிறான் பார் என்றாள்”

எனத் தொடரும் இந்தக் கவிதையில் கடைசிவரை அன்பு நிறைந்திருக்கிறது..

“வாய் தகராறில் தூக்கிட்டு இறந்தவளின்
பதினோராம் நாள் காரியத்துக்கு வந்த வி. கலாஸ் நிக்கோவிடம்
“வாய் தான் உலகின் முதல் துப்பாக்கி” என
350 மீட்டர் தூரத்தில் நின்று சொல்லுகிறான்
இறந்தவளின் கணவன்”

இக்கவிதைகளில் வரும் எண்களைப் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்துதான் அவற்றைப் புரிந்துகொள்ள முடிந்தது. இந்த சுவாரஸ்யத்தை வாசகர்களுக்கு நான் விட்டு வைக்கிறேன்.

ஒரு சொட்டுத் தண்ணீருக்குள் வாழ்வின் நீளம் சொல்லும்விதமாக இருக்கட்டும்… மனிதனை மீனாக மாற்றும் வர்ணனை ஆகட்டும்… கேலிச் சித்திரங்களை வரைந்து போருக்கு அனுப்ப வேண்டும் என்ற சிந்தனை ஆகட்டும் எந்த வரிகளை மேற்கோளிட?

ஒரு ஆணும், பெண்ணும், விலங்கும், பறவையும், எருதின் பாய்ச்சலும், வேரின் பரவலும் இரு பக்கங்களில் காட்டும் அட்டைப்படம் எந்தவிதமான ஆவலைத் தூண்டியதோ அதனினும் ஆழமான சிந்தனை தாகத்துக்கு.. சமுத்திரத்தின் சாயல் கொண்ட ஒரு மனக் கேணியை சேந்தும் கயிறைப் பற்றி நீர் புதையல் எடுக்கும் திகில் உணர இத்தொகுப்பை கையில் எடுக்கலாம்…

தனிமை நெருடும் பாதையில் இப்புத்தகத்தை வழியில் கிடக்கும் மூங்கில் எனக் கையில் எடுத்தால் அதற்கான துளைகளை தானே உருவாக்கி உங்களின் ஆன்மாவுக்கு கீதம் இசைக்கும்… அடுத்த கணமே தனக்கான ஒளியை உருவாக்கும் ஒரு மெழுகுவர்த்தியாக மாறிப்போகும்… அந்த வெளிச்சத்தில் நீங்கள் நடக்கும்போது உங்கள் வாழ்விற்கான வரை படமாக மாறி மாறி உங்களை திக்குமுக்காட செய்யும்..

நீங்கள் இந்தக் கவிதைகளின் வேர் தொடும் போது உமேஷ் அவர்களின் கற்பனை பல வண்ணங்களாய் சிதறுண்டு… ஒரு திருக்கியின் வர்ண ஜாலங்களை உங்களுக்கு காட்டும்… அவற்றின் ஒவ்வொரு பிம்பத்திலும் மொழியும்,நடையும், அறிவியலும், கற்பனையும் மாறி மாறிக் காட்சி தரும்.

ஹெலன் கெல்லருக்கு வந்த ஒரு கடிதத்தில் இப்படி எழுதியிருந்தது..
“என்றாவது ஒருநாள் நீங்கள் ஒரு மகத்தான கதையை எழுதுவீர்கள்.. அது நிறைய பேருக்கு உதவியாகவும் ஆறுதலாகவும் இருக்கும்”

என்று தன் முகநூல் பக்கத்தில் கவிஞர் பதிவிட்டிருந்தார். இந்த வரிகள் உமேஷ் அவர்களுக்கும் பொருந்தும் என்பதில் சந்தேகமே இல்லை!! மொத்தத்தில் சதுரமான மூக்கு வாசகனின் மனோநிலையை தன் வசமாக்கி அவனுடைய சிந்தனையை தூண்டும் விதமாக இருக்கிறது. இவரிடமிருந்து இன்னொரு அறிவு சார்ந்த, அழகியல் நிறைந்த தொகுப்புக்காக ஆவலுடன் காத்திருப்போம்.


நூல் விபரம்

நூல்: சதுரமான மூக்கு 

ஆசிரியர்: பூவிதழ் உமேஷ்

வெளியீடு: ஆகுதி பதிப்பகம்

விலை: ₹ 100

முதல் பதிப்பு:  2022

.

About the author

மலர்விழி

மலர்விழி

கவிஞர் மலர்விழி பெங்களூரில் வசிக்கும் மென்பொறியாளர், கவிதைகள் எழுதுவதோடு மொழிபெயர்ப்பும் செய்து வருகிறார். ஓவியங்கள் மீதும்  வரைவதிலும் மிகுந்த ஆர்வம் உடைய,
இவருடைய கவிதைத் தொகுப்புகள் :
’விடாமல் துரத்தும் காதல்’ (எமரால்டு பதிப்பகம்),
“ஜூடாஸ் மரம்” (வேரல் புக்ஸ் ),
மற்றும் மலர்விழியின் மொழிபெயர்ப்பில் ‘அகாசியா மலர்கள்’
- பன்னாட்டு மொழிபெயர்ப்புக் கவிதைகள். (வலசை பதிப்பகம்0

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website