சமீபமாக பாமரர் vs அறிவுஜீவி வாதங்களைக் காண்கிறேன், கேட்கிறேன்.
கருத்தியல் அடிப்படையில் சோஷலிஸ்ட், கம்யூனிஸ்ட், சனநாயகவாதிகள், புரட்சியாளர்கள் மட்டுமில்லை. பழமைவாதிகள், ஃபாஸிஸ்ட்டுகளும் அறிவுஜீவிகளென்றே அழைக்கப்படுகிறார்கள்.
இவ்வகையில் இந்திய அறிவு மரபு என்பது இரண்டு வகையாகப் பிளவுபடுகிறது. ஒன்று வேத மரபில் வரக்கூடிய அறிவு ஜீவிகள். மற்றொன்று புத்தர், அம்பேத்கர், பெரியார் என வேதமரபுக்கு எதிரான சிந்தனைப் போக்கிலிருந்து வருகிற அறிவு ஜீவிகள்.
பெரியார் எனக்குப் பத்து முட்டாள்களே போதும் என்றார். இந்து வருணாசிரம அறிவைப் பின்பற்றாதவர்களையே அவர் அவ்வாறு கூறினார்.
ஆகவே இந்திய ஞான மரபில் நாம் பாமரராக இருப்பதன் மூலமும் சிறந்த பாத்திரத்தை வகிக்க முடியும்.
என்னைப் பொறுத்த அளவில், அறிவாளியாக இருப்பதைவிட மகிழ்ச்சியாக இருக்க விரும்புபவன்.
ஃபிரெஞ்ச் புனைகதையாளர் பால் சாக். இவரை பலருக்கும் தெரிந்திருக்கும். கிட்டத்தட்ட தொண்ணூறுக்கும்
மேற்பட்ட நாவல்களை எழுதியவர். இரண்டாயிரத்துக்கும் அதிகமான கதாபாத்திரங்களை உருவாக்கியவர்.
19 ஆம் நூற்றாண்டை பால்சாக்கின் கண்டுபிடிப்பு எனக் கூறினார் ஆஸ்கர் வைல்ட். அந்தப் பால்சாக் கூறுகிறார்.
‘மகிழ்ச்சியின் ஒவ்வொரு கணத்திற்கும் அதிக அளவு அறியாமை தேவைப்படுகிறது!’
ஆகவே பாமரராக இருப்பதொன்றும் அவ்வளவு அவமானகரமானது இல்லை.
எனவேதான், ஞான மரபிலிருந்து விலகி எழுதும் இலக்கியவாதிகளை எனக்குப் பிடிப்பது போகிறது.
தம்பி கார்த்திகேயன் மாகா தன்னை எக்காலத்திலும் இந்திய ஞான மரபின் தொடர்ச்சி என்று claim செய்து கொண்டவரில்லை.
புத்தரைப்போல எளிய காட்சிகளின் உள்ளுறையாக விளங்கும் அசாதாரணங்களைக் கண்டுபிடிப்பவர். சாதாரண மக்களிடம் ஒளிந்திருக்கும் அசாதாரணக் குணங்களைப் படம் பிடிக்கத் தெரிந்தவர்.
மகா கலைஞன் என்பதன்
சுருக்கம்தான் மாகா. சுந்தரபாண்டியனை சூனா பானா என்போமே அப்படிதான் இந்த மாகாவும்! அன்பின் மிகுதியில் எதையும் நெடிலாக்கிவிடுவது தமிழர் இயல்பு.
அண்மையில் அவரது ‘அன்பின் நெடுங்குருதி’ தொகுப்பு வெளியானது. அதே நாளில் களம் புதிது விருது விழாவுக்காக சென்னையில் இருந்ததால் தம்பியின் நிகழ்வுக்குச் செல்ல இயலவில்லை.
நேற்றுதான் அவரது கவிதைத் தொகுப்பை வாசித்து முடித்தேன். நான் தெரிந்து வைத்திருப்பதை விடவும் இவரது கவிதைகள் என்னை அதிகம் உணரவைத்தன.
விரிந்த மலைச்சரிவுகளை ஒரு கழுகைப் போல் பார்க்கவும், பைத்தியக்காரர்களிடையே ஒரு முக்கியமற்ற நபராக வாழ நேர்வதின் சுவாரஸ்யத்தை அனுபவிக்கவும் இக்கவிதைகள் எனக்கு உதவுகின்றன.
இலையுதிர் காலம் முடியும் தருணம். நேற்றிரவு இவரது ஒவ்வொரு சொற்களும் என் கனவுக்குள் விழுந்தபடி இருந்தன.
இவர் மனிதர்களைப் பெரிதாகப் பிளவுபடுத்திப் பார்க்கவில்லை. அதாவது பாமரன் அறிவுஜீவி என்பதுபோல.
உண்மையில், புத்தரும், மகாவீரரும், ராமகிருஷ்ண பரமஹம்சரும், நாராயணகுருவும், விவேகானந்தரும், வள்ளலாரும், வந்தடைந்த இந்திய ஞான மரபின் உண்மையான அடுத்த கண்ணியைத் தன் கவிதையொன்றின் நான்கே வரிகளில் கண்டு பிடித்துவிடுகிறார் கார்த்திகேயன் மாகா.
“நீ
மனம் பிறழ்ந்தவனைக் கண்டால்
பழச்சாறு பனிக்கூழ்
வாங்கித்தருகிறாய்
நான்
டீ வடை சிகரெட்
வாங்கித்தருகிறேன்
இந்த ஆதாரம்தான்
நம் ஆலிங்கனத்தின்
ஆதிப்புள்ளி!”
இதுதான் அந்தக் கவிதை.
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் ரகம்தான் தம்பி. ஆனால் மொழிஎன்பது வெறுப்பை வளர்க்க அல்ல.
‘கன்னடமும் தமிழும்
தெரிந்த ஒருத்திக்குக்
கவிதை எழுதினேன்
இருவருக்கும் கை கூடுகிறது
மூன்றாம் மொழி’
அன்பை வெளிப்படுத்துவதுதான் என் மொழிக் கொள்கை! என்று, மிக இலகுவாகச் சொல்ல முடிகிறது இவரால்.
குழந்தைகள், நண்பர்கள், ஐஸ்க்ரீம், கிரிக்கெட், மது, காதல், என நம் நாளின் அனைத்து வாசனைகளையும் கொண்டவை இவரது கவிதைகள்.
அன்பின் நெடுங்குருதி என்றால் ஏசுநாதர், பகத்சிங், சே குவேரா, காந்தி ஞாபகம் வரும். இனி மாகா ஞாபகமும் கூடவே சேர்ந்து வரும்.
இந்தக் கவிதைகள், சில காலம் முன்பு மாயா ஏஞ்செலோவோ, பாப்லோ நெரூடாவோ எழுத மறந்தவை. என்பதால், இப்போது கார்த்திகேயன் மாகா எழுதியிருக்கிறார்.
- அன்பின் நெடுங்குருதி
ஆசிரியர் : கார்த்திகேயன் மாகா
வெளியீடு : யாப்பு வெளியீடு
வெளியான ஆண்டு : 2023
விலை : ₹ 100
நூலைப்பெற : 90805 514506 & 9629614647