cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 19 விமர்சனம்

அடைக்கலம்! : ஈஸ்டர் ராஜ்ஜின் “ஆன்மாவின் பெருந்துயர்” நூலை முன்வைத்து..


ணிமுத்தாற்றங் கரையில் வீற்றிருக்கிறான் சிவன். குடமுழுக்கெல்லாம் முடிந்து எட்டிப்பார்த்தேன். வழக்கமாக சிவத் தலங்களின் கருவறை இருளாக இருக்கும். இங்கும் அப்படிதான். இருளை சிவபக்தர்கள் ஞான இருள் என்கிறார்கள். எது இல்லாததோ அதுவே சிவன். சைவ மரபில் இதற்கு நிறைய விளக்கங்கள் தருகிறார்கள்.

சீர்காழி எல்.எம்.சி யில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஆங்கில வகுப்பில் ஒரு நாள். சம்பந்தம் சார் ‘And all I loved, I loved alone.’ எட்கர் ஆலன் போ-வின் வாசகத்தைக் கூறினார். ‘நான் நேசித்த அனைத்தையும், நான் தனியாகவே நேசித்தேன்’.

இந்த உலகத்தில் சில விசயங்கள் இருக்கின்றன. அதை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாது. ரசிக்க முடியாது. சேக்கிழார் ஒரு காவியம் எழுத விரும்பினார். அவருக்கு முதல்வரி கிடைக்கவில்லை. சிவன் கோவில் கருவறையில் சேக்கிழார் நிற்கிறார்.
‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்’ என்கிற வரியை அந்த கருவறையின் இருள் தருகிறது.  இருள்தான் இவ்வுலகின் ஆதி. இருள்தான் ஞானம். தாயின் கருவறை இருள். இருளில் இருந்துதான் உயிர்கள் தோன்றின.

And all I loved, I loved alone. என்பது அன்று சேக்கிழாருக்கும் பொருந்தியது. அந்த வயதில் எனக்கு சம்பந்தம் சார் சொன்னது எதுவும் விளங்கவில்லை.

‘உலகெலாம் உணர்ந்து
ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய
நீர்மலி வேணியன்
அலகில் சோதியன்
அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி
வணங்குவாம்’

இன்று இந்தப் பாடலை மணிமுத்தாற்றைத் தழுவி வரும் காற்று அசரீரியாக கொண்டு வருகிறது.

கம்பனும்கூட இப்படிதான். ‘உலகம் யாவையும் தாமுளவாக்கலும்’ எனத் தொடங்குகிறான். ‘முதற்றே உலகு’ என வள்ளுவரும் குறளைத் தொடங்குகிறார். ‘உலகத்தில்’ தொடங்குகிற பரந்த பார்வை தமிழர்க்கு வாய்த்திருந்தது.

I loved alone என்கிறாரே எட்கர் ஆலன் போ. இந்த வாசகம் சேக்கிழாருக்கு கம்பருக்கு வள்ளுவருக்கு எல்லோருக்கும் பொருந்துவதுதான்.

மாலை வீடு திரும்புகிறேன். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிபவர் தம்பி ஈஸ்டர் ராஜ். தன் ‘ஆன்மாவின் பெருந்துயர்’ கவிதை நூலை அனுப்பியிருந்தார். பூவிதழ் உமேஷ் உங்களுக்கு அனுப்பக் கூறியிருந்தார்! என்றார் அலைபேசியில்.

பொன்னுக்காகவும் பொருளுக்காகவும் டாலருக்காகவும் டாம்பீகத்துக்காகவும் தவம் கிடக்கிற உலகம். வழக்கமான உலகம். சேக்கிழாரைப்போல் ஒரு சொல்லுக்காக தவம் கிடக்கிற கவிமரபில் ஒருவர் ஈஸ்டர் ராஜ்.

ழான் போத்ரியா கூறுவதுபோல ‘அதிகமான தகவல்களும், குறைவான அர்த்தமும் உள்ள உலகில் நாம் வாழ்கிறோம்’  ஈஸ்டர் ராஜ் போன்றவர்கள் குறைந்த சொற்களுக்காகவும் நிரம்பிய அரத்தங்களுக்காகவும் காத்திருக்கிறார்கள்.

நானும் ஒரு சம்சாரிதான். மாலையில் கடைகளுக்கு செல்ல வேண்டும். உப்பு, புளி, துவரம்பருப்பு, சர்க்கரை, அரிசி, பால் வாங்க வேண்டும். பத்து பேரையாவது பார்த்து சிரித்து வைக்க வேண்டும். ஸ்டாலினைப்பற்றி, அண்ணாமலையைப் பற்றி, அவர்கள் சொல்வதற்கு, காது கொடுப்பதாகப் பாவிக்க வேண்டும். வாழ்தல் பொருட்டு இந்த routine நமக்கு பழகிவிட்டது.

வழக்கம்போல அய்யர்பவனிலோ , வள்ளலாரிலோ காஃபி குடிக்கும்போது, பக்கத்தில் அமரும் மத்தேயு அர்னால்ட் ‘கலையில்தான் இன்னும் உண்மை உள்ளது. அங்கே அடைக்கலம் புகு!’ என்பார்.

இன்று, அடைக்கலம் புகுந்த இடம் ‘ஆன்மாவின் பெருந்துயர்’. ஈஸ்டர் ராஜிடம் வாழ்வு குறித்த புதிய பார்வைகளும் புழங்கித் தேயாத சொற்களும் இருக்கின்றன.

‘மகள் வயதில் நின்ற நான்கு பூவரசு மரங்கள்’ என்று எழுதுகிறார். எனக்குத் தெரிய பூவரசு மரம் neuter gender தான். இப்போது சம்பந்தம் சார் சொன்னதுதான் ஞாபகத்துக்கு வரைகிறது. And all I loved, I loved alone. இப்படி பிரத்தியேக அன்பு இருக்க வேண்டும். அன்பு என்பது பேரன்பு பெருநேசமில்லை. அவை வெறும் சொற்கள். அன்பு ஒரு பூவரசை பெண்ணாக மகளாகப் பார்பது. சேக்கிழாருக்கு கருவறை இருளில் சிவன் முதற் சொல் அளித்தான். ஈஸ்டர் ராஜுக்கு ஒரு பூவரசு மரம் சொற்களைத் தருகிறது.

‘நிலம் கர்ப்பமடையவில்லை என்று கண் கலங்குறான்’ அடடா.. ‘யாதார்த்தத்தில்
வார்த்தைகளுக்கு நேர்த்தியான ஒரு திகில் இருக்கிறது. அதன் மூலம்தான் அது மனதைக் கவர்கின்றன!’ என்றவரும் எட்கர் ஆலன் போதான். இதை இவரது ‘வாழ்ந்து கெட்டவர்கள் வீடு’ கவிதையில் முழுவதும் அனுபவித்தேன். அந்தக் கவிதையை இங்கே பகிர்கிறேன்.

“வாழ்ந்து கெட்டவர்களின்
வீட்டில் இருக்கிறது
முகங்கள் அற்ற கண்ணாடி
இன்னும் இருக்கிறது என்ற சொல்
மறக்கப்படாத சில நினைவுகள்
ஏக்கப்பெருமூச்சு
துரோகத்தின் வலி
நன்றியுள்ள ஒரு நாய்
தூரப்போய் வாழ வேண்டும்
என்ற குமுறல்
இறைவனின் புகைப்படம்
முந்தானையில் துடைத்த கண்ணீர்”

இந்தக் கவிதையை வாசித்தபோது, அன்பு மறுக்கப்பட்ட வீதிகளிலிருந்து நகர்ந்து சென்று , சிறுவயதில் மகிழ்ந்திருந்த தன் பாட்டியின் வீட்டு சன்னலைத்திறந்து பார்த்த கமலாசுரையாவின் கவிதைதான் ஞாபகம் வருகிறது.

There is a house now for away where once
I received love.. that woman died,
………
How often i think of going
There,to peer through blind eyes of windows or Just listen to the frozen air
Or in wild despeir,pick an armful of
Darkness to bring it here to lie

கமலா சுரையாவின் கவிதை.. நான் வாழ்ந்த கிராமத்து வீடு.. எல்லாம் ஞாபகத்துக்குவர, விழிகள் நனைகின்றன.

‘இந்த ஈரம்
பூவில் இருந்தால் என்ன?
நீரில் இருந்தாலென்ன?
கண்ணில் இருந்தால் என்ன?
இருக்கட்டும்.’

என்கிறார் தம்பி ஈஸ்டர் ராஜ். கலையைத் தவிர்த்து நாம் அடைக்கலம் புக வேறோரிடம் எங்குதான் இருக்கிறது?


நூல் விபரம்
  • ஆன்மாவின் பெருந்துயர்

ஆசிரியர் : ஈஸ்டர் ராஜ்

வெளியீடு :  வம்சி பதிப்பகம்

வெளியான ஆண்டு :   முதல் பதிப்பு :   ஜனவரி-  2023

விலை : ₹ 150

 

 

About the author

கரிகாலன்

கரிகாலன்

கடலூர் மாவட்டம் மருங்கூரில் பிறந்த கரிகாலன்; தொன்னூறுகளிலிருந்து தமிழிலக்கியத்தில் இயங்கிவருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கும் இவர் ஆசிரியராகப் பணிபுரிகிறார். இவர் எழுதிய சில கவிதைப் படைப்புகள் ஆங்கிலம், இந்தி, வங்காளம் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ‘களம் புதிது’ என்னும் இதழை நடத்தியுள்ளார்.
அப்போதிருந்த இடைவெளியில், புலன் வேட்டை, தேவதூதர்களின் காலடிச் சத்தம், இழப்பில் அறிவது, ஆறாவது நிலம், அபத்தங்களின் சிம்பொனி, தாமரை மழை ஆகியவை இவரது கவிதைத் தொகுப்புகள். தேர்ந்தெடுக்கப்பட்ட ‘கரிகாலன் கவிதைகள்’ தொகுப்பாக உயிர் எழுத்து வெளியீடாக வெளிவந்துள்ளன. ‘நிலாவை வரைபவன்’ என்னும் நாவல் உள்பட பல படைப்புகளை எழுதியுள்ளார்.

இவரது மனைவி சு.தமிழ்ச்செல்வி தமிழின் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website