வாழ்வெனும் பெருவெளி நாம் நினைப்பதைக் காட்டிலும் சிக்கலானது. மகிழ்ச்சியோடு கடக்க நினைக்கும் போது, துன்பம் சூழும் போது, கடக்க முடியவில்லை என்று தவிக்கும் போது நீரில் தத்தளிக்கும் மனிதனுக்கு மரத்துண்டு ஒன்று அகப்பட்டது போன்று மகிழ்ச்சி வந்து சேரும். மேலும் மனிதனுக்கு மகிழ்ச்சி ,துன்பம் என்ற இருமைகள் மட்டுமே இருப்பதில்லை. வெவ்வேறு கலவையான உணர்வுகள் வாழ்வைச் சூழ்கின்றன. அம்பிகா குமரன் கவிதைகள் இவற்றையெல்லாம் நமக்குக் கடத்துகின்றன.
“காலம்” கவிதைத் தொகுப்பு ஒரு வரையறைக்குள் அடைபடாமல் சமூகம் -தனி ஒருவர் அதிலும் குறிப்பாகப் பெண் என்று ஊடு பாய்கிறது. சிலநேரம் பால் அடையாளமாக மாறி பேசுகிறது. நூல் அறிமுகவுரையில் கவிஞர் யவனிகா ஸ்ரீராம் பெண்ணிலைவாதம் பேசும் கவிதைகள் என்று அறிமுகம் செய்தாலும் கூட, நூல் அத்தகைய வரம்புக்குள் நின்று பேசவில்லை.
அம்பிகா குமரன் கவிதைக்குள் நீங்கள் குறியீடுகளையும் படிமங்களையும் பார்க்காமல் கடக்க முடியாது.
“ஆழ்துளைக் கிணறுகளின்
அந்தரக் கண்களிலிருந்து கசிவதுதான் மழை”
என்ற வரிகளை வாசிக்கும் போது மழை என்ற படிமம் புதிய கோணத்தில் நம் கண்முன்னே விரிகிறது.
கவிஞர் பல நேரங்களில் பிரதியைத் தன்னிலையிலிருந்து வெளிப்படுத்துகிறார் அது அவரே தனக்கு அளித்துக் கொண்ட மதிப்பீடாக வெளிப்படுகிறது.
“நான் நடந்த பாதையின்
மீதமுள்ளவை
ஈரமான தடங்கள்”
இது அவர் இதுவரை வந்த வாழ்வினையும் இனி வாழப் போகும் வாழ்வினையும் சுட்டியபடி செல்கிறது.
கவிஞரின் பிரதியைத் தன்னிலையாகவும் தன்னிலை கடந்த வேறொன்றாகவும் நீங்கள் வாசிக்க முடியும். மனிதனின் அகவாழ்க்கை பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாக விரிகிறது. அது பல சிடுக்குகளின் ஊடே பயணப்படுகிறது. அன்றாட வாழ்வின் துயரங்கள் நெருக்கடிகள் ஆசைகள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் என்று பலவும் உண்டு. இவற்றில் பலவற்றைக் கவிஞரின் எழுத்துக்கள் படைக்கிறது.
“எதிலும் ஒட்டாமல்
விலகி விலகி ஓடும் மனங்களில்
தீப்பிடிக்கின்றன”“புரியாத மனம்
இயற்கையின் விதிகளுக்குள்
இருண்மையாய்
மனிதனை மிரட்டுகிறது”
அகவாழ்க்கை அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக அமையும். இதில் கவிஞர் பெண்ணின் தன்னிலையாக மாறும் போது அது வேறொன்றாக வெளிப்படுகிறது.
கிடைக்காத அன்பு, நிறைவேறாத காதல், பிரிவாற்றாமை, ஏமாற்றம், பிரிவின் வேதனை கையறு நிலை, நிறைவேறாத காமம் என்று அகவாழ்க்கை ஊடறுத்துப் பாய்கிறது.
“ஆசையற்ற ஆசையால்
பலிவாங்கத் துடிக்கிறது
இவ்வாழ்வு”“காய்ந்த சுள்ளிகளைப் பொறுக்கி வைத்திருக்கிறேன்
வயிற்றின் வெப்பத்தில் விளக்கேற்றச் சொல்கிறார்கள்”
என்று பெண்ணின் தன்னிலையாகப் பேசுபவர்; சில நேரங்களில் பெண்ணின் பாடுகளைக் குறித்து பொதுவான புறநிலை சுட்டலாகவும் மாற்றுகிறார்.
“புரையோடிய சமூகக் கண்களை
சற்று மூடிக் கொள்ளுங்கள்.பொதுக்கூட்டத்திற்காக
அழைத்துவரப்பட்டவள்
வேன் சந்துக்குள் நின்றபடியே
சிறுநீர் கழித்துக்கொள்ளட்டும்”
என்று அனல் மிகுந்த வார்த்தைகளால் சுட்டுகிறார்.
மனிதன் பெண் என்ற இருப்புகளைத் தாண்டி சமூகம் ,அரசியல் ஆகியவற்றிலும் பல இடங்களில் ஊடாடுகிறார்.
“வாரச் சந்தைகளில்
மலிந்து கிடக்கும்
வடக்குக் குளங்களில்
புதைந்து கிடக்கின்றன
பகுத்தறிவற்ற
தாமரைத் தடங்கள்”
என்று குறியீடுகள் வழியே சமூகத்தைப் பேசுகிறார். அதில் தனக்கான சார்பை அவர் வெளிப்படுத்தவும் செய்கிறார்.
இப்படி வெவ்வேறு தளங்களில் புகுந்து வெளியேறும் அவரின் எழுத்து; பல இடங்களில் நான் லீனியராக அமைகிறது. ஒன்றைப் பேசு பொருளாக்கும் போதே வேறொன்றுக்குத் தாவுகிறது. இது வாசகனைச் சோர்வுற வைக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்விடத்தில் பேராசிரியர் அ.ராமசாமி கூற்றைக் கவனத்தில் கொள்ளலாம். ஒரு கவிஞரின் நூலையே விதந்து ஓதுவது அல்லது ஒரு கவிஞரின் மொத்தப் படைப்பையுமே வியப்பது என்பதைத் தவிர்த்துத் தனித்த கவிதைகளின் சிறப்பின் மீது மட்டுமே தான் கவனத்தைச் செலுத்துவதாக ஓரிடத்தில் அவர் கூறுகிறார். இந்த வழிமுறையை நாம் ஓர் அளவுகோலாகக் கொள்ள முடியும். அவ்வாறு இல்லையெனில் விமர்சனம் போலித்தனத்தை எட்டி விடும்.
“காலம்” நூலில் கவிஞர் ஒரே விதமான படைப்பு வடிவங்களைக் கையாளும் போது குறிப்பாக இருமைவாதம் முன்னிலை வகிக்கும் கவிதை வடிவங்களைக் கையாளும் போது சலிப்பும் வறட்சியும் பல இடங்களில் வருகிறது. ஆனால் இது தவிர்க்க முடியாதது என்றும் தோன்றுகிறது.
“சாயம் பூசாத எழுத்தின் வரம்
காலம் மாறாத பூக்களாகிறது”“நோக்கத்தைத்
துடிப்பான நாட்களிடம்
கொடுத்து வாழ்கிறேன்”
என்ற வரிகள் பொதுவாக மட்டுமின்றி கவிஞருக்கும் பொருந்தும்.
நூல்: காலம்
நூல் வகைமை: கவிதைத் தொகுப்பு
ஆசிரியர் : அம்பிகா குமரன்
வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்
வெளியான ஆண்டு : 2022
பக்கங்கள்: 104
விலை: ₹ 120