நண்பர் நந்தாகுமாரின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு “வெறுமை ததும்பும் கோப்பை” தமிழ்வெளி டிசம்பர் 2023 வெளீயிடு. காமம் செப்பாதுக் கண்டதை மொழிய வேண்டுமென்றால் இந்தத் தொகுப்பை நான் வாசிப்பேன் என்றோ அல்லது அதற்கான மதிப்புரையை எழுதுவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. காரணம் இதுவரை வெளியான அவரது தொகுப்புகளில் காமத்தைக் கலையாகப் பாவிக்கும் கவிதைகளைப் பற்றி எழுதாமல் இதுவரை நாசுக்காகத் தப்பித்து விட்டேன். அந்தக் கவிதைகள் சார்ந்து எழுதக் கூடாதென்று இல்லை. வெளிப்படையானத் தயக்கமிருந்தது. அதென் அகங்காரத்தால் தானோ என்பதை இந்தத் தொகுப்பை வாசிக்கும் போது உணர்ந்தேன். இப்போது பேரிளம் பெண் என்ற பருவத்தையும் கடந்துவிட்டோம் என்ற அந்தஸ்தினாலோ அல்லது இந்தத் தொகுப்பின் நோக்கமான தன்னிலைக் கடந்த பெருவெளியை எட்டிவிட்டதாலோ துணிந்து எழுத அமர்ந்த போது எழுந்த உணர்வை அவர் வார்த்தைகளில் சொல்வதென்றால்
” நாணம் எனும் மீச்சிறு துணி கொண்டு
எப்படிச் சர்வத்தையும் மறைக்கிறோம்”
தாந்தீரிகம் என்பது ‘தான்’ என்ற அகந்தையைக் கடப்பது என்ற பொருளைக் கவிஞர் சமயவேல் அவர்களின் முன்னுரையில் மூலம் அறிகிறேன். தான் என்ற அகந்தையைக் கடப்பது என்பதில் தனது பால்நிலையைக் கடந்து போகுதல் என்பதும் அடங்கும். அவ்வாறே பக்தியிலக்கியங்கள் பேசும் நாயகி நாயகன் பாவமும் அதில் காட்டப்படும் கடவுள் மீதானக் காதல் காமம் புனிதமடைகின்றன. தாந்தீரிகம் என்பது தனித்தலையும் தன்னை இந்தப் பேரண்டத்துக்கு ஒப்புக் கொடுக்க அன்பின் உச்சத்தைக் கொண்டாவது என்று நான் புரிந்து கொண்டேன். தாந்தீரிகத்தைப் பற்றிய குறிப்புகளைக் கவிஞர் தொகுப்பின் தொடக்கக் கவிதைகள் சிலவற்றில் கொடுத்திருக்கிறார். அந்தப் புள்ளிகளை இணைக்கும் போது தாந்தீரிகம் முடிவற்ற பேரன்பை, கடவுளை அடையும் வழிகளில் ஒன்றாகக் காதலைச் சொல்கிறது. ஆனால் அதற்குச் சரியான துணையுடன் அத்துணையுடனான அணுக்கமும் அவசியம் என்று புரிகிறது. அணுக்க உறவு முன்னரே நாம் பொய்மைகள் எதுவும் போர்த்தாதமல் இருக்கமுடியும். அப்படிப்பட்ட அணுக்க உறவுகளே தன்னைக் கடந்து தன் இணையும் தானும் ஒன்றே என்ற ஆகவும் அனுமதிக்கும். அதுவே பாவனையற்ற நிபந்தனையற்ற அருட்பெரும் கருணையின் தனிப்பெரும் ஜோதியோடு நம்மைக் கலக்கும் வழி நோக்கி இட்டுச் செல்லும். இந்தப் பேரின்பப் பெருங்காமத்தை நந்தாகுமாரன் பின்வருமாறுச் சொல்கிறார்.
“நீயும் நானும்
இரு வேறு ஒரு”
காமத்தைக் கொண்டாடுதல் அதன் மூலம் பேரின்பை எட்ட எத்தனித்தல் என்ற ஒற்றை வரிக்குள் இந்தத் தொகுப்பின் கவிதைகளை அடக்கிவிட முடியுமா? தெரியவில்லை. அதைத் தாண்டிப் பல விஷயங்களை உள்ளடக்கியிருக்கிறது. அப்படியான விஷயங்களையும் தொட்டுக்காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். ஆனால் இக்கவிதைகளில் பெரும்பான்மையானவைக் காமத்தைக் கொண்டாடுகிறது. காமம் அபுனிதமானதாக அல்லது வெளிப்படையாகப் பேசத் தேவையற்ற ஒன்றாகவே இந்தியக் குடும்ப மதிப்பீடுகள் சொல்லித் தருகின்றன. ஆனால் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னால் அது கொண்டாட்டத்துக்குரிய ஒன்றாக இருந்திருக்கிறது. சித்தனவாசல் ஓவியங்கள், அஜந்தா எல்லாரோ குகைச் சிற்பங்கள், சிறுதெய்வ வழிப்பாட்டுக் கோவில்களில் சுற்றுச் சுவர் சுதைச் சிற்பங்கள், கோபுரச் சிற்பங்கள் என்று இன்றைக்கும் தொடரும் கலைக் காமம். அதையே சங்க இலக்கியத்தின் அகப்பாடல்களும், பக்தி இலக்கியமும் பாடிக் காட்டியிருக்கின்றன. காமமில்லாக் காதல் அன்பான கருணை வடிவெடுத்து நின்றுவிடவல்லது. காதல் இல்லாத காமம் காமத்தில் சேர்க்கவே முடியாத ஒன்று. அது கொலைவெறியை மட்டுமே வளர்தெடுக்கும். காதலும் காமமும் இணைந்த ஒன்றே முழுமையான காதல். “ஒரு குழந்தையைத் தூக்கிக் கொள்ளலாமல் எவ்வளவு நேரம் கொஞ்ச முடியும்” என்ற கேள்விக்கான விடைக் காதலும் காமமும் இணைந்த ஒரே உணர்வு என்பதே. இந்தத் தொகுப்பில் ஏராளமான படிமங்கள் காதலைக் காமத்தைக் கொண்டாடுகின்றன.
“என்னைப் பிழியப் பிழிய
உனக்குப் பிடித்த ‘சிட்ரஸ்’ பழ வாசனை வருகிறது
உன்னைப் பிழியப் பிழிய
எனக்குப் பிடித்த மல்லிகை மலர் வாசனை வருகிறது”
என்பது
“உன் இதழ்களின் எடைக்கு எடை என் இதழ்களை வைத்தேன்
இப்போது நாம் இருவருமே எடை இழந்து கொண்டிருக்கிறோம்
நம்மைச் சுற்றிக் கொள்ளும் இந்த வெற்றிடக் களியின்
மோனத்தில் மூழ்கவும் நீந்தவும் மிதக்கவும் செய்கிறோம்”
என்ற இடத்துக்கு நகரும் போது அந்தக் கவிதை வரிகள் பிறவாப் பெருநிலையைக் கணநேரமெனும் அடைந்துவிடத் துடிக்கும் உணர்வைக் கடத்துகிறது. அப்படி நிகழும் போதும், இல்லாத போதும் அவை தீரா ஏக்கமாகித் தொடர்கிறது. இந்த மாயவட்டத்துக்குள் சிக்கி மறுபடி மறுபடித் தொட்ட உயரத்திலிருந்து இன்னொரு உயரத்தைத் தொடுக்கிறது அல்லது தாழப் பறக்கிறது. உயர்வோ தாழ்வோ அது கொடுக்கும் வெறுமையைப் போக்க மறுபடி அதே கோப்பைக்குள் வெறுமையை நிறைக்கிறது. அப்போதது எங்கிருந்து முகர்ந்து எடுக்கப்பட்டதோ அந்தக் குவளை எப்போதும் நிறைந்தே இருக்கிற அதிசயத்தை இப்படிச் சொல்கிறது.
“எவ்வளவு மொண்டாலும் மோகத்தின் திருக்குவளையில்
நிறை குடக் கூத்து தான் கொண்டாட்டமாகிறது”
காமமும் காதலும் அது தரும் களிப்பையும் பல கவிதைகளில் பதிவு செய்யும் கவிஞர், வெல்லாத காமம் கொடுக்கும் வெறுப்பையோ வெறுமையையோ அது போல ஒன்றை அதையும் பதிவிடத் தவறவில்லை. “துரதிர்ஷ்டத்தின் ஆசீர்வாதம் / உடலெங்கும் பரவுகிறது ” என்றும் ” தலையில் தவழும் க்ரீடம்” விழும் எழும் என்ற படிமத்திலும் அதைப் பதிவிடுகிறார். “பழுத்த பலாக்களின் பல்லாயிரம் முலை காம்புகளும்” என்ற சொற்றொடரிலும் அதே சாயலே பூசியிருக்கிறதோ என்பது எனது அய்யம். அப்படி வெல்லாக் காதல் இப்படியொரு விபரீத எண்ணத்துக்கும் வழி வகுக்குமோ என்பதும் என் சந்தேகம் மட்டுமே, ஏனெனில் காமம் கொல்லும் என்பதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் உள்ளன.
”ஒரு ஆட்டுக்குட்டியை மடியிலிட்டுக் கொஞ்சியபடியே
அதன் ஈரல் சுவையின் உப்பு காரப் பதத்தை
உணரும் அளவு மட்டும் பிறழ்ந்திருக்கிறது”
நந்தாகுமாரனுக்குச் சொல்லின் மீது மாளாதக் காதலுண்டு. சொல்லையே உடல் போல் பாவத்து எழுதிய கவிதைகள் பற்பல அவரது முந்தைய தொகுப்பிலும் உண்டு. இந்தத் தொகுப்பிலும் “சொல்லை திரும்பிப் படுக்க வைத்தால் வரும் அர்த்தம்/அந்தச் சொல் தானே திரும்பிப் படுக்கும் விதத்தில்” என்ற இடத்திலும் “நம் உடல் சொற்கள்” என்ற இடத்திலும் இன்னும் பல இடத்திலும் சொல்லின் மேல் உயிரை ஏற்றி விடுகிறார். அது மட்டுமில்லது வழக்கொழிந்த சில சொற்களை இந்தத் தொகுப்பில் தன் கவிதைக்குள் மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார். “அதர்” என்ற வார்த்தையைக் கவிதையுள் பயன்படுத்துகிறார். அதற்கு “வழி” என்ற பொருள் உண்டு எனவும் அந்த வார்த்தைப் பயன்படும் புறநானூற்றுக் கவிதை வரியை அடிக்குறிப்பாகப் பயன்படுத்தியுள்ளார். அந்தச் சொல்லை மட்டுமல்லாது அது சம்மந்தப்பட்ட புறநானூற்றுப் பாடல் வரியை ரசிக்க வைப்பதோடு அங்கிருந்துத் தாவி அந்த வரிக்குரிய பாடலை ஆராயும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. அதே போல் கமுகம் என்ற சொல்லையும், அலர், அலர்தல் போன்ற சொற்களையும் கவிதையில் தகுந்த இடத்தில் பயன்படுத்தியிருக்கிறார். அலர்தல் என்ற வார்த்தைக் கலிதொகையிலும் வருவதைக் கலித்தொகை வரியோடு கவிதையின் அடிக்குறிப்பில் இருக்கிறது. மேலும்
“இட்ட இதழ்கள் நிகழ் காலத்தில்
எடுத்த முத்தம் கடந்த காலத்தில்”
என்ற வரிகளில் “இட்ட அடி இறந்த காலத்தில்/ எடுத்த அடி எதிர்காலத்துக்கு” என்று கவிஞர் அப்துல் ரகுமானின் “பித்தன்” என்ற தத்துவ உரை நடைக் கவிதைத் தொகுப்பின் ‘நிகழ்’ கவிதையில் வரும் வரிகளைத் தன் கவிதையில் பிரதி செய்திருக்கிறார்.
அறிவியலைக் கவிதைக்குள் பயன்படுத்தும் விந்தையை முந்தைய தொகுப்பில் பார்த்திருக்கிறேன். இந்தத் தொகுப்பிலும் சூரியக் கதிர்களை “தன் ‘விட்டிமின் டி’ பார்வை” என்று எழுதிய இடத்தில் அதை மீண்டும் உணரச் செய்கிறார். அறிவியல் தொழில்நுட்பம் விஞ்ஞானம் எல்லாம் கவிதையாவது பிறமொழிகள் பலவற்றில் பார்த்திருக்கிறேன். நண்பர் சித்தார்த் வெங்கடேசன் மலையாளத்தில் ஒரு கவிதை மென்பொருளின் ஒரு மொழியான c++ வடிவில் எழுதப்பட்டிருந்ததை அனுப்பி வைத்திருந்தார். இப்படிக் கவிதைகளில் பல்வேறு வடிவங்களில் ஆராய்ச்சித் தொடர்ந்து பலரால் செய்யப்பட்டாலும் அதை அற்புதமான கவிதையாக மாற்ற ஒருசிலரால் மட்டுமே முடிகிறது. அது கவிஞருக்கு நன்றாகவே வருகிறது. இந்தத் தொகுப்பில் இன்னும் ஒருபடி மேலேறி மாயவித்தைப் போலாகிறது. பிரத்தியோகமாயக் கணினி அறிவியல் அறிவைக் கவிதையாக்குமிடக்கும் அபாரம். இவர் பயன்படுத்தும் அல்லது உருவாக்கும் கணினிக் கலைச்சொற்களை வியக்கக்காமல் கடக்க முடிவதில்லை.
“ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு தாவத் தூண்டும்
மீயுரைப் பக்கம் நீ”
மீயுரைப் பக்கம் – சுட்டிகள் மூலம் அடையப்படும் வலைப்பக்கங்கள் என்ற இடத்தை வாசித்துவிட்டு மறுபடிக் கவிதை வரிகளை வாசிக்கும் நமது மனவெளியில் நிகழும் மாயஜாலம் அலாதியானது. அதே போல மேலும் பல வார்த்தைகளை இவரது கவிதைகளில் காண முடிகிறது திருகு மலர் – screwpine flower, மேகக் கணிமை – Cloud Computing, அதிஅடுக்கு metaverse, ஒத்தின்னியங்கள் Symphonies. அவை வெறும் அழகுக் கலைச் சொற்களாக அறிவியல் சுட்டும் வார்த்தைகளாக நில்லாமல் கவிதையின் ஒளியாகி ஒளிரும் போது அது தரும் கவிதானுபவம் வேறு தளத்தில் இருக்கிறது. உதாரணத்துக்குப் பின் வரும் கவிதை வரிகளைச் சுட்டலாம்.
“உன் ‘ரேடியோ’ முள்ளின் சஞ்சாரம்
என் குகைக்குள் நுழைந்து தேடுவது
எனக்குள் குடியிருக்கும்
என் வௌவால்களின் ‘அல்ட்ராசானிக்ஸ்’ அறிவை”
நீயுட்டனின் மூன்றாம் விதி வினைக்கு எதிர்வினை. ஆனால் இவர் கவிதை வரிகளில் நதித் தன் போக்கில் நகர்வதை முதலில் பிறந்த நதித்துளிகளைப் பின்னால் ஊற்றெடுக்கும் துளிகள் நகர்ந்துவதால் நகர்கிறது என்ற இடத்தை வாசிக்கும் போது ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. ஆம் நதித் தானாவோ கடல் இருக்கும் திசை நோக்கி நகர்ந்தப்படும் ஈர்ப்புவிசையாலோ நகர்வதல்ல
“பின் வரும் நதியின் இயக்கத்தில்
முன் செல்லும் நதி இயக்கப்பட்டு”
நகர்கிறது. தத்துவம் பேசும் கவிதை வரிகளையும் நந்தா செதுக்கியிருக்கிறார். “உண்மை ஒரு கருத்து/ பொய்யும் ஒரு கருத்து/ ஞானம் ஒரு கருத்து” என்ற மூன்று வரிகளில் அவர் சொல்வது மாபெரும் தத்துவம். உண்மையும் பொய்யும் அதை அறியும் ஞானமும் கருத்தாகி நின்றுவிடும் காயமே இது பொய்யடா என்ற தத்துவத்துக்குச் சற்றும் குறைந்ததல்ல. “அப்பளத்தை எந்தத் திசையிலிருந்து” உடைக்கலாம் என்பதை இவர் இணைப்பது காதல் விளையாட்டோடு, ஆனால் அது நம்மை ஒரு தத்துவவெளியில் நம்மைச் சிறிது நேரம் சஞ்சாரம் செய்யவிடுவகிறது.
“பாற்கடலை கடைவதற்கு
தேவரும் தேவை அசுரரும் தேவை
சமுத்திர மந்தனத்தில்
அமுதமும் வரும் விஷமும் வரும்
என்பது மீண்டும் நிரூபணமாகிறது”
என்று காதல் விளையாட்டு அமுதமும் விஷமானத் தத்துவத்தோடும் புராணக்கதையோடும் இணைகிறது.
இசையும் விளையாட்டும் இவரது காதல் விளையாட்டுப் பக்கவாத்தியங்களாகின்றன. டாஸ் போட்டு விளையாட்டை ஆரம்பிக்கும் காட்சிகள் வருகின்றன. சதுரங்கத்தில் வரும் ராஜா, ராணிப் படிமம் வருகிறது. ராஜாவும் ராணியும் ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டு சாய்ந்து கொள்ளகிறார்கள் ஒருவர் மீது ஒருவர். காதல் சதுரங்கக் களத்தில் சிப்பாய் ராஜா ஆகும் விந்தையும் நிகழ்கிறது. ஒரு கவிதையில் பளு தூக்கும் போட்டியாளர் ஆகித் தன் இணையைப் பளு தூக்கிப் பார்க்கிறது கவிதை. 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடிப் பார்க்கிறது. இசையில் பல்வேறு ஓசைகளால் பல கவிதைகள் நிறைந்திருக்கின்றன. மேலும் இசை வடிவத்திலேயே எழுதப்பட்ட கவிதைகளும் இருக்கின்றன. காதலின் முகமூடி நடனம் (The Love Masquerade) – முதல் ஆறு ஒத்தின்னியங்கள் (The First Six Symphonies) என்ற தலைப்பிட்டத் தொகுப்புக் கவிதை ஒவ்வொற்றிலும் இசையும் இசை வாத்தியங்களும் நாயகி நாயகன் பாவம் கொண்டு பக்தி இலக்கியத்தையும் விஞ்சப்பார்ப்பார்க்கிறது. அதில் ஒரு சொட்டு இங்கே.
“நம் உள்ளங்கள் ஒரே சமயத்தில்
வெவ்வேறு குழலிசை கருவிகளாக உருமாறி
ஒவ்வொன்றும் மற்றதன் இசையை ஊதுகின்றன
‘ட்ரம்பட்’, ‘டிராம்போன்’, புல்லாங்குழல், ‘க்ளேரிநெட்’, ‘ஓபோ’
எல்லாம் ஒன்றாகிக் கலந்து ஒன்றுமே யில்லை என்றாகின்றன “
கவிதையின் அழகு வழக்கமான விஷயத்தை வித்தியாசமாகச் சொல்லுதல். மூடியவிழிகள் என்று சொல்வது இயல்பு ஆனால் அது நந்தாவின் கவிதையில் பின்வருமாறு ஓவியமாய்த் தீட்டிக் காட்டப்படுகிறது.
இமைகளின் கோடுகளுக்கும்
புருவங்களின் கோடுகளுக்கும்
இடையே உள்ள மூடிய கண்களின் ‘சிலே ட்டில்’
உணர்வுகளின் ஓவியங்கள்
மறைந்து தோன்றும் மசியால் வரையப்படுகின்றன
மழையை எழுததாதக் கவிஞரே இல்லை. மழைக்கும் காமம் சூல் கொண்ட காதலுக்கும் நெருக்கியத் தொடர்ப்புண்டு ஆனால் நந்தா மழையை எழுதும் விதம் வித்தியாசமானது. மழைத்தூரலைக் குழந்தைக் கால்கள் என்றுச் சொல்லும் உவமை அபரீதமானது. இதுவரை யாரும் சித்தரிக்காதது.
‘தார்ப்பாலின்’ கூரையின் மீது
நடை பயில முயன்று சறுக்கி விழும்
முதல் மழை யின் குழந்தைக் கால்கள் கொண்டு
மேலும் அதே குழந்தை மழையைத் தடியூன்றி நடக்கும் வயதேறிவனாக மாற்றுகிறார். “வானம் தன் மழைத் தடிகள் ஊன்றி / பூமியில் நடக்கும் பிரம்மாண்ட நாடகத்தின்” . மழையைக் குடை என்ன செய்ய முடியும் ? “விரித்த குடை / தரித்த மழையை / திரித்துப் பெய்யவிட்டது ” என்ற இடத்தில் மழைக்கு வேறு அவதாரம் கிடைத்து விடுகிறது. மேலும்
“ஜன்னலை ‘கிட்டார்’ கம்பிகளாக மாற்றி
இசைக்கும் உன் மழைச் சாரல்”
மழையும் மீட்டும் இசையில் மனம் லயித்துப் போதும் போதும் என்றாகிறது. மழை மட்டுமல்ல அக்கினியும் இவர் காட்டும் படிமத்தில் நமக்கு ஆச்சரியத்தைக் கூட்டுகிறது “வெட்டிய அக்கினியின் தீப நாக்கு” என்ற இடத்தில் சுடர்ந்து நடனமிடும் தீயை வெட்டி வெட்டித் தனித்தனிச் சுடர் நெருப்பாகக் கற்பனைச் செய்து கொள்கிறது மனம். ஒவ்வொரு கவிதையிலும் இவர் காட்டும் காட்சிப் படிமங்களைச் சொற்றொடர் அமைப்புகளை வரிக்குள்ளே விரிந்து மலரும் தாள லயத்தை
“தேனைச் சுவைத்து மாளாமல்
தேக்கரண்டியையும் சுவைக்கும் பொழுது தான் புரிகிறது”
என்று மட்டும் தான் என்னால் சொல்ல முடியும்.
‘அழிவற்றது காமம்’ என்கிறார் நந்தா. அதை எத்தனை விதமாய் எழுதிப் பார்த்தாலும் அதன் பற்றிய நிறைவும் நிறைவின்மையும் ஒன்றாக நிறம்பிய கோப்பை அவரை அதைப் பற்றி மறுபடி மறுபடி எழுத வைக்கிறது. ஒன்றைக் கட்டாயம் சொல்ல வேண்டும் இவர் காமத்தை எழுதிக் கலையாக்கியிருக்கும் விதம் நம்மை முகம் சுளிக்க வைக்காமல் இருக்கிறது. அதற்காக இவரைக் கட்டாயம் பாராட்டலாம். தாந்திரீகம் என்பதை என்ன என்று தேடிக் காண ஆர்வத்தை நந்தாகுமாரனின் கவிதைகள் நிச்சயம் செய்கின்றன.
கட்டுரை நிறைய நிறைகளாக எழுதிய பின்னர் மறுபடி ஒருமுறை இந்த நூலை வாசித்துப் பார்த்தேன் இதில் குறையாகக் கண்டு சொல்ல ஏதுவுமில்லை. அவர் வார்த்தையாலேயே சொல்ல வேண்டுமென்றால் “பேருக்கும் அமைதிக்கும் நடுவில்” அமர்ந்து இந்தக் கவிதைகளை வாசிக்க வேண்டியிருக்கிறது என்ற ஒற்றைக் கண்டுபிடிப்பைத் தவிர வேறெதுவும் இல்லை. அதுவும் மேலே நான் சொல்லியிருந்த எதை நாம் எழுத வேண்டும் எனக்கு நானே விதித்துக் கொண்ட விதிமுறை மட்டுமேயன்றி வேறில்லை. மேலும் கவிதையின் மொழியின் அடுக்கு மற்றும் அடர்த்திச் சில சமயம் கவிதையை அணுகப் பலமுறை வாசிக்க வைக்கிறது. தற்போதையக் காலவேகத்தில் இவ்வாறு வேலை வாங்கும் கவிதைகள் கவனம் பெறாமல் போகும் வாய்ப்புகளும் அதிகம்.
இவ்வாறு ஒரு கான்செப்ட் ஒன்றை வைத்துக் கொண்டு கவிதைகளை எழுத வேண்டுமா? தேவையாத் தேவையற்றதா என்ற தர்க்கத்தைப் பின்னால் விட்டு யோசித்தால் தமிழுக்கு என்னைப் பொறுத்தவரை இது மிகப் புதிது.தாந்தீரிகம் ஒற்றைக் கருத்துக்கோளை வைத்துக் கொண்டு நூறு பக்கங்களுக்கு மேல் விரியும் பல கவிதைகளை எழுத முடியுமா என்று என்னைக் கேட்டால் என்னால் கட்டாயம் எழுத முடியாது. தாந்தீரிகம் மட்டுமல்ல எந்த கருத்தாக்கத்ததையும் மையமாகக் கொண்டு என்னால் கவிதைகளை எழுத முடியாது. அதைச் செய்து முடித்திருக்கும் நந்தாவுக்கு எனது வாழ்த்துகள். இவர் கவிதைக்குள் கட்டி வைத்திருக்கும் விதவிதமான படிமங்களை வாசித்தால் மட்டும் அது கொடுக்கும் அனுபவத்தை உணர முடியும். இந்தத் தொகுப்புப் பலருக்குச் சென்றடைய வேண்டும் என்பது எனது குறைந்தபட்ச ஆவலாக இருக்கிறது.
நூல்: வெறுமை ததும்பும் கோப்பை
ஆசிரியர் : நந்தாகுமாரன்
வெளியீடு : தமிழ்வெளி
வெளியான ஆண்டு : டிசம்பர் -2023
விலை: ₹ 140
நூலைப் பெற “ +91 90 9400 5600