cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 33 விமர்சனம்

கோதமலை குறிப்புகள் – நூல் அறிமுகம்


பால்யத்தில் நிகழ்ந்துவிட்ட அனைத்திற்கும் மன்னிப்பை யாசித்துக்கொண்டிருக்கும் கோதமலை குறிப்புகள். 

மலைகளின் அரசன் என அழைக்கப்படுவது சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏற்காடு. இதை சேர்வராயன் மலை எனவும்,இதன் தொடர்ச்சியாக கிழக்காக நீள்வதை கல்வராயன் மலை எனவும் அழைப்பார்கள். இதை அண்ணன், தம்பி மலைகள் எனவும், இருவரும் ஒரு காலத்தில் மன்னர்கள் என்கிற செவிவழி செய்திகளும் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இது கிழக்கு தொடர்ச்சி மலைகள். இதன் எதிர்புறமாக இருப்பது தான் கோத மலை.

இதை மக்கள் கோதுமலை எனவும், கோதண்டராமன் மலை எனவும் அழைப்பார்கள். மலைமேலே கோதண்டராமன் கோவில் உள்ளது. சித்திரை மாதத்தில் இரண்டு அல்லது மூன்றாது சனிக்கிழமையில் அம்மலையின் இருபுறமும் சுற்றியுள்ள ஊர் மக்கள் சென்று திருக்கொடியேற்றி (தீபம்) வழிபட்டு வருவது வழக்கம். அதன் ஒரு ஓரத்தில் தன்னுடைய பூர்வீக ஊரைக்கொண்டவர்தான் கவிஞர் கண்ணன். அதனாலேயே இந்த முதல் கவிதை தொகுப்பிற்கு ‘கோதமலை குறிப்புகள்’ என்கிற பெயரை வைத்திருக்கிறார். 

உலகெங்கும் பயணப்படுகிறோம் என்றாலும் அங்கேயெல்லாம் நாம் மனதொத்து சொந்த ஊரைப்போன்று வாழமுடியாது. நாம் பிறந்த நிலமே நமக்கான நிலம். பஞ்சம் பரவி அடுத்த வேளை சோற்றுக்கு வழியற்று போனாலும் சொந்த நிலத்தின் மீதான ஈர்ப்பை எந்த நிலத்திற்கு சென்றாலும் எழுதிவிட முடியாது. அப்படி தன்னுடைய பால்யம் முழுக்க நிறைந்த நிலத்தை, மக்களை, உறவுகளை நண்பர்களை, அவர்தம் துயரங்களை, மகிழ்வுகளை தன்குடும்பத்திலிருந்து நிலம் கைவிட்டுபோனதை என இத்தொகுப்பு முழுக்க அவர்காலத்து அத்தனையையும் நம்மை எழுத்தெனும் வடிவத்தில் காண வைத்திருக்கிறார்.

இவரின் கவிதைகள் இவரை தாண்டி பொதுவெளியை காட்டவில்லை. ஆனால் தவறுமில்லை. மாற்றத்தை நம்மிடமிருந்தே தான் தொடங்கவேண்டும் என்பதைப்போல தன் சார்ந்து, தன் வீடு, நண்பர்கள், வளர்ப்பு பிராணிகள், செடிகள் மரங்களென தன்னை சுற்றியுள்ளதை மட்டுமே இந்த கவிதைகளில் பாடுபொருளாக்கியுள்ளார். இது போருக்குப் போகும்முன் ஒத்திகை செய்வதைப்போன்று தான். 

அவ்வகையில் வீட்டை பற்றிய கவிதைகள் மொத்தம் நான்கு இருக்கிறது ஆனால் நான்கும் வெவ்வேறு வலிகளை சொல்பவை. மூன்று அறைகள் கொண்ட வீடு, ஒரு அறை கொண்ட வீடு, காலிசெய்யப்பட்ட வீடு, எது நம் வீடு. ஆகியவைகள்.  முதல் கவிதை தன்னுடைய பால்ய கால வீட்டை சக கல்லூரி நண்பன் ஏளனமாக ‘குடிசை வீடுதானே’ என்று பேசியதை நினைத்து நினைத்து மனம் வெதும்புகிறது. 

இரண்டாவது,  ஒரே அறையுள்ள வீடு எவ்வித நவீன வசதியுமில்லை குழந்தைகள் பெரிதானால் மாற்றிக்கொள்ளலாம் என்கிற போது ஒரு குடும்பத்தலைவனின் பாடு கண்முன் வந்துபோகிறது. இது ஒரு தலைவனின் பார்வை மட்டுமா?  நமது நாட்டிலுள்ள பல்லாயிரக்கணக்கான தலைவர்களின் நிலைதானே?  ஆனால் கடைசியாக கவிதை இப்படி முடிகிறது. சிட்டுக்குருவிக்கென்ன/ இருக்கவே இருக்கிறது/ பெருங்காடும் விரிவானமும். ஒற்றை அறையை வீடாக கொண்ட மனிதர்களெல்லாம் சிட்டுக்குருவிகள் தான். அவர்கள் இல்லாததை நினைத்து ஒருபோதும் ஏங்குவதில்லை.

மூன்றாவது சொல்லாமல் சென்ற சிட்டுக்குருவியின் வீட்டை பார்த்து ஒருவார்த்தை சொல்லிவிட்டு போயிருக்கலாமே என ஏங்குகிறது மனம். 

நான்காவதாக எது நம் வீடு?  வேலை நிமித்தமாக மாறிக்கொண்டே இருப்பவர்களுக்கு எத்துனை பூர்வீக வீடு இருந்தாலும் ஆசுவாசமாக வந்து படுக்கும்போது இது நம் வீடில்லை என்கிற கேள்வி வரத்தான் செய்யும் ஒவ்வொரு வீடாக சொல்லி இதில் எது நம் வீடு என்கிற கேள்வியோடு முடித்திருப்பார். எல்லா வீடும் நம் வீடல்ல நம் வீட்டை தவிர. 

சுதந்திர போராட்ட தியாகியான தன்னுடைய பாட்டனின் பூர்விக நிலம் கைவிட்டு போனபின், மீண்டும் பழைய வாழ்விடத்திற்கு சென்று காணாத மனதை வைத்துக்கொண்டு அவதியுறுகிறார். தம்மிடம் பண்ணயம் செய்த மனிதர்களின் இப்போதைய நிலையெண்ணி பரிதவிக்கிறார். பதின்ம வயதில் வீட்டிற்கு அழைத்துபோன நண்பனை அம்மா என்ன ஜாதியென கேட்டு பாதி சோற்றில் எழுப்பி துரத்தியடித்ததை, அதற்காக அவர் இன்னும் அந்த நண்பனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருப்பதை, தனித்தட்டு முந்தைய ஆட்களுக்கு கொடுத்ததை வேறோர் ஆள் வந்து அவங்க என்ன சாதி என கேட்பதை ஆதி கசடுகளின் கேள்வியாக துரத்துவதை, சில காலம் ஒன்றாக வளர்ந்த பின் சொல்லிக்கொள்ளாமல் ஓடிவிடும் பூனைகளை, வளர்ந்தபின் நோய்பட்டு இறந்துபோகும் நாய்களை என ஒருபுறம் மனது மருகுகிறது.

இன்னொருபுறம் வாழ்வின் அடையாளங்களுக்காக ஏங்கும் அல்லது வாழ்வின் அடையாளங்களை துறந்துவிட்டு வாழும் எளிய மனிதர்களுக்காக துடிக்கிறது  கண்ணனின் மனது. பேசிக்கொண்டே செல்லும் யாரோ ஒரு மனம்பிறழ்ந்தவருக்காக, வயதை நூலாக்கி குறுகியபடி அமர்ந்திருக்கும் செருப்பு தைப்பவருக்காக, தனக்குமுன் சுவாமி தரிசனத்திற்காக காத்திருக்கும் ஊசி, பாசி விற்கும் பெண் என இந்த பட்டியல் நீள்கிறது. 

இதைத் தாண்டி தன்வீட்டிலேயே மூன்றுநாள் தன்னைத்தானே சிறைவைத்துக்கொள்ளும் இணையருக்காக, கண்பார்வையற்ற அத்தைக்காக, பாட்டிக்காக, அப்பாவின் அண்ணனுக்காக, மகளுக்காக, அம்மாவிற்காக என இந்த பட்டியல் ஒருபுறம் நீள்கிறது. இதில் இரண்டு சவரக்கவிதைகள் வருகிறது ஒன்று அப்பாவின் சவரம், இன்னொன்று கவிஞர் சவரம் செய்துகொள்வது. அப்பா சவரம் செய்யும்போது ஏற்படும் காயங்களை அம்மா கடிந்துகொள்வதும், ஆனாலும் வழக்கமாக காயங்களோடே அச்சவரம் அமைவதுமாக, அதுவே இவர் தினசரி சவரம் செய்துகொள்பவர், சில துக்க நிகழ்வுகளால் தாடியை வளர்க்கிறார், பின் அது வேறொரு தோற்றத்தை தர மீண்டு சவரத்துக்குள் நுழைகிறார். இதெல்லாம் ஒரு தன்னழகியல் செய்கை தான். ‘அப்பாவின் இளமை’  என்றொரு கவிதையில் இதுபோல அப்பா சவரம் செய்துகொள்வதை நானும் பதிவு செய்திருக்கிறேன்.மீண்டும், மீண்டும் தன்சார்ந்த கவிதைகளினூடே மிக மெல்லிய நுண்ணுணர்வுகளை வாசகனுக்கு கடத்துவதில் கைதேர்ந்த எழுத்தாகவும், தொகுப்பாவும் இது அமைந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக யாரோ ஒருவரிடம், ஏதோ ஒன்றிடம் ஒரு மன்னிப்புக்கோரலை வேண்டுகிறது அல்லது தன்னுடைய நிலையை எடுத்துரைக்கிறது இக்கவிதைகள்.இதை பின்நவீனத்துவ வகைமை என்பார்கள்.

கவிஞர் கண்ணணை எனக்கு முகநூல் வழியாகவே தெரியும். அதன்பின் பேசிப்பழகும் போது தான் சொந்த ஊரை தெரிந்துகொண்டேன். ஆம் நானும் அதே கோதமலை அடிவாரத்தில் இன்னொரு முனையில் வசிப்பவன். இவரின் எழுத்துவழி முழுக்க என் நிலத்து மக்களின் வாழ்வை நான் இன்னொரு முறை பார்த்திருக்கிறேன் என்றே சொல்லவேண்டும். இந்த தொகுப்பிற்குப்பின் கவிஞர் ‘நதி தொலைந்த கதை’ என்கிற இன்னொரு தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். சமீப காலமாக சேலம் வட்டாரத்தில் தொடர்ந்து வாசிப்பும், எழுத்தும், இலக்கிய கூட்டமும் என இயங்குபவராக இருக்கிறார். இந்த தொகுப்பிலுள்ள பல கவிதைகள் பல்வேறு காலாண்டிதழ், மாத இதழ், இணைய இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. பல கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. வரும் காலத்தில், சேலத்தில் தவிர்க்க முடியாத இலக்கிய அடையாளமாக மாறுவார் என்கிற நம்பிக்கையை தருகின்றன இவரின் எழுத்துகள். தொடர்ந்து இயங்க எழுத வாழ்த்துகிறேன். 


நூல் விபரம்

நூல்: கோதமலை குறிப்புகள். 

ஆசிரியர்: கண்ணண். 

விலை :  ₹  120

வெளியீடு: பறவை பதிப்பகம்.

தொடர்புக்கு : +91 9952089604

About the author

சேலம் ராஜா

சேலம் ராஜா

கனரக வாகன ஓட்டுனராக பணிபுரியும் சேலம் ராஜா இலக்கிய வாசிப்பு, கவிதை, கதை, கட்டுரை, போட்டோகிராபி என இயங்கி வருபவர்.
மூன்று வருடங்களுக்கு முன் "கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக்குறிப்புகள்" எனும் கவிதை தொகுப்பு வெளியானது.
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற விருது, படைப்பு சிறந்த தொகுப்பு விருது , தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வளரும் படைப்பாளர் விருது போன்ற விருதுகள் பெற்றுள்ளார். இவரின் அடுத்த கவிதைத் தொகுப்பான ’மயில் பற்றிய குறிப்புகள்’ சமீபத்தில் (2023- பிப்ரவரி) வெளியானது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website