cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 34 விமர்சனம்

விக்ரமாதித்யன் எழுதிய “பின்னைப் புதுமை” நூல் குறித்து ஒரு பார்வை


விதை என்பது குறித்து கவிஞர்களிடையேயும், ஆய்வாளர்களிடையேயும், விமர்சகர்களிடையேயும்  எத்தனையோ விளக்கங்கள் இருந்தாலும் அது ஒரு வாசக அனுபவம் என்று எளிதாக சொல்லி விடலாம். ஆனால் கவிதை கட்டி எழுப்பும் பிரம்மாண்டங்களுக்குள் நுழையும் ஒரு வாசக மனம் எதையெல்லாம் தேடி தன் பரப்பை விரிவுப்படுத்த விரும்புமோ அதையெல்லாம் படைப்பாளன் வாசகனுக்கு புலப்படுத்தி அவன் புழங்க வேண்டிய அனைத்து தளங்களையும் கவிதையாக்க சொற்களின் தேர்விலும் கட்டுமானத்திலும் ரசனையிலும் இன்னபிறவாக கவிதை என அறிய வேண்டிய அனைத்து வகைமைகளிலும் சமகால கவிதை இயங்க வேண்டும். 

அந்த இயக்கத்தில் இன்று தமிழில் காத்திரமாக இயங்கும்  பதினாறு கவிஞர்களின் நூல்களை வாசித்த ஒரு வாசக அனுபவமாகவும் காத்திரமான தனது மொழியின் அனுபவ வெளிப்பாடுகளுடனும், ரசனை அடிப்படையிலும், சமகாலத்தை சரியாக உள்வாங்கிய விதத்திலும் படைப்புகளில் வெளிப்படும் புதுப்புது உத்திகளையும் ,விவரணைகளையும், அது நிகழ்த்தும் உரையாடல்களையும், மிகச் சுருக்கமாக அதே வேளையில் கவிதையை பத்திகளாக பிரித்து ஒரு தனித்துவம் மிக்க நடையில் பதினாறு நவீன கவிஞர்களின் கவிதைகள் குறித்து தன் பார்வையை முன் வைக்கிறார் கவிஞர் விக்ரமாதித்யன். சமகால நவீன தமிழ்க் கவிதையின்  மிக முக்கியமானவர்கள் என்று கருதப்படும் கவிஞர்கள் இவர்கள் என்றாலும் இவர்களின் சில தொகுப்புகள் பலரை எட்டாத தொலைவில் இருப்பதற்கு என்ன காரணம் என்று சொல்லமுடியாவிட்டாலும் அவர்களின் சில கவிதைகளை முன் வைத்து இவர் ஆற்றியிருக்கும் மதிப்புமிக்க உரையாடல்கள் சமகால கவிதை வாசகர்களுக்கு எட்ட வேண்டிய ஒரு கருத்துப் பெட்டகமும் ஆகும். இவரின் உரையாடல்களில் பல வெறும் கவிதையை  மட்டுமே வியந்தோதாமல், உள்ளது உள்ளபடி தன் உள்ளக் கருத்தை வெளிப்படுதியிருக்கும் பாங்கு மிக முக்கியமானது. கவிதையை கொண்டாடும்போது அதற்கான விளக்கத்தையும் நியாயமாக முன் வைக்க வேண்டியுள்ளது. அந்த நியாயத்தை அதன் பொருண்மை சிதறாமல் அள்ளிக் கொடுக்க அதற்குரிய தகுதியோடு பதினாறு கவிஞர்களின்  கவிதைகளையும் அதன் மீதான ஒரு ஆவணம் போல் கவித்துவ நுணுக்கங்களை விவரிப்பதுமே  இந்த நூலின் மிகப் பெரும் பணியாகும். தமிழ் நிலம், தமிழ் வாழ்வு என விரியும் கவிதைகளை நூலாசிரியர் போற்றுகிறார். சில கவிதைகளில் அதிகம் தான் பேசிவிடாத தன்மையில் அதற்கான தனிமையை வாசகர்களிடமே ஒப்படைக்கிறார்.கவிதையில் இயல்பே அழகு என்று குறிப்பிடும்போது வாழ்வின் உண்மையை உணர்ந்தெழுதும் கவிஞனின் மனப்போக்கை அறிந்தவராகவே உள்ளார். சில கவிதைகளின் சொல்லாட்சி குறித்து விமர்சனமாக அவர் முன் வைப்பது புதியவர்களின் பார்வையை கூர்மைபடுத்தும்.கவிதையில் சில இடங்களை சொல்லாமல் விட்டு வைப்பதுதான் சரியாக இருக்கும் என்று குறிப்பிடுகிறார்.எதார்த்தம், புனைவு என்று எந்த வகைமையில் இருந்தாலும் அது கவிதையாவதற்கான இடங்களையும் சுட்டுகிறார். விளம்பரம், விழா என்றெல்லாம் இல்லாமல் அமைதியாக எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர்கள் அறியப்படாதவர்களாக ஆகிவிடக்கூடாது என்று கவனமாக எச்சரிக்கிறார்

பழனிவேள், கண்டராதித்தன், ஷங்கர்ராமசுப்ரமணியன், தேவேந்திரபூபதி, முகுந்த் நாகராஜன், இளங்கோகிருஷ்ணன், சபரிநாதன், கருத்தடையான்,வெய்யில், வே.பாபு, அகச்சேரன், தூரன்குணா, எம்.டி.முத்துக்குமாரசுவாமி, இரா.சின்னச்சாமி, சாம்ராஜ், இசை போன்றோரது கவிதைகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. 

பலரது கவிதைகளை ஒருசேர வாசிப்பது ஒரு புதிய அனுபவம் என்றே சொல்லலாம். வாழ்க்கை எளிதானதில்லை. பலருடைய கவிதைகளில் வாழ்க்கை குறித்து  பகடியான மொழியில்தான்  பேச முடிந்துள்ளது. இது சமூக வெளியில்  நமக்கான மனத்தடையை உடைத்து வெளிவர உதவும். பாலியல் மொழியும் அப்படித்தான். 

நான் இந்த நூலிலிருந்து எந்த ஒரு கவிதையையும் எடுத்தாள விரும்பவில்லை. ஏனெனில் நூலாசிரியர் இந்த நூலிற்கு கொடுத்த முக்கியத்துவம் வாய்ந்த உரையாடலில் கவிதைகள்தான் மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளன..அந்த பங்களிப்பை அறிய விரும்பினால் வாசகர்களும் இந்த நூலை வாங்கி வாசித்துப் பார்த்துக் கொள்ளலாம். தமிழில் பல உலகக் கவிதைகள் இருப்பதை அறிய வாய்ப்புண்டு. நமக்கு அறியத் தந்திருக்கும் பதினாறு கவிஞர்கள் பரந்துபட்ட உலகத்தை, விரிந்த வாழ்க்கை அனுபவத்தை,சீரிய அனுபவத்தினால் நுண்மையான மொழியில்  கவிதையாய் ஆக்கிதந்துள்ளார்கள். புதிய வாசகன் ஒருவன் தான்  அறிய வேண்டிய கவிதைகைன் குறித்தும், நவீன கவிதைகளின் போக்குகள குறித்தும் இந்த நூலின் வழி அறிந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பாக இந்த நூல் அமைந்துள்ளது. டிஸ்கவரி புக் பேலஸ் அழகிய முறையில் நூலினை வடிவமைத்துள்ளார்கள்.


நூல் விபரம்

நூல்: பின்னைப் புதுமை (சமகால நவீனக் கவிஞர்களின் படைப்புகள் குறித்த கட்டுரைகள்)

ஆசிரியர்: விக்ரமாதித்யன்

வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்

விலை :  ₹  150

தொடர்புக்கு : +91 87545 07070

About the author

மஞ்சுளா

மஞ்சுளா

மதுரையை சேர்ந்தவர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக பல இலக்கிய சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார்.

இதுவரை ஐந்து கவிதை தொகுதிகள் வெளிவந்துள்ளன.

மொழியின் வழியாக வாழ்வின் போதாமைகளை மாயங்களை, ரகசியங்களை, உடைத்து வெளிவரும் சொற்களையே தன் கவிதை வெளியில் மிதக்க விடுகிறார்.

“மொழியின் கதவு ” நூலுக்காக திருப்பூர் அரிமா சங்கத்தின் சக்தி விருது (2012), தமிழ் நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை( தேனி) வழங்கிய அசோக மித்திரன் நினைவு படைப்பூக்க விருது (2019) உள்ளிட்ட விருதுகளைத் தனது கவிதைகளுக்காக பெற்றுள்ளார். நவீன கவிதை குறித்த நூல் விமர்சனங்கள் செய்து வருகிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website