நெசவாளனே
பல நூல் இழைகள் இழைந்த பாடலை எங்களுக்காக நெசவு செய்வாயாக
உதிரத்தின் சிவந்த நிறத்தில் நெருப்பை
எங்களுக்காக நெசவு செய்வாயாக
இனிக்கும் பிளம் சுவையோடு
கிளர்த்தும் மரித்தவர்களின் ஞாபகங்களை
பின்தொடரும் காயத்தின் வாசனை
எங்கள் முதுகெலும்புகளில்
வலியில் இரத்தம் கசியச் செய்கிறது
எங்களுக்காக வேட்கையின் சிவப்பை நெசவு செய்வாயாக
அது ஒரு புகைமூட்ட மேகத்திற்கு எதிராக சிறகடித்து
எங்கள் நுரையீரலுக்குள் இயங்குவிசையை உந்தட்டும்
எங்களுக்காக மஞ்சள் மற்றும் தங்க நிறத்தில்
ஒரு பாடலை நெசவு செய்வாயாக
அந்த வாழ்வு
புதர்களின் ஊடே ஒரு பாதைக்கு ஒளியூட்டட்டும்
வலியில் எரிந்த பிறகு
நிலையான நம்பிக்கையில் முதிர்ந்து
வீங்கிக் காப்பு காய்த்த
தோல் மறைப்புகளோடு
உன் விரல்களை
பெரும் பள்ளத்தாக்குகளுக்கு இழுத்து
காந்த மையப் புள்ளியில்
எங்களை நெசவு செய்வாயாக
ஒரு தனித்த வலை இடிமின்னலைப் போல் மின்னுகிறது
என் கருப்பைக்குள்
உன் கட்டைவிரலை உணர்கிறேன்
தொடர்ச்சியான உலக இயக்கத்தின் நிறுத்தத்திற்குள்
பூந்தேனின் வியர்வை விதைகளை வைக்கிறாய்
எங்களுக்கு சிவப்பு , மஞ்சள் மற்றும் பழுப்பில் ஒரு பாடல் நெசவு செய்வாயாக
அது கடலையும் வானத்தையும் தன் தோலில் வைத்திருக்கட்டும்
அது பறவையையும் மலையையும் தன் குரலில் வைத்திருக்கட்டும்
அது எங்கள் கல்லறைகளின் மீது ஒரு வீட்டைக் கட்டட்டும்
அநீதி, பயம் ,அடக்குமுறை துஷ்பிரயோகம் மற்றும் அவமானத்தின் மீது
வலிமை,ஒற்றுமை மற்றும் நோக்கம் சார்ந்த அரண்களை அமைக்கட்டும்
நாங்கள் பற்றிக் கொள்ள ஒரு பாடலை நெசவு செய்வாயாக
குளிர்ந்த காற்று வீசி
எங்கள் குழந்தைகள் அழும் போது
கடும் பனியில் மூழ்கும்
பரிசுத்தமான ஆதி பாடல்
காகித்தை எரித்து
மறைந்திருக்கும் நிறமற்ற விஷத்தை எதிர்க்கட்டும்
கரிய இரவின் மென்மையான இதழின் இனிமையில் இருந்து கொண்டு
எங்களுக்காக வளமான கருப்பு வட்டத்தை நெசவு செய்வாயாக
அது எங்கள் போர்வீரக் குழந்தையின் விழிகளில் இருக்கட்டும்
மற்றும் நிலவின் காற்றைக் கொண்டு
எங்கள் வாய்க்கு உணவளிக்கட்டும்
தாளங்கள் இடையிடையே
இருப்பின் எல்லா இடங்களிலும்
ஒரு கருப்பு
நித்தியத்தின் இயக்கத்தை வைத்திருக்கும்
எங்கள் உடல்கள் பாடுவதற்கு
ஒரு பாடலை நெசவு செய்வாயாக
பல நூல் இழைகள் இழைந்த
பாடலை எங்களுக்காக நெசவு செய்வாயாக
அது எம் மக்களின் நிறங்களுடன் நடனமாடி
அமைதியின் வெதுவெதுப்பைக் கொண்டு எங்களை மூடட்டும்
தமிழில் : மலர்விழி
ஸான்ட்ரா மரியா எஸ்டீவ்ஸ் புளூஸ்டவுன் மோக்கின்பேர்ட் மாம்போ (ஆர்டே பப்ளிகோ பிரஸ், 1990) மற்றும் யெர்பா பியூனா (கிரீன்ஃபீல்ட் விமர்சனம், 1980) ஆகியவற்றின் ஆசிரியர் ஆவார். நியூயோரிகன் இயக்கத்தின் உறுப்பினரான அவர் பிராங்க்ஸில் வசிக்கிறார்.
நுயோரிகன் கவிதை இயக்கத்தின் ஸ்தாபக உறுப்பினராக அறியப்பட்ட அவர், சமூக நீதி மற்றும் வாழ்க்கையில் பல்வேறு அம்சங்களைப் பற்றிய தனிப்பட்ட உணர்வுகள் பற்றி கவிதைகளை எழுதுகிறார். சாண்ட்ரா மரியா எஸ்டீவ்ஸ் இந்த நூயோரிகன் கவிதைக் குழுவில் ஒரு நீடித்த இலக்கிய வாழ்க்கையைத் தொடர்ந்த ஒரே பெண்மணி. எஸ்டீவ்ஸ் ஒரு கவிஞர், நாடக ஆசிரியர் மற்றும் கிராஃபிக் கலைஞர். யுனைடெட் ஸ்டேட்ஸில் அங்கீகரிக்கப்பட்ட கவிதைத் தொகுதியை வெளியிட்ட முதல் பெண்களில் இவரும் ஒருவர்.
அவர் பல விருதுகள் மற்றும் பெல்லோஷிப்களைப் பெற்றவர்: ப்ரீகோன்ஸ் தியேட்டர்/NEA மாஸ்டர் ஆர்ட்டிஸ்ட் விருது, 2010; 2007 ஆம் ஆண்டு அசென்டோஸ் கவிதை தொகுப்பிலிருந்து கான் டின்டா விருது; யுனிவர்ஸ் பொயடிக் தியேட்டர் குழும நிறுவனத்தில் இருந்து கவிஞர் கௌரவி, 2006; 2002 ஆம் ஆண்டு பார்வையற்ற பிச்சைக்காரர் அச்சகத்தில் இருந்து கவிதைக்காக ஓவன் வின்சென்ட் டாட்சன் நினைவு விருது; கலை விமர்சனம், 2001 இல் பிராங்க்ஸ் கவுன்சில் ஆன் தி ஆர்ட்ஸ் விருது பெற்றவர்; 1992 ஆம் ஆண்டு பிராங்க்ஸ் ஹிஸ்டாரிகல் சொசைட்டியின் எட்கர் ஆலன் போ இலக்கிய விருது; மற்றும் 1985 இல் கலைக்கான நியூயார்க் அறக்கட்டளையின் கவிதை பெல்லோஷிப் ஆகியவை பெற்றவர்.