என் தந்தை பின் மாலைப் புகைவண்டியில்
பயணிக்கிறார்.
மஞ்சள் ஒளியில் மௌனமான தினசரிப் பயணிகளின்
ஊடே நின்றபடி
புற நகர்ப் பகுதிகள் அவரது பாராத கண்களில் இருந்து
நழுவிச் செல்கின்றன
அவரது சட்டையும், காற்சட்டையும் சொதசொதப்பாக
உள்ளன, அவரது மழையங்கி
சேறால் கறை பட்டுள்ளது, புத்தகங்கள் திணிக்கப்பட்ட
அவரது பை
பிய்ந்து கொண்டிருக்கிறது. ஈரப் பருவகால இரவின்
ஊடே
வீடு நோக்கி இருள்கின்றன மூப்பால் மங்கிய அவரது
கண்கள்.
ஒரு நீண்ட வாக்கியத்திலிருந்து தவறவிட்ட ஒரு
வார்த்தையைப் போல
புகைவண்டியிலிருந்து இறங்கும் அவரை என்னால்
பார்க்க முடிகிறது இப்போது.
அவர் சாம்பல் நிற நடைபாதை நீளத்தின் குறுக்கே
விரைந்து,
புகைவண்டிப் பாதையைக் கடந்து, சந்தினுள் நுழைகிறார்,
அவரது செருப்புகள் சேறால் பிசுபிசுக்கின்றன,
ஆனாலும் அவர் முன்னோக்கி விரைகிறார்.
மீண்டும் வீட்டில் அவர் நீர் அதிகம் கலந்த தேநீர்
அருந்துவதை
சுவை குன்றிய சப்பாத்தி உண்பதை, புத்தகம்
வாசிப்பதை நான் பார்க்கிறேன்.
அவர் கழிவறைக்குச் செல்கிறார் –
மனிதன்-உருவாக்கிய உலகிலிருந்து மனிதன்
அந்நியமாதலை யோசிக்க.
வெளியே வருகையில் கை கழுவும் தொட்டியின் அருகே
அவர் நடுங்குகிறார்
அவரது பழுப்புக் கரங்களின் மேல் குளிர்ந்த நீர் வழிந்து
செல்கிறது
அவரது மணிக்கட்டுகளின் மீதுள்ள நரைத்துக்
கொண்டிருக்கும் முடிகளில் ஒரு சில துளிகள் ஒட்டிக்
கொள்கின்றன.
அவரது சலிப்புற்ற குழந்தைகள் தங்கள்
நகைச்சுவைகளை, இரகசியங்களை அவரிடம் பகிர
அடிக்கடி மறுத்திருக்கின்றனர். அவர் இப்போது
உறங்கச் செல்வார் –
வானொலியில் புள்ளிவிவரங்களைக் கேட்டபடி,
அவரது மூதாதையர்கள், மற்றும் பேரக் குழந்தைகளைப்
பற்றிக் கனவு கண்டபடி
நாடோடிகள் ஒரு குறுகலான கணவாய் வழியே ஒரு
துணைக் கண்டத்துள் நுழைவது குறித்துச் சிந்தித்தபடி.
-திலீப் சித்ரே
– ஆங்கிலத்திலிருந்து தமிழில் : மிருணா.
திலீப் புருஷோத்தம் சித்ரே (17 செப்டம்பர் 1938 – 10 டிசம்பர் 2009) சுதந்திர இந்தியாவில் தோன்றிய இந்தியக் கவிஞர்கள் மற்றும் விமர்சகர்களில் முதன்மையானவர். மராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதும் எழுத்தாளராக இருந்தவர். எழுதுவதைத் தவிர, அவர் ஆசிரியராகவும், ஓவியராகவும், திரைப்படத் தயாரிப்பாளராகவும் மற்றும் பத்திரிகையாளராகவும் செயல்பட்டார்.
உரைநடை மற்றும் கவிதைகளின் சிறந்த மொழிபெயர்ப்பாளராக இருந்தார். 17 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற மராத்தி பக்தி கவிஞர் துக்காராம்(Tuka) படைப்புகளை இவர் மொழிபெயர்த்தது மிகவும் பிரபலமானது. பன்னிரண்டாம் நூற்றாண்டின் பக்தி கவிஞரான ஞானேஸ்வர்( Dnyaneshwar) எழுதிய அனுபவாம்ருதத்தை (Anubhavamrut ) மொழிபெயர்த்தார்.
ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதினார். Travelling in a Cage (1980) என்பது அவரது முதல் மற்றும் ஒரே ஆங்கிலக் கவிதை புத்தகமாகும். நாடுகடத்தல், அந்நியப்படுதல், சுய சிதைவு மற்றும் இறப்பு ஆகியவை சித்ரேவின் கவிதையில் முக்கிய கருப்பொருள்களாக இருந்தன.