cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 1 மொழிபெயர்ப்புகள்

ஷெல் சில்வெர்ஸ்டெய்ன் கவிதைகள்


கடிகார மனிதன் 

 

“கூடுதலான ஒரு நாளுக்கு எவ்வளவு பணம் கொடுப்பாய்?”
கடிகார மனிதர் குழந்தையிடம் கேட்டார்.
“ஒரு பைசாவும் கிடையாது !
என்னுடைய வாழ்நாட்கள் புன்னகையைப் போல அளவற்றவை.”
குழந்தை பதில் சொன்னது.
“கூடுதலான ஒரு நாளுக்கு எவ்வளவு பணம் கொடுப்பாய்?”
குழந்தை வளர்ந்த பிறகு கேட்டார்.
“ஒரு டாலர் அல்லது அதற்கும் குறைவாகத் தரலாம்,
ஏனெனில் எனக்குச் சொந்தமாக ஏராளமான நாட்கள் உள்ளன.”
வளர்ந்த குழந்தை பதிலளித்தது.
“கூடுதலாக ஒரு நாளுக்கு எவ்வளவு பணம் கொடுப்பாய்?”
மரணத் தருவாயில் அவர் மறுபடியும் வினவினார்.
“எல்லா கடல்களிலும் உள்ள முத்துக்களையும்,
வானத்தில் உள்ள நட்சத்திரங்கள்
மொத்தத்தையும்.”
தளர்ந்த குரல் பதில் தந்தது.


 

சிறுவனும் முதியவரும்

 

சிறுவன் சொன்னான்,
“சில நேரங்களில் நான் எனது கரண்டியைத் தவற விட்டுவிடுகிறேன்.”
முதியவர்,
“நானும் அதைச் செய்கிறேன்” என்றார்.
“நான் உறக்கத்தில்
என் உடையை நனைத்து கொண்டுவிடுகிறேன்.”
சிறுவன் கிசுகிசுத்தான்.
“நானும் அதைச் செய்கிறேன்”என்று சிரித்தார் முதியவர்.
“நான் அடிக்கடி அழுகிறேன்” என்றான் சிறுவன்.
முதியவர்,”நானும் அப்படித்தான்”என்று ஆமோதித்தார்.
“ஆனால் இவை எல்லாவற்றையும் விட மோசமானது,வளர்ந்த
பெரியவர்கள் என்னை பொருட்படுத்தவே மாட்டார்கள்.”என்று சொன்ன சிறுவன்
சுருக்கங்கள் நிறைந்த ஒரு முதுமையான கையின் வெதுவெதுப்பை உணர்ந்தான்.
”நீ என்ன சொல்கிறாய் என்று எனக்குப் புரிகிறது” என்றார் அச் சிறிய முதியவர்.


 தமிழில் : க.மோகனரங்கன்

About the author

க.மோகனரங்கன்

க.மோகனரங்கன்

தீவிர வாசகர்களுக்கு பரிச்சயமான இலக்கியஆளுமை க.மோகனரங்கன் அவர்கள். கவிதை, கட்டுரை, விமர்சனம், மொழிபெயர்ப்பு என்று பல தளங்களில் இயங்கி வருகிறார். இது வரை பல கவிதைத் தொகுப்புகள், சிறுகதைத் தொகுப்புகள், மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகி உள்ளன.

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
Selvam kumar

அருமையான கவிதை, மற்றும் மொழிபெயர்ப்பு , தொடர்ந்து பயணிக்க வாழ்த்துகள்

You cannot copy content of this Website