cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 7 கவிதைகள்

மலர்விழி கவிதைகள்


1. திருப்ப முடியாத பக்கம்

அமேசான் கிண்டிலில் ஒரு மின் புத்தகத்தை புரட்டுகிறேன்
அவன் அப்படி என்னை அடித்தான் என்று முடிந்தது
எப்படி அடித்தான் என்ற கேள்வியுடன் அடுத்த பக்கத்தை திருப்பினேன்
அவனின் கோரைப்பற்களில் சிக்கியிருக்கும்
சதை துணுக்குகள் என் உணர்வுகள் என்றிருந்தது
எதற்கு சாப்பிட்டிருப்பான் என்ற கேள்வியுடன் அடுத்த பக்கத்தை திருப்பினேன்
அவன் கண்கள் ருசித்துக் கொண்டிருக்கும் காணொளியில்
கிழிக்கப்படும் அத்தனை உடைகளும் என்னுடையது என்றிருந்தது
ஏன் கிழித்தான் என்ற கேள்வியுடன் அடுத்த பக்கத்தை திருப்பினேன்
நான் நூலாடை உடுத்திக் கொண்டேன் அவன் விலக்கிப் பார்த்தான் என்றிருந்தது
நீ என்ன செய்தாய் என்ற கேள்வியுடன் அடுத்த பக்கத்தை திருப்பினேன்
பாறையை உடுத்திக்கொண்டு
சிலையானேன் அப்போதும் அவன் தொட்டுப் பார்த்தான் என்றிருந்தது
ஐயோ என்ற பதட்டத்துடன் அடுத்த பக்கத்தை திருப்பினேன்
முற்றும் என்றிருந்தது
கோபத்தில் புத்தகத்தை மூடி வைத்தேன்
போராளிகளே !
இந்தப் புத்தகத்தின் தலைப்பு என்னவாயிருக்கும்?

2. நேசம் ஆதி இனம்

ஒரு வார்த்தை சொல்லிவிடு
என்று இறைஞ்சுகிறாய்
உயிரடைந்த உச்ச போதை அது….

பாராத முகம்
அரூபத்திற்கான மோகம்

கேட்கப்படாத குரல்
காதலுக்கான தாகம்

வார்த்தைகளை அருவியாய் மாற்றிடலாம்

ஆனால் மொழியை விட
நேசம் ஆதி இனம்

சுட்டுப் போகும் நெருப்பை விட
சொட்டிப் போகும் மழை
ஜீவன் தொடும்

அது போல

நாளேடுகள் காட்டாத ஒரு நாளில்
கடிகாரம் கவனிக்காத ஒரு நொடியில்
உணர்வுச் சமுத்திரத்தை கயிறாக்கி
நாம் இழுத்து விளையாடலாம்

யார் ஜெயித்தாலும்
இன்னொருவரை பரிசாய் தரலாம்

அதுவரை விளையாடிக் கொண்டிரு
அதன்பின் வாழலாம்!!


 

About the author

மலர்விழி

மலர்விழி

கவிஞர் மலர்விழி பெங்களூரில் வசிக்கும் மென்பொறியாளர், கவிதைகள் எழுதுவதோடு மொழிபெயர்ப்பும் செய்து வருகிறார். ஓவியங்கள் மீதும்  வரைவதிலும் மிகுந்த ஆர்வம் உடைய,
இவருடைய கவிதைத் தொகுப்புகள் :
’விடாமல் துரத்தும் காதல்’ (எமரால்டு பதிப்பகம்),
“ஜூடாஸ் மரம்” (வேரல் புக்ஸ் ),
மற்றும் மலர்விழியின் மொழிபெயர்ப்பில் ‘அகாசியா மலர்கள்’
- பன்னாட்டு மொழிபெயர்ப்புக் கவிதைகள். (வலசை பதிப்பகம்0

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
S Sabharathinam

மிக நன்று. வாழ்த்துக்கள்

You cannot copy content of this Website