cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 17 கவிதைகள்

கவிஜி கவிதைகள்

கவிஜி
Written by கவிஜி

  • இரக்கமின்றி சாத்தப்படும் நடை 

 

வயதானவர் என்று ஒருவரை விட்டேன்

அசந்தபோது தானாகவே ஒருவர்

அதைத் தொடர்ந்து தெரிந்தவர் ஒருவர்

அழகி என அசடு வழிய வழி விட்டது

ஒரு நிலை

சிறுவனின் கெஞ்சிய முகம்

வா வந்து நில்லென்றேன்

தேநீர் சுரந்த மூளையோடு திரும்பி வர

பார்த்துக் கொள்கிறேன்

என்றவரைக் காணவில்லை

மீண்டும் பத்துப் பேருக்குப் பின்னால்

சற்று முன் குடித்த தேநீர்

கசப்பு நிறைந்தவை

சிந்தனை களைத்த வயதான

பெண்மணி வாஞ்சையோடு பார்க்க

வீரனென விட்டு விட்டேன்

இடையில் இரண்டு முறை

கூண்டுக்குள் இருந்தவர்

தேநீர் குடித்தார்

பெருத்த தொப்பைக்காரர் ஒருவர்

கவுண்டமணி கணக்காய் உள் நுழைந்தார்

கருமம் என நொந்து கொண்டேன்

பிறகு ஒரு குண்டுப்பெண்

மூச்சு வாங்கினாள்

ரோஸ் வாசனையில் இடம் தந்தேன்

மாலை முடியும் நேரத்துக்கு

ஒரு நிமிடம் இருக்க இருக்கவே

ஈவு இரக்கமின்றிக் கவுண்டர் சாத்தப்பட்டது

கட்டாத மின் கட்டண அட்டையோடு

நல்லவனாகவே திரும்பி வந்த போது

இருளடைந்து கிடந்தது வீடு…!

 


  • நாம் என்பது 

 

வழியற்ற போது

வழிப் போக்கன் ஆவது சுலபம்

மயானக் காக்கைக்கு மினுங்கல் அதிகம்

முகமூடியற்ற மாற்றுருவம்

தேவை என்பது கூப்பாடு

மாயமாகும் எப்பாடும் என்பது ஏற்பாடு

கத்தும் முயல் காலாட்டும்

கற்பனைக்கேது அளவீடு

குளறுபடியற்ற குளத்திலிருந்து

மேலெழும் கொக்குக்கு

தான் கொக்கெனத் தெரியாது

மீனின் சொரூபத்தில்

இமையற்ற தத்துவம் ஒரு போதும்

தூங்காது

சொல்லிலடங்கா முத்தங்களை

சேமித்தல் ஆகாது

உடை பட இரு உடல் எப்போதும் உண்டு

நம்பு

இருந்தாலும் இரு வழி இரு துருவம்

முப்பொழுதும் உண்டு

மணிக்கணக்காய் பேசலாம்

மற்றபடி நிகழ்வது நீ நான் மட்டுமே

நாம் என்பதை வேறெப்படித்தான்

பேசிக் கொள்வது……!

 


  • ஒரு மூட்டை அவரைக்காயும் ஒரு சிறு விதைக்காரனும்

 

அப்பா தொட்டில விதை இத்துனூண்டு

முளைக்க ஆரம்பிச்சிருச்சு என்றவன் கண்களில்

நன்கு முளைத்த இரு விதைகள்

நம்பகமான செய்தி தான் என்பது போல

தெளிவாகப் பார்த்த முகம்

அறைக்குள் குட்டி சூரியனைப் போல

மின்னியவனை பார்க்கவே பரவசம் கூடியது

அடிக்கடி விரும்பி உண்ணும் மஸ்ரூம் பிரியாணிக்கு முன்

கிளை பரப்பி வண்ணம் சேர்ந்திருக்கும் வழக்கத்து மாறான

புன்னகையை கடைவாயில் ஒதுக்கிக் கொண்டே

அப்பா கொஞ்சம் பயமாவும் இருக்கு என்றான்

என்னடா இது என்பது போல பார்த்தேன்

அவரைக்காய் கொடியாகி வால்ல பட்டு

மேல போயிடும்னு பாட்டி சொன்னாங்க என்றான்

வாய்ப்பிருக்கு என்றேன்

அய்யயோ அப்ப பக்கத்து வீட்டு திருடன் அங்கிள்

அவரைக்காய் எல்லாம் புடிங்கிட்டா என்ன பண்றது என்று கேட்டு

கண்களில் விதை அழுந்த பார்த்தான்

அடேய்… இன்னும் விதை வெளியவே வரல என்ற போது

சிரிப்பு வந்து விட்டது.

வயக்காடு- மாடு வடிவேலு காமெடி நினைவுக்கு வந்தது

சிரித்து விட்டேன்

என் சிரிப்பைத் தாண்டியும் அவனுக்கு அவரைக்காய் பறிபோவது தான்

யோசனையாய் இருந்தது

கன்னம் கிள்ளி வாய்க்குள் போட்டபடி

ஒன்னும் ஆகாது பாத்துக்கலாம் என்று தூங்க வைத்தேன்

கனவா நினைவா என்று அறுதியிட்டு சொல்ல முடியவில்லை

மொட்டைமாடியில் சாக்குப்பையோடு

பக்கத்துக்கு வீட்டு அங்கிளின் நடமாட்டம்

நான் மூடியிருந்த கண்களைத் திறக்கவில்லை

அவரைக்காய் எவ்வளோ கிடைக்கிறது என்று பார்க்க வேண்டும்

 


  • மரித்தவனும் பேசுவான் 

 

இவன் அவன் இல்ல

டேய் ஒழுங்கா எந்திரிச்சிரு

நானெல்லாம் கார்கடன் கட்ட மாட்டேன்

மரியாதையா எந்திரிச்சு வா

இல்லண்ணா எங்கண்ணன் இப்டி

பொணம் மாதிரி படுக்க மாட்டான்

இவன் வேற

இன்னைக்கும் கூலிங்கிளாஸ்

போட்டுட்டுதான் போவியா சாமி

இப்டி கிடந்தா வீட்டு வேலையெல்லாம்

யார்டா பார்ப்பா

இனி இந்த பைக்கை யார் ஓட்டுவா

எல்லாரையும் கை நீட்டுவியே

இப்ப கொஞ்சம்

கண்ணயாவது திறயேன்

மரித்தவன் முன்னால் ஏதேதோ பேசுகிறார்கள்

பதிலுக்கு அங்கே மரித்தவனும்

பேசிக்கொண்டிருப்பதுதான்

யாருக்குமே கேட்கவில்லை…..!

 


  •  உள்ளங்கை சவப்பெட்டி

 

ஆளுக்கொரு இன்னொரு முகம்

தேவைப்படுகிறது

ஒவ்வொரு விடியலும்

விளம்பரம் தான் இங்கு

யாராவது தொடர்ந்து

புகழ வேண்டும் நம்மை

சராசரியாய் இருத்தல்

அத்தனை குறைதான் போல

கவனிக்கப் பட்டுக் கொண்டே

இருத்தல் தான் இன்பமயம்

பார்வையாளராய் இருக்க

யாருக்கும் விருப்பம் இல்லை

நேராக ஹீரோ ஹீரோயின் தான்

மேடையில் அதுவும்

முதல் வரிசையில் அமரத் தான்

கர்வம் கவுரவம் எல்லாம்

நண்டு சிண்டெல்லாம் அறிவுரை

சொல்கிறது

யார் என்ன சொன்னாலும்

நக்கல் நையாண்டி தான்

அறிவிலிகளுக்கு

அறுக்க மாட்டாதவனுக்கு

முரட்டு சிங்கில் பட்டம் வேறு

21ம் நூற்றாண்டில்

ரகசியங்கள் எதுவுமில்லை

சாதனா ரவுடிபேபிகள் சாட்சி

காலை மாலை மதியம் இரவு என

கையளவு லைக்ஸுகள் தான்

ஊட்டச் சத்து

இப்படி எல்லாம் ஆகும் என்று

கி பி 2000 -த்தில் கூட யோசித்ததில்லை

ஒவ்வொரு நாளும் தறிகெட்டுச் சுழலும் பூமி

உள்ளங்கையில் சவப்பெட்டியாகி

வெகு நாட்களாகி விட்டதை அறிவோமா…..!


கவிதைகள் வாசித்த குரல் : கவிஜி

Listen On Spotify : 

 

About the author

கவிஜி

கவிஜி

கவிஜி கோவைச் சார்ந்தவர் B.com. MBA, PG Dip in Advertising ஆகிய கல்வித் தகுதியுடன் கோவையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் மனித வள மேலதிகாரியாக பணி புரிந்து வருகிறார். ”பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்வதில்தான் எனக்கு விருப்பம். அவைகள் எழுதுவதால் எனக்கு கிடைக்கிறது.” என கூறும் கவிஜியின் இயற்பெயர் விஜயகுமார்.
4000-க்கும் மேற்பட்ட கவிதைகள். 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 400-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் 50-க்கும் மேற்பட்ட குறுங்கதைகளோடு மூன்று நாவல்களையும் மூன்று திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்கள் எழுதி இருக்கிறார். குறும்பட இயக்குநராகவும் செயல்பட்டு இதுவரை 12 குறும்படங்களையும் எடுத்திருக்கும் கவிஜி பன்முகத் திறன் வாய்ந்த படைப்பாளியாக மிளிர்கிறார்.
|
ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, தாமரை, கணையாழி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், மாலைமதி, காமதேனு, இனிய உதயம், அச்சாரம், அத்திப்பூ, காற்றுவெளி உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் பல மின்னிதழ், இணைய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து பலவேறு இலக்கிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website