- சிலுவைக்கால் யாத்திரை
பெருங்கூட்டங்கள்
அவன் கண்ணில் விழுவதில்லை
கார்காரர்களையோ
கூலிங்க்ளாஸ்
அணிந்தவர்களையோ
அவன் கவனிப்பதில்லை
அதேநேரம்
றோஸ் வண்ணம் சுமப்பது
குறித்தான பிரமிப்பும்
அவனிடம் இல்லை
சிரிக்கவும் மறந்த அவன் முகத்தில்
சின்ன மனிதர்களைத் தேடும்
தீர்க்கம் தான் தெருவெங்கும்
வெயில் சுமந்தலையும்
அவன் தோளில்
பாலீதீன் கவர்களில்
புசுபுசுக்கும் பஞ்சுமிட்டாய்
தோரணையெல்லாம்
மற்றவர் வாய் நிறைத்து
தன் வயிறும் நிறைவது தான்
அது மதியதுக்கா இரவுக்கா
என்பது தான்
அவனும் அறியாத
சிலுவைக்கால் யாத்திரை
- ஞானம்
விழுந்தெழும் ஓடை பழகுகிறேன்
முடியாத கத்தலை மேட்டுக்கப்பால்
தெரியாத புள்ளி வைத்திருக்கிறது
அருகிருக்கும் நிழலில்
செடி தளைகளின் ஆன்மா
அசைகிறது
நகர முடியாத சூரியனை
கொன்று புதைக்க கருணை கொப்பளிக்கும்
நதி முனை
மென்றசையும் மேவிய வயிறோடு
மென்னுயிர் எனக்கு
ம்மே எனவும் பெயர்
அரூப சிந்தனையை
பறித்தோடும் ஆட்டுக் காலில்
சக்கரமிருக்கிறது
ஆடு மேய்த்தலில் ஞானம் வாய்க்கிறது
- பழமுதிர் சோலை
அது சுய இறுக்கமா
கடையின் கட்டுப்பாடா
அறியோம்
முகம் பார்த்து கண்டதில்லை
பேச்சும் கூட
தேவைக்கும் குறைவாகத்தான்
முகப்பூச்சோ ஒப்பனையோ
ஒருநாளும் இல்லை
மல்லிகை பூ
குறைந்த பட்சம் ஒரு ரோஜா கூட
ஏன் சூடுவதில்லை
தெரியவில்லை
கூர்ந்து கவனித்தும்
கவனிக்கப்படுகிறோம்
என தெரிந்தும்
எடை போடுவதில் தான்
கவனம் இருப்பது போல இருக்கிறது
கட் அண்ட் ரைட்டாக
பை கொண்டு வந்திருக்கிறீர்களா
என்று கேட்கும் போது
கோபம் கூட வந்திருக்கிறது நமக்கு
தன்னையே யாரோவாக
கொண்டிருக்கும் இவர்கள்
எங்கிருந்து வருகிறார்கள்
என்ன படித்திருப்பார்கள்
யோசித்திருக்கிறேன்
ஒவ்வொரு முறையும் காய்கறியோடு
பில்லுக்கு நிற்கையில் தோன்றும்
இவர்கள் யாருடனாவது
முகம் மலர்ந்து சிரித்து பேசுவதை
ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும்
- மழைச்சி
உதற நினைத்தாலும் முடியாது
சொட்டு சொட்டாய்
மனதுக்குள்ளும் விழுந்து
பழகிய மழைத்துளி இது
நினைத்த நேரத்தில்
தூரத்து அரிசி கனவென
கண்ணில் சரியும்
கிட்டத்து கற்கண்டு நினைப்பும்
அதற்குண்டு
நடுக்கம் தந்தாலும்
நா நடுங்கினாலும்
அது அன்றாட பாடுபொருள்
போர்க்களம் தினசரி என்றாலும்
போராட தயங்காத
பொன்வண்டு கண்கள் ஆயுதம்
மதியத்தில் எது கிழக்கென
சந்தேகம் துளிர்க்க
எட்டிப்பார்க்கும் சூரிய கால்களிலும்
மழைத்துளிகள் தான் தூரி ஆடும்
நடப்பது நடக்க
இருப்பது இருக்க
மரம் குளிர்ந்து
இலையெல்லாம்
இதயம் பூத்திருக்கும்
அஞ்சுமணி அலாரம்
மஞ்சள் பூவென விரிய
தேயிலைசால் கடந்து
ஒற்றையடியில் நடந்து
வீடடைந்து அடுப்பு மூட்டி
வீடு முழுவதற்கும்
உள்ளங்கை சூடு காட்டுவாள்
எல்லாம் வல்ல மழைச்சி