1.
சிறுசிறு வில்லைகளாக உருட்டி
இன்றைய பொழுதுக்கு
இரண்டே இரண்டை மட்டும்
விழுங்கச் சொன்ன போது
இவ்வளவு கசப்பாக இருக்குமென்று நம்பவில்லை.
தொண்டைக்குழிக்குள் இறங்கவேயில்லை.
மூளை நரம்புகளில்
மின்னல் வெட்டி மறைந்தது.
நாக்கில் ஒரு நார் தட்டுப்பட்டது.
இனிப்பாக ஏதாவது கொடு என்றேன்.
அதுவும் கசந்தது.
என் கூச்சலில் அறையே அதகளப்பட்டது.
அப்போதைய என் முகபாவங்களை
ஒரு கண்ணாடி கொண்டு காட்டிய போது சத்தியமாக சகிக்க முடியவில்லை.
விள்ளலில் சிந்திய கோபத் துணுக்குகளை
எந்த அருவருப்புமின்றி
என் கண் முன்னாலேயே அள்ளி
வெளியே போட்டாய்.
நூறு சதவீதம் சுத்தமாகிவிட்ட நம்பிக்கையில்
கசப்புணர்வு
கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது.
இப்போது, நம் முத்தத்தின்
இனிப்பு கலந்த வாசனை அறை முழுவதும்.
2.
மின்கம்பியில் தொங்குகிறது
சிறுமியாய் மாறி
காலம் விளையாடிய ஸ்கிப்பிங் கயிறு.
இப்படி எடுத்துவிடலாம்
அப்படி எடுத்துவிடலாமென
யோசனை சொல்கின்றன சொல்குச்சிகள்.
செருப்பைத் தாண்டி பூமியில் இறங்குகிறது
அச்சத்தின் மென்னதிர்வு.
ஒருமுனையைப் பிடித்து இழுக்கலாமெனில்
எதிர்ப்பக்கம் நிற்கிறது ஏளனம்.
காகம் தனித்து விளையாடிய கபடியில்
எண்களை அசைபோட்டபடி
ஸ்கிப்பிங் கயிறுக்குள்
மறுபடி குதிக்கத் தொடங்குகிறாள் சிறுமி.
3.
ஒரு கூட்டம் கூடியிருக்கிறது.
அமைதியாக அமர்ந்திருப்பவர்களூடே
பூரானாய் நெளிகிறது ஒரு கருத்து.
அது கருப்பா சிவப்பா தடிமனா விஷத்தன்மை உடையதா
ஆராய்ச்சிக்கு உள்படாமல் மடைமாற்றுகிறான்
கோப்பைகளில் தேநீரை ஊற்றுபவன்.
சில சொட்டுகள் சிந்திய இடம்
கைகளால் நிர்வாணத்தை மறைத்தபடி ஓடுவது போலவே இருக்கிறது.
எங்கிருந்தோ வந்த நாயொன்று
சிந்தியதைத் துளிவிடாமல் நக்க
பழைய நிலை திரும்பிவிட்டதாக மெச்சப்படுகிறது.
அடுத்த கூட்டத்திற்குத் தயாராக நீட்டப்பட்ட துண்டுச்சீட்டில்
காட்சியளிக்கிறது
கெட்டித்தன்மையடைந்த பதட்டம்.
சுருட்டி மூலையில் வீசப்பட்டது
விறைப்புக்கான நாளுக்காகத் தவமிருக்கிறது இருட்டில்.
“கூட்டம் முடிந்துவிட்டது
போ… போ… போ…” என விரட்டுகிறார்
வடிவேலு.
கவிதைகளும் குரலும் வெகு அருமை