- துக்கத்தின் வழியாக உன்னை கண்டடைகிறேன்
ஒரு துரோகத்தின்
வெண் நிறத்தை அணிந்து கொண்டு
அலைவது அற்புதமாய் இருக்கிறது
என் சிறகற்ற பறவைக்கு
உன் மலை உச்சி கனவு
நிம்மதி தர கூடியது
நிரம்ப குவிந்து விட்ட
உனை வெட்டி எடுக்கும் எனக்கு
வெட்டுக்கிளியின் சரீரம்
பேரிருள் கடந்து பெருந்தவம் கலைந்து
பெரும் துக்கத்தின் வழியாக
உன்னை கண்டடைகிறேன்
கண்டடைதலின் நிறைவு
ஒருபோதும்
காணப்பட்டவைக்கு தெரியாது…!
-
ஞானம்
விழுந்தெழும் ஓடை பழகுகிறேன்
முடியாத கத்தலை மேட்டுக்கப்பால்
தெரியாத புள்ளி வைத்திருக்கிறது
அருகிருக்கும் நிழலில்
செடி தளைகளின் ஆன்மா
அசைகிறது
நகர முடியாத சூரியனை
கொன்று புதைக்க கருணை கொப்பளிக்கும்
நதி முனை
மென்றசையும் மேவிய வயிறோடு
மென்னுயிர் எனக்கு
ம்மே எனவும் பெயர்
அரூப சிந்தனையை
பறித்தோடும் ஆட்டுக் காலில்
சக்கரமிருக்கிறது
ஆடு மேய்த்தலில் ஞானம் வாய்க்கிறது
- குறியீடு
பிணத்தை குழப்புவதற்காக
முச்சந்தியில்
மூன்று முறை சுற்றுகிறார்கள்
ஒவ்வொன்றாக பொறுக்கிக் கொண்டே
வருவதற்குள் இருட்டி விடும்
என்பதற்காக தான் பிணம் செல்லும்
சாலையில் பொரி போடுகிறார்கள்
ஒருவேளை மூன்றாவது நாள்
செத்த ஆன்மா வீடு வந்து சேர்ந்தாலும்
முகத்தில் அடித்தாற் போல
இருக்கட்டுமென தான்
கறி சோறு தின்கிறார்கள்
அதன் பிறகான நாட்களில் வாசலில்
ஆணி அடித்து வைக்கிறார்கள்
தெரு முக்கில் சிறுகட்டை
அடிக்கிறார்கள்
குறியீடாக சொல்வது இது தான்
இனி இங்கு இடமில்லை போய் விடு
இறப்பை விட கொடுமையானது
இறந்தவனாய் இருப்பது
அதை விட கொடுமையானது
இறந்தவனோடு இருப்பது…..!
-
அடைபட்ட ஒற்றை முகம்
ஒரு கோலி குண்டை
விட்டெரியும் நடுவிரலின்
சற்று முந்தைய குறி பார்த்தலும்
நடுக்கமும் எனக்கிருக்கிறது
இனம் புரியாத
தெரிந்த மொழியை
பகிர வேண்டாமல் விசும்பும்
நீள்வட்ட நெகிழிக்குள்
அடைபட்ட ஒற்றை முகம்
எனதாகவும் இருக்கிறது
இரண்டு வழிகள் சந்தித்த பின்னும்
மூன்றாவது வழி வருமென்ற
கற்பனைக் கோட்டையை
கட்டுவது நானாகவும் இருக்கலாம்
திராட்சைத் தோட்டமோ
தேகத் தோட்டமோ
புதைபட ஒரு கால் சுற்றிய
பாம்பை வளர்க்கிறேன்
சுற்றிக் கொண்டது பாம்பல்ல
நானேதான்
மூச்சு திணற முயங்கித் திரியும்
இரவுநேர மேட்டாங்காட்டு இரவில்
பார்வையாளனோ பங்களிப்பவனோ
இம்முறை நீங்கள் கூறும் நான்….!
-
வண்ணமற்ற சுடர்
கைகளை கட்டியிருக்கிறது
வெள்ளந்தி புன்னகை
கண்களில் இடுங்கியிருப்பது
கால தோரணை
மௌனம் பூசிய
முன் நெற்றியில்
மறந்து போன மந்திரம்
பெருந்துயரெல்லாம்
பிரகாசிக்கும் தான்
மௌனத்தின் மொழி
தாங்கொணா ஜுவாலை
துக்கத்தின் உயரமென
வண்ணமற்ற சுடர்
கவிதையை
அடுத்த பக்கம் நகர்த்தும் முன்
மறைந்து போகிறது
தேவாட்டுக்குட்டி
வனாந்தரத்தில் தேடி அலைந்து
திரும்புகிறேன்
தோளில் வந்தமர்ந்திருக்கிறது
கைவிடப் பட்ட சிலுவையொன்று…!