1. இன்னும் சற்றுநேரத்தில் மூழ்கிவிடும் பழுத்த இலை.
உருளாமல் எப்படியாவது
ஓரமாக ஒதுங்கத் தான் பார்க்கிறது கூழாங்கல்.
சிறு காற்றுக்கும் மென்னசைவு கூட இன்றி
அலையடிக்காதிருக்க முயற்சிக்கிறது மேற்பரப்பு.
உதிர்ந்த பூ மிதக்கையில்
காதலாகிக் கசிந்துருகுகிறது.
ஒடிந்த கிளையை இறுகப் பற்றிய புழு
கரை சேரும் வரை
360° சுழலாமல் இருக்க வேண்டும்
மீனின் கண்கள்.
எத்தனை முறை அள்ளி ஊற்றினாலும்
பற்றியெரிகிறது வனம்.
வடிகட்டாமல் கொட்டிய சொற்களாய்
மிதந்து வரும் வெண்நுரை.
மடையின் திறப்புக்காக உலர்ந்திருக்கிறது வரப்புகளில் வறட்டுப் புன்னகை.
பெருவெள்ளமெடுத்து
அருவியாய் விழுகையில்
குளிக்கத் தடை விதிக்கப்படும் நதிக்கு
என் சாயல் என்கிறார் எல்லைச்சாமி.
2.
எல்லாத் துன்பங்களையும்
குடைந்து தின்றுவிடும் புன்னகை
ஒரு புழு.
தன்னைச் சுற்றிக் கூடமைத்து
வண்ணத்துப்பூச்சியாக வெளிப்படும் போது
புகைப்படக் கருவியாகின்றன கண்கள்.
ஒவ்வொருமுறை புன்னகைக்கும் போதும்
அதுவொரு வழக்கமான
வண்ணத்துப்பூச்சி அல்ல.
அதன் வண்ணங்களைத் தீட்டும் ஓவியன் மனக்குகையில்
ஆழ்ந்த தியானத்தில் இருக்கிறான்.
வண்ணத்துப்பூச்சியின் கால்களில்
எப்போதும் மகரந்தமாக ஒட்டியிருக்கிறது ஒரு கொத்து மகிழ்ச்சி.
எறும்புகள் இழுத்துச் செல்லும் சிறகும்
பச்சோந்தியின் வாயில் அகப்பட்ட
முழு வண்ணத்துப்பூச்சியும்
படபடப்பை அதிகரிப்பது இயல்பே.
பூவும் காயும் கனியுமென
பசுமையாக இருக்கிற தோட்டத்தில்
இணையைத் தேடி வருகின்றன
மேலும் சில வண்ணத்துப்பூச்சிகள்.
உங்கள் அறையை விட்டு வெளியேற
நெடுநேரமாகத் தவிக்கிறது
ஒரு வண்ணத்துப்பூச்சி.
அந்த மின்விசிறியைச்
சற்றுநேரம் அணைக்க முடியுமா?
3.
நின்று போன அல்லது ஓடும் கடிகாரம்
கழுத்தில் கிடந்த அடையாள அட்டை
அலைபேசி மின்கலத்தை
உசுப்பேற்றும் கேபிள்
விரும்பியோ விரும்பாமலோ
பிம்பம் காட்டும் கண்ணாடி
எரியாமலே அழுக்கடைந்து தொங்கும்
அலங்கார விளக்கு
கொடியில் உலரும் கைபிடி துணி
முடிந்து போன மாதங்களைப்
பின்பக்கம் மறைத்திருக்கும் காலண்டர்
பால்கனியில் ஆடும் மூங்கில் ஊஞ்சல்
முற்றத்து வேம்பில் வளரும் தேன்கூடு
வளைந்த கம்பியில் குத்தப்பட்ட
வழக்கொழிந்த கடிதங்கள்
மெல்லிய காற்றுக்கும்
ரகசியம் விலக்கிக் காட்டும் திரைச்சீலை
பழம்பெருமை பீற்றும் புகைப்படங்கள்
ஒரே சீராய் மாட்டப்பட்ட குழம்புக் கரண்டிகள்
இவற்றுள் ஏதோவொன்றாக
நினைத்துக்கூடத் தொங்கவிட்டிருக்கலாம்
என் நினைவை
உன்னுள்.
4.
நமக்கு நாமே வரையறுத்த
அன்பின் வாசலில்
நின்று கொண்டிருக்கிறோம்.
ஒப்புக்குப் பரஸ்பரம் நாம் அனுப்பிய
பரிசுப் பொருள் ஏன்
இன்னும் நம் கை வந்து சேரவில்லை?
கொஞ்சம் சலிப்பான புன்னகை
கொஞ்சம் மறைக்கப்பட்ட கண்ணீர்
கொஞ்சமும் வெளித் தெரியாத மன்னிப்பு
இவை தானே நம் முகவரி?
அஞ்சல்காரர் எப்போதுமே இப்படித்தான்
ஒரு எளிய மணிச்சத்தத்தின் மூலம்
படிகளில் இறங்க வைத்து விடுகிறார்
நம் மனநிலையை.
அவருக்கு நம் கையெழுத்து போதும்
வலதுகாலை சைக்கிளில் தூக்கிப் போட்டு
அடுத்த தெருவுக்கு நகர்ந்து விடுகிறார்.
எல்லா வேலைகளையும் முடிக்கும் வரை
பரிசுப் பொருளுக்குப் பொறுமையில்லை.
மேலே சுற்றப்பட்ட அந்தத் தாள்
என்ன பாவம் செய்தது?
ஒழுங்கின்றிக் கிழியும் போது
சுரீரென்று அடிவாங்கிய குழந்தையின்
கதறலை நாம் ஏன் கவனிக்கவில்லை?
நம்மைப் பார்த்துப் பல்லைக் காட்டுகிறது
பரிசுப் பொருள்…
எவ்வித சலனமுமின்றி
ஒரு பிரத்யேக அழைப்புக்காகக் காத்திருக்கிறோம்.