-
காதன்மை
சலிப்பான இரவொன்றின் நடுவில்
ஏதேனும் ஒரு புத்தகத்தோடு நீ..
பழைய நினைவுகளின் பச்சை வாசனை பாடலோடு நான்.
எடுத்தெறிய மனமில்லாமல் ஓவியத்தன்மையோடு
ஓடாத கடிகாரமொன்று
நகராத முட்களோடு
நடன ஆரம்ப நாட்டிய மங்கையாய்
நின்ற இடத்திலே காலைத்தட்டி
அசைந்துகொண்டிருக்கிறது.
மௌனத்தைக் கலைக்கவென
மெதுவாகத் தவழ்ந்து வந்து இருவருக்குமிடையே
பிடிவாதக் குழந்தையெனப் படுத்துக்கொண்டு
அணைத்துக்கொள் என அடம்பிடிக்கிறது குளிர்…
யாரும் துணைக்கில்லா
இவ்விரவில்
இருட்டின் இன்னதென தெளிவில்லா யோசனையில்
உனக்கான யாத்திரை பயணியாய்
கால் கடுக்கக் காத்திருக்கிறேன்.
கைவீசிச்செல்லும் கரங்களில்
எனதுடலடங்கிய குளிர் கரம் தேடி அலைகிறது மெய்யுடல்.
கடந்துபோகும் காற்றிலெல்லாம் உன் ஒளிமுக வாசனை,
பெருத்த மழைக்காட்டில் வழிதவறிய பிறந்த மான்குட்டியாய்
பார்க்கும் விலங்கிலெல்லாம்
மடி தேடப்பார்க்கிறது எனது அறியாமை
எங்கிருக்கிறாய் நீ,
துணைக்கு யாருமில்லா
நிலவில்லா அமாவாசை வானமாய்
உனக்காகத் தனித்திருக்கிறேன்.
பூக்கொய்கையில் விரலோடு
மஞ்சள் வண்ணமாகப் பிடிவாதமாய்
ஒட்டிக்கொண்டப் பொன்மகரந்தமே!
விரல்களில் வெயில்பட்டு மின்னிக்கொண்டிருக்கின்றன
மீண்டும் செடியாக முடியாத
கன்னி மகரந்தத்துகள்கள்…
உன் கன்னம்பற்றி திருகிவிடும்
எனது விரல்ப்பட்டு
உன் மீசையில்
பூத்து குலுங்கப்போகின்றன
நுனியில் ஐந்து சிவப்பு குஞ்சங்கள் ஆடும்
ஆயிரம் சிவப்பு செம்பருத்திப்பூக்கள்..
-
சொற்குற்றம்
வெண்ணிலா வெள்ளி ஒளி வீசும்
அமாவாசை இரவில்
உன் கரம் கோர்த்து
கடல் நனைந்தேன் நினைவிருக்கா?
கொதிக்கும் வெயில் நடுவே
நம்மிருவரையும்
சுற்றிப் பொழிந்த மழை மீறி இணைந்து
குதித்து நடந்தோமோ நினைவிருக்கா?
கடல் பூத்த தாமரை தண்டொடித்து
மைத்தொட்டு மடல் எழுதி
மாலையாக்கிக்கோர்த்து
உன் சிரம் தழுவிச்
சூட்டி நின்றேனே நினைவிருக்கா?
என் நினைவுக்குள்
ஒற்றை தங்கமீனாய்
செதிள் அசைந்தாடி நீந்தியலைந்து
வாய்பிளந்து
சுவாசித்து திணறும்
நீயில்லாத வெறுமை ஒரு சொற்குற்றம் …
- மாற்றெழுத்து
மழை நாளின் ஆதிமனுசியின்
குகை பதுங்கிய
உணவுக் கிடைக்கா
இரவொன்றின் நடுநிசியின்
இடிமுழக்க மின்னலொளியில்
வரையத் தொடங்கிய
ஓவியமொன்றின்
சிதறல்கள் தான் எழுத்துக்கள்..
அவளின் மேனி படர்ந்த பயத்தை,
நாடி நிமிர்த்திய வெட்கத்தை,
கூடிக்கழித்த பொழுதினை,
குடல் எரியும்
பிரிவினை,
எழுத்துக்களாய்
வரையத் தொடங்கியவளை
இப்பொழுதும் காணலாம்..
மழைநீர்த் தொட்டுச் சுவரிலோ,
பேருந்துக் கண்ணாடியிலோ,
காதலை வெற்றுக்காற்றிலோ
கைகளால் எழுதித் தீர்த்துக்கொண்டேதான் இருக்கிறாள்…
எனினும் இன்னும் தீர்ந்தபாடில்லை
வலிகளும்,எழுத்துக்களும் …
Courtesy : Image – Illustration : Jody Pham