விலகியிருக்கும் மைல்கற்களின்
உரையாடல் என்னவாயிருக்கும்
யுத்தத்திலிருந்து திரும்பியவனின் காதுகளாய்
தவிக்கும் மனதோ
சதா உருமாறும் விலங்கு
நேசத்திற்கு ஏங்கும் பொழுதில்
வேரை மறுக்கும் மணலில்
பிடிவாதம் காட்டும் தாவரம் ஆசை
தலைகோதும் அன்பின் பிடிப்பில்
தவிக்கும் மான்குட்டியின் மருண்ட விழிகள்
இந்தப் புது மனநிலை
உறவை நிரூபிக்கச் சொல்லும் நாளில்
ஜேசிபியின் கரங்களுக்கு
வாரிக் கொடுத்த மலையின் மீட்சி
உன் வாசம்
ஆழ்ந்த ரணம் ஆறாத காலம்
தன்னை பணயம் வைத்து
பதிலுக்கு பெறப்படும் மதுக்கோப்பை
மனமுருகிய நினைவுகள்
கசையடிகளுக்கு பழக்கப்பட்ட வாழ்வில்
உன் மடி சேர்ந்து பெறப்பட்ட முத்தக்கணம்
சட்டகத்தின் பின் இடப்பட்ட தேதி
பிருந்தா இராஜகோபாலன்