கவிதைகளுக்கும் மேலாக
கவிஞனாயிருப்பதற்கு
ஏதோ ஒன்று செய்யவேண்டியுள்ளது
அது நிச்சயம்
ஒரு கவிஞனால் செய்ய முடிவதுதானா என்பது சந்தேகம்தான்..?
கவிதைகள் எளிய விஷயங்களை கைசுண்டி காண்பிப்பதாக
ஒருவர் நம்புகிறார்
கையருகிலிருக்கும் கதவினைக் கூட
கவிதையால் சாத்தமுடியாதென மற்றொரு கவிஞர் சொல்கிறார்
நான் கவிதைகளைப் பற்றி என்ன சொல்வேன்
என் மண்டையோட்டை சரிசெய்துகொள்ள
எனக்கு இன்னும் சில ஆணிகள் தேவைப்படுகின்றன
மேலும் உயிர்வாழ முடிகிறதென்றாலும்
கதவிற்கு வெளியே சதா ஓநாய்களின் நடமாட்டம்தான் கேட்கிறது
இப்போதைக்குக் கவிதைகள் என்பது
வேலைப்பாடுகள் செய்யப்பட்ட
ஒரு தக்கையான ஊன்றுகோல் அவ்வளவுதான்.
எதையேனும் வேண்டி நிற்கும்போது
எனக்கது தரப்படுவதுமில்லை
மாறாக ஒரே வரியில் மறுக்கப்படுவதுமில்லை
கொஞ்ச நாளில் உடலில் எங்காவது
அதுவொரு காயமாக
மாறியிருப்பதை கண்டுகொள்ளும் போது
எனக்குக் குழப்பமாக இருக்கும்
யாரோ சிலர் வருகிறார்கள்
எல்லாப் பணிவிடைகளையும்
ஒரு வார்த்தை மறுத்து பேசாமல் அப்படியே செய்கிறார்கள்
நிழல் போல போகுமிடமெல்லாம் தொடர்ந்து வருகிறார்கள்
இதற்குமேல் எதையும் சந்தேகிக்க தேவையில்லையென
கொஞ்சம் மனமிரங்கும் போது
நேராக ஒரு மலையுச்சிக்கு அழைத்துச்சென்று
சக்கர நாற்காலியோடு சேர்த்து
குப்புற தள்ளுகிறார்கள்
அந்த உயரத்திலிருந்து ஒரு பஞ்சுபொதி போல
எந்தக் கூச்சலுமெழுப்பாமல் உருண்டுசெல்ல
எத்தனை முறை அதை ஒத்திகைப் பார்த்திருக்க வேண்டுமென
அவர்களுக்கு தெரியப்போவதில்லைதானே?
உதயகுமார்