- அர்த்தச் சபைகளின் முன்
நான் ஒரு மகாராணியைப் போலவே
வாழ்கிறேன்
கொண்டு
கொடுக்கிற வாழ்விற்குள்
அங்குசம் நிறுத்தும் எல்லை
என் அவிழா சொற்களின் காடு
நான் ஒரு மகாராணியைப் போலவே இருக்கிறேன்
நன்றிக்கு பயிற்றுவிக்கப்படும்
பிரியம்
ஒரு பாதி ஏமாற்றும் போதும்
சிரிக்க என்னிடம் உதடுகள் உண்டு
நான் ஒரு மகாராணியைப் போலவே இருக்கிறேன்
அதிகாரம் இலக்காகும் போது
அடக்கும் இலச்சினை
டி.என்.ஏ இலைச் சுருளை சுவடியாக்கும்
வழிவழியின் மேல்
பதிலற்ற கேள்விகளின் காட்டாறு
இருந்தும்
நான் ஒரு மகாராணியைப் போலவே இருக்கிறேன்
உறவுகள் மேல்
உரிமையின் மேல்
கண்களின் மேல்
காதலின் மேல்
களவு போகும் கூரை திறக்கும் வழிக்கு
வழி செய்யும் வானத்தில்
கடக்கும் மேகம் என் கையளவுக்கான நீர்
எழுதி அழித்து
சொல்லில் மறைத்து
உள்ளுக்குள் நடந்த ஊமை நாடகத்தில்
மாற்றப்படும் காட்சியில்
நம்பியவை
நடந்தேறியவை
கனமாக்கும் இடைவெளிக்குள்
நின்று கொள்ளும் ஒற்றைக் கண்கள்
ஏமாற்றும் சபையில்
மண்டியிட மறுக்கிற குற்றம்
என் முதல் தவறு
இருந்தும்
நான் ஒரு மகாராணியைப் போலவே இருக்கிறேன்
கல்லெறிதல் திரும்பும் ஈர்ப்பு விதிக்குள்
ஒரு வட்டப் பாதை
பறக்கும் தட்டை நாமறியாது தரையிறக்கும்
நம்பிய உலகம் அங்கே திறக்கும் போது
பறக்க தோதாய் சிறகுகள் உண்டு
அங்கு
நீ உண்டு செரித்த அரிதாரம்
கலையும் சபையில்
இருப்பேன்
நான் ஒரு மகாராணியாய்
The handmaid’s tale- ofred, moria, janine and emiley க்காக
- அலை மோதும் மனதுக்கு மினுக்காக..
தந்து பெற்றவைகள் தரவரிசையாகும்
நிகழ்வை துணைக்கழைக்கிற
சொல் நளினத்தை
குற்றம் சொல்லவா முடியும்
முடியும் சொல்
தொடக்கி வைக்கிற படிக்கட்டில்
ஏறும் அர்த்தம்
இறக்கும் காலத்தின் மேல்
பறப்பதில் என்ன பலன்
தலைகீழ் உரிமைக்குள் முளைக்கும்
கண் மேல்
வெளிச்சம் விழ
இரவை துணைகொள்ளும் கைவிடலில்
ஒட்டிக்கொள்கிறது அகராதி
கற்றுக் கொண்ட கடல் மேல்
சிறகள்ளி விரியும் விலாசம்
விடியச் செய்யும் வகைக்குள்
முளைக்கிறது
கரை
- துணைக்கொள்ளல்
விலகி வந்த காற்றை தான்
விரும்பி அணிந்து இருக்கிறது
இரவின் திரைச்சீலை
உள்ளுக்குள் நடக்கும் திரை அசைவிற்கும்
வெளியில் கடக்கும் திரை நழுவலுக்கும்
ஒரு வலைப்பின்னலைப் பின்னிவைத்து
கீழிறங்கும் கால்கள்
கனவுகளாக
காலங்களாக
நேரங்களாக மீந்திருக்க
நீந்திவரும் நினைவலையில் மனம் இசைய
இரவின் மேலேறி வருகிறது
ஒரு பொழுது
கைக்கொண்ட காற்றைத் துணையாக்கி
- மணம்
இயல்பை காட்டுகிற
உடல் மொழி
ஒரு கொல்லனின் பட்டறை
பழுக்கக் காய்ச்சிய பின்
பக்குவத்திற்கு அடிக்கிற பயிற்சி
பிடி திருத்த
வழிகிற வியர்வையில்
மிணுங்குகிறது
உப்பில் பூத்த நம்பிக்கையாகி