அந்தியின் ஜீவன்
சொல்லில் அடங்காதது
ஒரு கள்வனைப் போல்
நிலம் நுழையும் அமைதி
தேர்ந்த மாயாவி போல
போர்த்தி விடுகிறது மாபெரும் இருளை
நான் இருளின் நுனியைத் தொட்டேன்
இருள் வெளிச்சமாக இருந்தது
அது வானில் முடிந்திருந்தது
என்னில் ஆரம்பித்திருந்தது.
எல்லாம் சரியாவென பார்க்க
வெண்ணிலா உலா வரும் முன்னிரவுப் பொழுதில்
சிவப்பு, நீல நட்சத்திர விளக்குகளை
ஒவ்வொன்றாய் ஏற்றிக் கொண்டிருக்கிறது வானம் –
நகரும் வீடுகளென மிதக்கும் மேகங்கள்
தம்முள் வெளிச்சத்தை ஏந்திக் கொள்ள.
இதயத்தில் மேகங்கள் இறங்கிய அவ்வேளை
நான் வெளிச்சமாக ஆகியிருந்தேன்.
நாளெல்லாம் பார்த்திருந்த
இந்த பிரபஞ்சத்தின் சோகங்கள்
நினைவெல்லாம் கோர்க்கப்பட்ட கண்ணீர்த் துளிகள்
வாசல் மணிச் சரமென காற்றில் சிணுங்கி
பின்னிரவின் அமைதியில் ஒவ்வொன்றாய் அமிழ
காற்று மகிழ்ச்சியை இலைகளில் எழுதி
இளஞ்செடியோடு அசைய விடும் காலம்
நான் மகிழ்வின் நிழல்கள் படரும் இருள் நிலமாவேன்.