- மரப்பாச்சி பொம்மை
ரகசியம் பேசிக் கொள்கிறார்கள்
க்ளுக் சிரிப்பு அவ்வப்போது
கலகல சிரிப்பு எப்போதாவது
வெயில் தேசம்
வேகு வேகென கடக்கையிலும்
முகம் சுளிப்பதே இல்லை
மாற்றி மாற்றி
பேசிக் கொண்டே இருப்பது
பார்க்கும் கண்களை விரிக்கிறது
ஒன்றுக்கொன்று ஆதரவென
ஆலமர நிழல் ஒன்று
குளத்து மேட்டு நிதானம் ஒன்று
ஓய்வெடுக்கையில்
இரு பெரும் மௌனம்
இசையென தூரத்து ரயிலை ரசிக்க
நான்கு கண்களும் ஒரே திசையில்
நமக்கு தான் அவர் தோளில் இருப்பது
மரப்பாச்சி
அவருக்கு அது அவர் ஆச்சி
- அலைக்கற்றை நினைவு
சட்டென அழித்து விடவும்
முடிவதில்லை
பெயர் மாற்றிட நினைத்து
அதுவும் சரி அல்ல என்கிறது மனது
முன் பின் பெயர் காணும் போது
கண்ணில் பட்டு விடும் நொடியை
கடப்பது மூச்சடைக்கும் செயல்
பின்னிரவில் வந்த அழைப்பு
அதே பெயரில் இருக்க
கண நேரத்தில் நின்று துடித்தது
இதயம்
ஒரே செய்தியை ஒவ்வொருவருக்காய்
அனுப்புகையில் இடையில்
பெயர் கண்டால் நிமிட துக்கம்
நின்று தாக்கும்
பின் ஒரு முறை செய்தியை
மாற்றி அனுப்பி அதுவும் சென்று
சேர்ந்ததென வந்த தகவலில்
தவித்து பயந்தது திகில்
இப்படி இன்னும் இன்னும்
முன்னும் பின்னும்
நினைவென்னும் அலைக்கற்றையில்
பயணித்துக் கொண்டேயிருக்கிறது
இறந்தவனின் அலைபேசி எண்…!
- காகமே காகமே
எப்போது வந்ததோ
எப்படி வந்ததோ
வந்த திசைதான் வந்த திசையா
பசியா ஓய்வா பயணக்களைப்பா
பார்த்து பார்த்து பார்க்கிறது
அமைதி என்றும் சொல்ல இயலாத
தலை திருப்புதல்
வெளி அசைக்கும் யுக்தி போல
கண் மூடி கண் திறக்கையில்
வண்ணம் நினைத்திருக்கலாம்
கத்துவது பற்றிய யோசனையை
கத்தாமலும் சேர்த்திருக்கலாம்
நான் அசைய மறந்து
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
என்னை அசைத்து விடத்தான்
பார்த்துக் கொண்டிருக்கிறதோ
வந்தமர்ந்த காகம்
அல்லது
வந்ததால் அமர்ந்த காகம்