-
மெல்ல பறக்கிறேன்
பெருவனம் சுமக்கிறேன்
வழி தவறி
புது வழியில் என
ஒற்றையடி சத்தங்கள்
ஒளி பிறழ்பவை
மரப்பொந்தில்
மையல் கொண்ட
மதியத்தை மடைமாற்ற
மறுநாளும் வரும்
பிறகெப்படியாவது
பின்னொரு நினைப்புக்கு
சிறகு பூட்ட அலைதலில்
அர்த்தமும் காண்கிறேன்
நட்சத்திர நங்கூரங்கள்
பொறுக்கும்
தலைகீழ் தவம் சுவை
நிகழ்ந்த ஒன்றில் நீக்கமற
நீலம் பூக்கும்
குறிஞ்சி கனவை
உயர பறக்கும் உன்னதமென
நடுநிசி கொள்ள வியக்கிறேன்
நற்செய்தி நாலா திசைகளிலும்
மெல்ல படிக்கிறேன்
பிறகு மெல்ல பறக்கிறேன்
-
நகர சந்துகள்
நாய்களை கவனித்து கடந்து விடும்
வாலாட்டுதலை எங்கும்
மறைக்க முடியவில்லை
தெரு விளக்குகளின் கீழே
ஒருபோதும் இசைப்பதில்லை
இருள்
இருவர் பேசிக் கொள்வதும்
மூவர் பேசிக் கொள்வதும்
வாசல் வழி அரங்கேறும் தனி தனி
திறந்திருக்கும் கதவுகளில்
எது மூடியிருப்பவை
எதையோ மூடி இருக்கும் அவை
யுகம் கடந்த நட்சத்திரங்களை
எட்டிப் பறித்துவிடும் தோரணை
எம்பிக் குதிக்கும் எதிர் வீட்டு சிறுமிக்கு
வரைந்து முடிக்க முடியாத வீதியில்
புது வீடுகளின் வழியே
தொடுவானம் அடைபடுகிறது
தேடும் திருப்பங்களில் எல்லாம்
சந்துகள் உண்டு
நகர சந்துகள் சுதந்திரமானவை
-
நான் உன் வனப் பறவை
கருணைமிகு காட்டில்
நின் விதையென கிடக்கிறேன்
நீ வளர்க்கும்
கடுகளவு பூச்சிக்கும்
குரல் கொடுக்க ஆசை
ஒற்றையடியில் உள்ளம்
விரித்திருக்கிறேன்
பாதம் பதி பவளம் விளையட்டும்
உடும்பாகி மரமேறும் வித்தை
கற்றுத்தா
மரமாகி மலர் தூவ பேராசை
நுட்ப கரணமடிக்கும் வண்டுகளில்
கரிய நிறம் பூசலாம் வா
உடலெல்லாம் உன் கவிதை வரி
கிறுக்கித் திரியும் தனித்த புலியும் நான்
உன் நினைவாட்டும் யானைக்கு
வாலாட்டும் கரிசனம் எனக்குண்டு
நான் உன் வானத் துண்டு
மர பொந்தில்லெல்லாம்
மௌனம் கட்டுகிறேன்
நான் உன் வனப் பறவை
சுள்ளி பொறுக்க அனுமதி கள்ளியே
சூடாவனம் நீயென அறிய
சூடிய சுடர்கொடியும் நீயே என அறிய