-
நியூட்டனின் ஏழாம் எட்டாம் விதி
இது ஒரு தியரி
ஒரு தேற்றம்
நியூட்டனின் ஏழாம் எட்டாம்
விதியெனவும் சொல்லலாம்
கலியுகம் என எவனோ எப்போதோ
சொன்ன நினைவு
முன் பின் திரும்பி பார்க்கும் இடைவேளை
எனவும் சொல்லிக் கொள்ளலாம்
இது ஒரு ஞாபகம்
இது ஓர் அதிர்வு
எப்போதோ கேட்ட ஒரு பயங்கர கதை
குரூர ஆர்வம் மேலோங்க
அடுத்து என்னதான் ஆகும் என
மறைந்திருந்து காணும் பேராவல்
கோபம் விட்டொழிய சகிப்புத்தன்மைக்கு
கொடுக்கும் விலை
கூடி நின்று தனித்து நிற்கும் முரண்
மிக மெல்லிய கோட்டில்
கோடி பாதங்கள் கடக்கும் சாதகம்
மெய்மறத்தல் அற்ற விழித்துக் கொண்டே
தூங்குதலுக்கு பழக சொல்லும் யுக்தி
எல்லா கடவுளர்களும் கைவிட
ஆகாரம் கடவுளானது
மீண்டெழுந்த பழைய தத்துவம்
ஒவ்வொரு வீட்டுக்கும் எல்லைகள்
வகுக்கிறார்கள் வாழ தெரிந்த வல்லவர்கள்
இது ஒரு புது முறை
ஒரு கெரில்லா போர் முறை
மரணங்கள் தான் இங்கே விழிப்புணர்வு
மானுட யதார்த்தம் தனித்திருக்க பழகவில்லை
தன் மண்டை உடையும் வரை
எல்லாமே தக்காளி சட்னி தான்
இது ஒரு வடிவேலு நகைச்சுவையும் கூட
சிவாஜியின் சட்டி சுட்டதடா கை விட்டதடா
காட்சியும் தான்
இது ஒரு போர்க்கள ஜெர்மானிய சினிமா
இது ஒரு சார்லி சாப்ளின் ஊமைப் படம்
இரண்டாயிரத்தில் உலகம் அழியும் என்பதன்
ஸ்லொவ் மோஷன் காட்சி
இருபது வருடம் தள்ளி வந்திருக்கிறது
இது ஒரு வரைய மறந்த கிறுக்கல்
வாய்க்கு வந்த உளறல்
டீக்கடை பெஞ்சில் இரட்டை டம்ளர் முறைக்கு
எதிரான குரல்
இது மனுஷப் பயலுகள் ஓர் இனம்
ஆண்ட சாதி அடிமை சாதி என
ஒன்றும் இல்லையென்று
ஒரு பூச்சி சொல்லும் சித்தாந்தம்
இது ஒரு கோடை நாட்கள்
குறைந்த பட்சம் ஞாயிறு விடுமுறை
வாழ்வதென்பது சாகாமல் இருப்பது
சாவென்பது செத்தாலும் தீராதது
இது ஒரு குழப்பம்
ஒரு தூரத்து கானல் நீர்
காசுள்ளவனும் சாவான் என்ற டீசர்
வஞ்சம் வன்மம் வேலைக்காகாது
வாரி அணைத்தலும் பொருந்தாது என்ற
பற்றற்ற நிலை
இது ஒரு காலத்தின் சாட்சி
ஒரு வரலாற்று சோகம்
இது அழுது தீர்ந்து ஆகாயம் பார்த்து
பிறகு எடுத்துக் கொள்ளும்
ஒரு நவீன செல்பி
-
ஐந்து அப்பமும் இரண்டு மீனுமாக
அப்படியாக யாவருக்கும்
ஆசி வழங்கப் பட்டது
குருடர்கள் பார்வை அடைந்தார்கள்
முடவர்கள் நடந்தார்கள்
காணாத கஷ்டங்கள் தீர்க்கப்பட்டன
சொற்பொழிவும் சொற்றொடரும்
சொரூப சிந்தனையென
நீண்ட வரிசைக்கு
ஐந்து அப்பமும் இரண்டு மீனுமாக
பரிமாறப்பட்டன
அன்பின் ஆயிரம் கைகள்
அடுக்கடுக்காய் அற்புதம் செய்தணைத்தது
மறுகன்னம் காட்டும் திடமே மந்திரம்
மானுடத் தவறுகள் சிலுவையில்
சரி செய்யப்படும் என புன்னகைத்தார்
அன்றைய நிகழ்வு இனிதே நிறைவடைந்தது
அதன் பிறகு பாதியில் விட்ட
மரக்கட்டிலை செதுக்க ஆரம்பித்தார்
இன்று முடித்து கொடுத்தால்தான்
அரிசி வாங்க முடியும்
மரியாள்
வெற்றடுப்போடு காத்திருக்கிறாள்….!
-
ரமேஷ் என்கிற ஆட்டு மூக்கன்
அவன் பேசிக் கொண்டிருந்தான்
யாரிடம் பேசுகிறான்
என்ன பேசுகிறான்
எதுவும் புரியவில்லை
குளிர்கால காலைப் பனிக்குள்
ஒளிந்து கொள்ள
முற்படுவதாகவே
இருந்தது அவனின் இருத்தல்
ஆட்டைப் போல அடிக்கடி கத்தும்
அவனின் செயலும் முக பாவமும்
தவம் செய்யும் மரத்தடி நிழலாய்
தெரியும் எனக்கு
தொடுவானம் இதோ
தொட்டு விடுவான் போலத்தான்
வீரனடையில் பாவமாய் இருப்பான்
அவன் கனவுகளை எட்டி பார்க்க கூட
எவருக்கும் தோன்றவில்லை
அவன் பேசியது எவருக்கும் கேட்காத
பொழுதுகள்
கவனம் அற்றவன் கள்ளம் அற்றவன்
மௌனமாய் அழுதிருக்கும்
நிம்மதி தந்த தூக்கு கயிறு
உருகாத காலைப் பனிக்குள்
ஒளிந்து கொண்ட அவன்
எல்லாருக்குமானவன்
இனி அவன் கடந்த
பாதைகளில் யாருமற்ற ஆடு ஒன்று
அனாதையாய் திரியும்…….!