அன்று எனது அன்னையை வரைந்திருந்தாய்
இன்று எனது யட்சியை
சுருள் முடிகள் அலையென பாவும்
நம் கொற்றவையின் கூந்தலில் சரிய நீ சூட்டியிருக்கும்
பிறை நிலவும் சன்ன மஞ்சள் பாரித்த அரளியும்
அவளின் கறுத்த மிளிரும் சருமத்திற்கு
அத்தனைப் பொருத்தமாக இருக்கிறது.
ஆங்காரத்தின் ஒளியென பிரவகிக்கும் அவள் செம்மையை
நீ அவள் கண்களுக்கு மையெனத் தீட்டி இருப்பதைக் கண்டு
எனக்குப் பொல்லாப்பே எஞ்சுகிறது;
நான் ஏன் அவளுக்கு முதலில் அதைத் தீட்டவில்லை
என் சொற்களைக் கொண்டு என்று…
காளி பிறப்பின் தீவிரம்
காளி அழிப்பின் ஆற்றல்
காளி பிறக்கச் செய்கிறாள்
அவளே அழிக்கவும் செய்கிறாள் என்கிறோம்
ஆனால், அவள் பிறக்கவும் செய்வதில்லை,
அழிக்கவும் செய்வதில்லை நிரந்தரமாய்.
அவள் மாற்றுகிறாள் ஒவ்வொன்றையும் வேறுவேறாய்
பிண்டத்தை ஓர் உயிராய்,
உயிருக்கு உபகாரமான பிண்டத்தை
மற்றுமொரு துகளாய்…
எந்தப் பிறப்பிப்பதிலும் ஆழ்ந்திருக்கிறது ஒரு அழிப்பு
எந்த அழிப்பிலும் துலங்குவதொரு ஜனனம்
எனவே, அவளுக்கு யாவும் ஒன்றே
அவளுக்கு யாவும் அவளே
அவளின் உக்கிர நீள் நாவையும்
ஒளிரும் மூன்றாவது கண்ணையும்
அவற்றிற்கு அணியாய்
அவள் முலைகள் மேல் சார்த்தி இருக்கும் செம்பருத்திகளின்
ரம்ய அச்சமும் எனக்குத் திவ்யமாய் இருக்கிறது சகி…
இதோ அவளைப் பார்த்த அதே கண்களின் நிறை மிரட்சியுடன்
நீ வரைந்த ஆண்டாளை மீண்டும் பார்க்கிறேன்
எனது மிரட்சி ஓய்ந்து கண்கள் கசிந்து பொழிகின்றன
சுட்டாலும் வெண்மை தரும் என
அவள் பாடியிருக்கும் சங்கினைப் போல
வெண்மை ஒளிரும் கண்களில் கண்ணனின் சாயல்
தெரிய வேண்டும்
சாய் கொண்டை தரித்து
அவள் மோவாய்க்கு அருகில் இருக்கும் மச்சத்தைக் கண்டு
தன்னினும் அழகிவள் என்றுதான்
அந்த அருகிருக்கும் பச்சைப் பசுங்கிளி
முகத்தைத் திருப்பி இருக்கிறதா தோழி…
பாவையின் காதற் தீவிரமும்
கோவியின் படைப்பழிப்பின் நடனமும்
இரண்டுமே வேறுவேறல்ல
அவை மூர்க்கம் என்ற நதியின் ஆழ்ந்த ஓட்டமே ஆகும்;
அதுவே நமது கலைக்குக் குளிர்ச்சியுமாம்!
(ஓவியர் அக்ஷ்யா செல்வராஜுக்கு….)
சிறப்பு தோழர்