கவிஞர் பிரான்சிஸ் கிருபா உடலளவில் மறைந்து ஒரு வருடம் ஆகி விட்டது. உதிர்ந்த பிறகும் கவிதை ஆக எல்லா பூக்களுக்கும் தெரிவதில்லை. கிருபா பூங்கொத்து. அது முப்போதும் கவிதை மட்டுமே பூக்கும்.
கிருபா கிட்டத்தட்டத் துறவு மனம் வாய்த்த கவிஞன். பகுதி நேரக் கவிஞனாக இல்லாத… முழு நேரமும் கவிதை தான் அவரை உயிர்ப்பித்துக் கொண்டே இருந்திருக்கிறது. பசியோடு இருக்கும் போதும் சட்டைப்பையில் இரண்டு கவிதையோடு இருப்பாராம். பொதுவாகவே பெரும்பாலும் கவிஞனை உலகம் எப்போதும் கை விட்டபடியே தான் இருக்கிறது. அதுவும் கிருபா மாதிரி எதிலும் ஒட்டுதல் இல்லாத மனிதனை உலகம் கை விடுதலுக்கும் அப்பாற்பட்ட பார்வையில் தான் வைத்திருக்கிறது. வைத்திருந்தது. ஆனாலும் நல்ல நண்பர்கள் அவருக்கு வாய்த்ததெல்லாம் அவரின் கவிதைகள் வழியே நிகழ்ந்த கொடுப்பினைகள்.
உலக வாழ்வுக்கும் உள்ளே வாழும் உண்மையான வாழ்வுக்குமான போராட்டம் காலத்துக்கும் கிருபாவுக்கு இருந்தது.
பவுர்ணமி அமாவாசை ஒட்டிய முன் பின் நாட்களில் கவிதை சூறாவளியாக அடிக்கும் என்றும், அப்போது எழுதிக் குவிப்பதில் பெரும்பாலானவை நல்ல கவிதைகளாகி விடும் என்றும் அவரே ஒரு நேர்காணலில் சொன்னதை நினைவு கூறுகிறேன். நினைவுகள் தப்பிக் கொண்டே இருக்கும் மறதிகளின் வழியே கிருபாவுக்குக் கிடைத்ததெல்லாம் கவிதை… கவிதை… கவிதை மட்டுமே.
பொதுவாகவே நாம் பார்க்கும் உலகுக்கும் கிருபா பார்க்கும் உலகுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. எதற்கும் சிரிக்கும் வரம் வாய்த்த வல்லமை கொண்ட மனிதன்… இயல்பில் இருக்கும் எதார்த்த வாழ்க்கையை ஒருபோதும் கவனத்தில் கொண்டதில்லை. கிருபா இலையைப் போன்ற மனிதன். இலையின் எல்லா பருவமும் கிருபாவுக்குப் பொருந்தும். இலையின் எல்லா சாத்தியங்களும் கிருபாவைப் பொருத்திக் கொள்ளும். பழுத்த பின் தான் இலை கிளையிலிருந்து விடுபட வேண்டும் என்று இல்லை. பச்சை இலை தன்னளவில் முதிர்ச்சியை உணர்ந்து விட்டாலே படபடத்து விடுவித்துக் கொண்டு பறக்க ஆரம்பித்து விடும். சருகாகி உடைவதைக் காட்டிலும் பச்சையத்தில் கொஞ்சுண்டு பழுப்பில் உதிர்கையில் காற்றிலும் கவிதை இருப்பதாக கிருபாவோடு சேர்ந்து நாமும் நம்புகிறோம்.
கிருபாவுக்கு எல்லாமே கவிதை தான். அதிலும் புதிய புதிய சித்தங்களை நிகழ்த்திப் பார்க்கும் வல்லமை அவருக்கு வாய்த்திருந்தது. அது புது மொழி. அதில் புதிய நடைஎன்று ஒன்றிலிருந்து இன்னொன்று என்று இல்லாமல்., அந்த ஒன்றே இன்னொன்றாக இருந்தது. ஒவ்வொரு கவிதையிலும் ஒரு வார்த்தையாவது உச்சத்தில் இருக்கும். அதுதான் அவரின் அடையாளம். தீவிர வாசிப்பாளர்கள் தாண்டியும் இயல்பான மனிதர்களிடமும் அவரைக் கொண்டு சேர்த்தது அந்த இன்னொன்று தான்.
கலாப்ரியாவின் கவிதைகளில் ஆதர்சம் கொண்ட கிருபா., விக்கிரமாதித்தன், கல்யாண்ஜி எல்லாருமே நெருக்கம் தான் என்கிறார். கலாப்ரியா ஒரு பெண்ணாக இருக்குமோ என்று தான் ஆரம்பத்தில் நினைத்தேன் என்று சொல்லிச் சிரிக்கும் கிருபாவின் முகத்தில் எழும் சிரிப்பெல்லாம் வெட்க கவிதை தான். ஓர் அரூபத்தின் குரலோடு தான் அவரின் கவிதைகள் எட்டிப் பார்க்கின்றன. பிறகு போகப் போக அவை கடவுள் தன்மைக்குத் தன்னை தகுதியாக்கிக் கொண்டே சென்று விடுகின்றன. பாதையெல்லாம் பூக்கள் விடுத்துப் போகும் அவைகள்., முட்களைக் கூட பூக்கள் என்றே சொல்லிப் புன்னகைப்பதுதான் ஞான முரண். ஞாபக வரம்.
‘அலைபேசியில் ஒரு கால் வரும் போதெல்லாம் ஒரு சிட்டுக்குருவி சாகுதுனு மைண்ட்ல ஏத்தி விட்டுட்டாங்க. அப்ப போன் எடுக்கும் போதெல்லாம் சிட்டுக்குருவி சாகுதான்னு போன் எடுக்கவே பயம்’ என்று சொல்லும் கிருபாவின் உயிர் நேயம் உலுக்கத்தான் செய்கிறது. ‘அதுக்காக வேணும்னே போனை தொலைச்சர்றேனோன்னு கூட தோணுது. கிட்டத்தட்ட 27 போனை தொலைச்சிருப்பேன்’னு சொல்லும் கிருபாவின் சிரிப்பில் காற்றலை தாண்டிய அதிர்வலைகள்.
சிட்டுக்குருவிக்கும் அலைபேசிக்குமான எதிரும் புதிரும் தொடர்பு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை என்றாலும்… அதன் மேலோட்டமான கருத்தே அந்த கவிஞனை கலங்க விட்டிருக்கிறது. அத்தனை மென்மை தான் கவிஞனின் கனம். கவிஞனின் கனம் எல்லாமே அவன் எழுதி இருக்கும்… எழுத இருக்கும் கவிதைகள் தான்.
அவரின் கவிதைகளைத் தொகுப்பாக்கிய தமிழினி பதிப்பகம் வசந்தகுமார் அவர்களுக்குக் காலத்துக்கும் கவிதைகள் நன்றி சொல்லும். இனம் கண்டு கிருபாவின் மொழி கண்டு இந்த இலையில் விடுபடுதல் மட்டுமல்ல… விடுபட்ட தத்துவமும் இருக்கிறது என்று புரிந்து அதை நூலாக்கிய அவருக்கு நாமும் நன்றி சொல்வோம்.
“இவுங்க மாதிரி ஆட்கள் எல்லாம் காத்தை போல, மழைய போல, வெயில போல வருவாங்க. இந்த உலகத்துக்கு கொடை அளிச்சிட்டு போய்டுவாங்க” என்று கிருபா குறித்து தமிழினி வசந்தகுமார் சொன்னது காலத்துக்குமான கால கவிஞர்களுக்கான சான்று.
அவருடைய முதல் தொகுப்பு “மெசியாவின் காயங்கள்”. கடைசியாக எழுதிக் கொண்டிருந்தது “ஏறக்குறைய இறைவன்”.
“மெசியாவின் காயங்கள்” தொகுப்பில் பல கவிதைகள் நம்மை அசைத்துப் புரட்டி இசைத்து லயித்து இல்லாமலே கூடச் செய்து விடும்.
“சிலிர்க்க சிலிர்க்க அலைகளை மறித்து
முத்தம் தரும் போதெல்லாம்
துடிக்க துடிக்க ஒரு மீனைப் பிடித்து
அப் பறவைக்குத் தருகிறது
இக்கடல்”
இந்தக் கவிதையையெல்லாம் படித்து விட்டு வெளியேற முடியாமல் கரைக்கும் கடலுக்கும் சுழன்று கொண்டிருந்த மனதில் கிருபா ஒரு கால மீனைப் போலத் துள்ளுவதைச் சொல்ல…. சொற்களுக்குத் தூண்டில் இட்டுக் கொண்டேதான் இருக்கிறேன். சிக்கவில்லை இதுகாறும் ஒரு சிலிர்க்கும் ஜீவன். அது பறந்து விட்டதென்று உணர்கையில்., தூரத்தில் துள்ளி அடங்குகிறது நமக்குத் தொடுவானம். கிருபாவுக்கு அது தொட்ட வானம்.
“நெளிந்த குவளையும்
சிதைந்த உடலுமாய்
நிழலில் அமர்ந்து
யாசிக்கும் கிழவனை
பணயம் வைத்து
கைச் சீட்டுகளாய்
பழுத்த இலைகளை இறக்கி
பகலைச் சூதாடிக் கழிக்கின்றன
பூவரச மரங்கள்”
கை தேர்ந்த சொல்லோன்… மனம் தேர்ந்த மாயோன்தான்…. இயல்பாய் நிகழும் இந்தக் காட்சியை இசையாக்க முடியும். அந்தக் கவிதைக்குள் இருக்கும் இசையின் நாதம் மிக மிக நுட்பமானவை. எந்தக் கணத்தில் கிருபாவின் கண்கள் இந்த வண்ணத்தைப் பார்த்திருக்கும் என்று யோசிக்கிறேன். எந்த நொடியில் இந்த காட்சியைப் பிடித்து கவிதைக்குள் அடைத்து மாயம் நிகழ்த்தி இருப்பார் என்று தீவிரமாக யோசிக்கிறேன். மீண்டும் மீண்டும் படிக்க படிக்க எதிர் சுவற்றில் பதிந்த படி நாமும் தான் அவரோடு சேர்ந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
“குமரிகள் குளித்துக் கரையேறிய
துவளத்து ஈரம் உலராத
கிணற்றுப் படித்துறையில்
எனக்காகக் காத்திருக்கும்
மறந்து வைத்த மஞ்சள் கிழங்கு”
“அவள்” என்ற தலைப்பிட்ட இந்தக் கவிதையில்… உயிர் நோகும் ஓர் இம்சை இருக்கிறது. உடல் தேடும் ஒரு இதம் இருக்கிறது. மெல்லிய கோட்டில் மகத்தான கோபுரங்களைக் கட்டி பார்க்க தெரிந்த சொற் கட்டடக் கலைஞனும் தான் கிருபா. காணும் வரியெல்லாம் காட்சி மொழி. கானல் வரியிலும்… முத்தெடுக்கும் கிருபாவின் கால நினைவுகள். *
ஒருமுறை அவரை நண்பர் ஒருவர் எடுத்த புகைப்படத்தைத் தன் தாயிடம் காட்டிய போது…. “ஒரு சாயலில் இயேசு கிறிஸ்து மாதிரியே இருக்கிறது” என்று சொல்லி இருக்கிறார். அதை நண்பர்களிடம் சொல்லிச் சிலாகித்து… கனிந்து ஆச்சரியப்பட்டு… அந்தச் சொல்லில் இருக்கும் அற்புதத்தைத் தன்னளவில் உணர்ந்தே இருந்திருக்கிறார். இப்போதும் கூட… நமக்கும் கூட அந்தச் சாயலில் தான் கிருபா இருக்கிறார்.
கிருபாவின் உலகில் முன்னும் பின்னும் அவரைத் தத்தெடுத்துக் கொண்ட நண்பர்கள் தான் அதிகம். யாராவது ஏதாவது அவருக்குச் செய்து கொண்டே தான் இருந்தார்கள். மொபைல் போன் கூட இல்லாத கவிஞன் தான். நண்பர்கள் வாங்கி தருகையிலும் அதை எங்காவது வைத்து விட்டு நகர்ந்து விடும் காற்றலை கிருபா. பெரும்பாலும் எழுத்தாளர்களுக்கு மரியாதை இல்லாத தேசம் நமது. அதுவும் கவிஞர்களுக்குச் சொல்லவே வேண்டாம். இங்கு வேறு வேலை செய்து கொண்டே தான் எழுதவும் வேண்டும். வெளிநாட்டில் எழுத்தாளன் என்றால் அவன் அது மட்டும்தான். இங்கே சாப்பாட்டுக்கு வேலை. மனப் போராட்டத்துக்கு எழுத்து…. என்று ரெட்டை வாழ்வு.
கிருபா போன்றோர் ரெட்டை வாழ்வுக்கு வாக்கப்பட விரும்புவதில்லை. பசியோ ருசியோ எழுத்தே வாழ்வு என்று தான் நகர்கிறார்கள். நகர்ந்து நகர்ந்து நட்சத்திரம் ஆகி விடுவது அவர்களின் இயல்பாக இருக்கிறது. அந்த இயல்பில் இருக்கும் இறுக்கத்தை ஒவ்வொரு முறையும் பிரியும் உயிர் உருவாக்கும் வெற்றிடம் தளர்த்திக் கொண்டே இருக்கிறது. ஒரு வருடத்துக்குப் பின் மட்டும் அல்ல. ஓராயிரம் வருடத்துக்குப் பின்னும் கிருபா எனும் இலை.. காற்றில் மிதந்து கொண்டே தான் இருக்கும். அத்தனை வலிமை அதன் ஒவ்வொரு ரேகையிலும்.
*
கடந்த வருடம் நமது “படைப்பு குழுமம்” அவரை தத்தெடுத்துக் கொண்டது நாம் அறிந்தது தான். அவர் மரணம் குறித்து தோழர் ஜின்னா ஓரிரவில் என்னோடு பகிர்ந்து கொண்டது சக கலைஞனின் துக்கத்தின் சொல்லொணா மொழி. பேசி பேசி ஆற்றிக் கொண்டோம். பேசாத தூரத்தில் கிருபாவின் இனம் புரியாத சோகம். சற்று யோசித்தால் புரியும். கிருபாவே இனம் புரியாத சோகம் தான்.
தனக்குள்ளே வெகு தூரம் சென்று தான் கவிதைகளை அள்ளி வருகிறார்கள் கவிஞர்கள். அதன் தூரத்துப் பக்கங்கள் பிசகு நிறைந்தவை. கவிஞர்கள் தங்கள் உடலையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது பொதுவான கருத்து. ஆனால் உடலை விட்டு அலைவது தானே கவிதைகளாகின்றன. இந்த இடத்தில்தான் அகம் புறமற்ற சுவரில் எழுதிப் போகும் கால விதி நிழலாடுகிறது.
பேரன்பு கொண்ட மனிதர். உண்மைக்குள் நின்று உலகை உருட்டிப் பார்த்த கவிஞன். கிருபாவின் கவிதை உலகம் முழுக்க முழுக்க நவீனம். முழுக்க முழுக்க வேறு ஒன்று. இதுவரை கண்டது அல்ல அவர் மொழி. அதில் நுட்பம் மேலோங்க வெப்பம் அடி ஆழம் வரை பரவி இருக்கும்.
எப்போதெல்லாம் எது கவிதை என்று எனக்குச் சந்தேகம் வருகிறதோ அப்போதெல்லாம் கிருபா தான் ஆசானாக இருக்கிறார்.
“வழியற்ற விழியில் தற்கொலையைத்
தனியாக செய்யப் பயமாக இருக்கிறது என்றான்
அலைபேசியில் அந்த நண்பன்
துணைக்குப் போகும் அளவுக்கு
துணிச்சல் மிக்கவனும் அல்ல நான்
இருந்து இருந்து என்னைத்தைக் கண்டோம்
செத்துத் தொலைக்கலாம்
செத்து தான் என்னைத்தை கண்டோம்
வாழ்ந்து தொலைக்கலாம்
என்ற கவிதை வரியினை நினைவூட்டினேன்
ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு ஆகாது
என்றபடி அழுதான்
தேற்றும் மட்டும் தேற்றிப் பார்த்துத்
தோற்றுப் போன பின்னே
இறுதியாக புதுசாக நீ ஒன்றும்
புடுங்கி விட போவதில்லை நண்பா
எல்லாருமே இங்கு தற்கொலைகளைத் தான்
செய்து கொண்டிருக்கிறார்கள்
என்ன
தவணை முறையில் செய்து
கொண்டிருக்கிறார்கள் என்றேன்”
இப்படி ஒரு கவிதை.
“பரிமாறப்படும் காப்பி கோப்பையிலிருந்து
எழுந்து நடனமிடும் ஆவி
விண்ணை நோக்கி நேராய்
ஒரு கோடு கிழிக்க படும் சிரமத்தை
ருசித்ததில்லை எந்த உதடுகளும்”
இப்படியும் ஒரு கவிதை. நிறைய முறை இந்தக் கவிதையில் சிக்குண்டு கிடந்திருக்கிறேன். இன்னும் சூடு ஆறாத அந்தக் கோப்பையைப் பத்திரப்படுத்தி இருக்கிறது என் கவிதை வெளி. உச்சத்தில் மிச்சம் வைக்க தெரிந்ததால் தான் மிச்சமில்லாத உச்சத்தைத் தொட முடிந்தது அவரால் எனப் புரிந்து கொள்கிறேன்.
“நான் கடலின் அலையில் குளித்தேன்
ஓர் அலை வந்தது
என் இரண்டு கால்களைக் கொண்டு சென்றது
பிறகும் நான் குளித்துக் கொண்டிருந்தேன்
இந்த முறை எனது வயிற்றைக் கொண்டு போனது
பிறகும் நான் குளித்துக் கொண்டிருந்த போது
எனது நெஞ்சுப் பகுதியைக் கொண்டு போனது
பிறகு கடைசி பேரலை
மீளவே முடியாத பேரலை
என் தலையைக் கொண்டு போனது”
இது, தன் வாழ்வின் கவிதையென முன்னமே கிருபா எழுதியது.
“வெளி நதியில்
சிறகின் துடுப்பிசைத்து
எதிர் வரும் வண்டை
நான்
கண்டு கொண்டிருப்பது
எந்தப் பூவின் கனவோ”
நிகழ்ந்து கொண்டிருப்பதை மாற்றி… நிகழ்த்தி விடத் தெரிந்த காலக் கணிதன் கவிஞன். கிருபா அதில் கில்லாடி.
இந்த வாழ்வின் சந்து பொந்துகளில் இருக்கும் இருள் மீது கிடைத்த நம்பிக்கை…. நகர வீதிகளில் உறவு வீடுகளில் சொந்த ஊரில் சென்ற ஊரில் கிடந்த வெளிச்சத்தில் கிடைக்கவில்லை. ஆத்மாநாமின் தீர்க்கத்தின் வழியே இருக்க பிடிக்காமல் சென்று விட்ட கிருபாவின் தோற்றம் ஒரு குறியீடு.
இப்படி நிறைய….. நிறைந்து வழியும் கவிதை கோப்பையில் கணக்கற்ற வாழ்வியல் போதாமை ஒரு போதும் குறைந்ததில்லை கிருபாவுக்கு..
இறுதியில் , ‘அப்பாவுக்கு வயதாகி விட்டது. என்ன ஒரே ஓர் ஆசை… அவருக்கு முன் சென்று விடக்கூடாது’ என்று சொல்லிச் சிரித்த கிருபாவை நினைக்கையில் உள்ளே உதிருவதெல்லாம் இலைகளாகவே இருக்கின்றன. இறுதியிலும் இறுதியாக நடந்தது வேறு. நடந்து கொண்டிருப்பதெல்லாம் வேறு தானோ.
கிருபாவின் மொழியில் மிக உன்னதமான படைப்பாக வெளி வந்தது அவரின் “கன்னி” நாவல். கன்னி நாவலை எழுதியதே சுவாரஷ்யம் என்று கூறுகிறார்.
தினமும் தமிழினி வசந்தகுமார் வீட்டுக்குச் சென்று காலையில் டிபன் சாப்பிட்டு மதியம் வரை எழுதி பிறகு மதியச் சாப்பாட்டையும் அங்கேயே சாப்பிட்டு விட்டுக் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து பிறகு மீண்டும் கொஞ்ச நேரம் எழுதி மாலையில் செலவுக்குக் காசு வாங்கிக் கொண்டு வந்து… அப்படியே ஆறு மாதங்களில் எழுதி முடித்தேன் என்கிறார். கட்டாயம் “கன்னி”யை படித்து விடுவது தான் அவருக்கான அஞ்சலி. கிருபாவின் மரணம் நிகழ்ந்து ஒரு வருடம் ஆகி விட்டது. ஆனாலும் நினைக்கையில் எல்லாம் அவரின் மரணம் சிறகிழந்த கவிதைகளை நம் மீது கொட்டிக்கொண்டே இருக்கிறது. எந்தச் சித்தாந்தத்துக்குள்ளும் அடைபடாத சித்திரம் தான் இம்மரணம் என்கிறேன். அவரின் ஏதாவதொரு கவிதை ஏதாவதொரு முறை ஆம் என்று சொல்லி விடுகிறது.
வந்தது போலவே போக தெரியாது கவிஞனுக்கு. போவது கூட வருவது தான் காலத்துக்கு. தன்னைத் தானே கை விடும் லாவகம் கவிஞனுக்கே வாய்க்கிறது.
இரங்கலுக்கும் வரங்களுக்கும் அப்பாற்பட்டவன் கவிஞன். வந்த வேலை முடிந்து விட்டது. வாடைக் காற்று வாங்கிக் கொண்டது.
சக கவிஞன்… சகலகலா கலைஞன். கவிதைகளை யாவரும் செய்கின்ற போது கவிதையாய் தன்னை செய்து கொண்டவன்.
இளைப்பாறலுக்குள் இசைந்திட்ட இருள் ததும்பனுக்கு இதய அஞ்சலிகள்.
நன்றி : பிரான்சிஸ் கிருபா