ஒரு நேரம் வரும்
அப்போது மகிழ்வெழுச்சியுடன்
உன் சொந்த வாசலில், உனக்குச் சொந்தமான கண்ணாடியில்
நீயே வருவதை, நீ வரவேற்பாய்,
ஒருவர் மற்றொருவரின் வரவேற்பைக் கண்டு புன்னகைத்தபடி
இங்கே உட்கார், உண் என்பீர்கள்.
உன் தன்னிலையாய் இருந்த அந்த அந்நியனை/ளை நீ மீண்டும் நேசிப்பாய்
ஒயினளி. ரொட்டியளி. உன் இதயத்தை அதனிடம் திரும்பக் கொடு,
உன்னை மனப்பாடமாக அறிந்த, இன்னொருவருக்காக நீ புறக்கணித்த,
உன் வாழ்வெல்லாம் உன்னை நேசித்திருந்த அந்த அந்நியமானவனி/ளிடம் திரும்பக் கொடு.
அலமாரியில் உள்ள காதல் கடிதங்களை,
புகைப்படங்களை, அந்த ஆற்றொணாக் குறிப்புகளை அகற்று,
கண்ணாடியிலிருந்து உன் சொந்த பிம்பத்தை உரித்து எடு.
- டெரக் வால்காட்.
- தமிழில்: மிருணா .
டெரெக் வால்காட் (Derek Walcott), (சனவரி 23, 1930, மார்ச் 17, 2017) செயின்ட் லூசியாவைச் சேர்ந்த கவிஞர், நாடகாசிரியர், எழுத்தாளர் ஆவார். இவர் 1992-ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார். மேலும் 2011-ஆம் ஆண்டு டி.எஸ்.எலியாட் பரிசை தனது “வெள்ளை நாரைகள்” நூலுக்காக வென்றார். இவரது “ஒமேரோஸ்” மிகவும் அறியப்பட்ட, புகழப்பட்ட படைப்பாகும்.