- காலத்தின் இதயம் யாசிக்கிறான்
பாதி வயலில் நிற்பவனுக்கு
ஆதி பச்சையை
யோசிக்க தெரிகிறது
ஆழமாய் சுவாசித்து விட்டு
காலத்தின் இதயம் யாசிக்கிறான்
கண்படும் தூதென மழைக்காலம்
மேய்ந்தவைக்கு எல்லாம் தெரியும்
புல் நுனி பனி துளி நெல்மணி என
நிலமுனி சித்திரத்தை
அசை போடுகிறது
இட்டேரி நுழைந்து
வானம் நிறைக்க பறந்து வரும்
பறவைக்கு
மனிதனுக்கும் சேர்த்து தான்
பசிக்கிறது
துளி தப்பினாலும் முளைத்து விடும்
விதையொன்றில் வளர்ந்தது தான்
பூமி என்கிறேன்
சந்தேகமெனில் நீரூற்றி பாருங்கள்
- வெண்ணிற இரவன்
உனக்கிருந்த நடுக்கம்
நானும் உணர்கிறேன்
உன் தலை கீழ் விகிதங்கள்
எனக்கும் ஒத்து போகிறது
காதலின் போத்தலின் வழியே
நீ சென்றடைந்த அதே
தூரங்கள் என் வசமாகின்றன
உன் தாடி உன் அன்னா என
எனக்கும் என் தாடி என் பெண்
நடந்தும் ஓடியும்
தவித்தும் கவிழ்ந்தும்
மீள முடியாத துயரத்தை
கைக்கொண்டலைவது
மிகு புனைவு தான்
உனக்கும் இப்போது எனக்கும்
செத்து போக பயந்ததில்லை
அதே நேரம் வாழ்ந்து விடவும்
பயந்ததில்லை
உனக்கு வோட்கா
எனக்கு பியர்
மலைகளின் வளைவுகளில்
பயணம் விடுத்து
மயங்கி கிடக்க ஆசீர்வதித்த
உன்னை வணங்குகிறேன்
நான் எழும் வரை
உன் வெண்ணிற இரவே துணை
- அது வேண்டட்டும்
வினைக்கு பின்னிருக்கும்
எதிர்
ஒரு திறவு
திறவில் இருக்கும் இருள்
மெல்ல சிலிர்க்கும்
ஒளி என கொள்க
உயரம் தாழ்வென
தாழ்வில் உயரமாக
சொல்லி கேட்டு
கேட்க சொல்வது அது
அரை வட்டத்திலிருந்து நகரும்
அரை வட்டம்
இன்னொரு வட்டம்
மீண்டு விட மீண்டும் விட
ஒன்றுக்கு இன்னொன்று
இன்னொன்றுக்கு ஒன்று
இது வேண்டும் எனில்
அது வேண்டட்டும்
அதுவும் வேண்டட்டும்
மறுமுறை
கண் சிமிட்டலுக்குள்
சிமிட்டா மனம் கொண்டு யோசி
நெருக்கமும் இல்லை
நெருங்காமலும் இல்லை
வினையும் எதிர்வினையும்