1. ஒரு மனிதன்
ஒரு மனிதனின் தாய் மிகவும் நோயுற்றிருந்தார்
அவன் மருத்துவரைத் தேடிச் செல்கிறான்
அவன் அழுகிறான்
அவனின் மனைவியை இன்னொருவனுடன் வீதியில் காண்கிறான்
அவர்கள் கைகோர்த்திருந்தனர்
மரம் விட்டு மரம் மறைந்தபடி
சில அடிகள் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று
அவன் அழுகிறான்
இப்போது அவனுடைய பால்ய நண்பனைச் சந்திக்கிறான்
பார்த்து பல வருடங்களாகியிருக்க
அவர்கள் ஒரு மது விடுதிக்குள் சென்று பேசிச் சிரிக்கின்றனர்
அந்த மனிதன் சிறுநீர் கழிக்க முற்றத்திற்குச் செல்கிறான்
ஒரு இளம் பெண்ணை பார்க்கிறான்,
அது ஒரு இரவு
அவள் பாத்திரங்களை துலக்குகிறாள்
அந்த மனிதன் அவளிடம் சென்று இடையோடு சேர்த்தணைக்கிறான்
அவர்கள் ஆடுகிறார்கள்
இணைந்தவாறே வீதியில் இறங்கிச் சிரிக்கிறார்கள்
அங்கு ஒரு விபத்து
அந்தப் பெண் சுயநினைவை இழக்கிறாள்
அந்த மனிதன் தொலைபேசி மையத்துக்குச் செல்கிறான்
அவன் அழுகிறான்
அவன் ஒரு விளக்கெரியும் வீட்டுக்குள் சென்று தொலைபேசியைக் கேட்கிறான்
யாரோ அவனை அறிந்திருக்கிறார்கள்
“ஏய் இங்கே இரு, ஏதாவது சாப்பிடு”
“வேண்டாம், தொலைபேசி எங்கே?”
“ஏதாவது சாப்பிடு, சாப்பிட்டுவிட்டு போ”
அவன் சாப்பிட அமர்கிறான்
பழிக்கப்பட்ட மனிதனைப் போலக் குடிக்கிறான்
அவன் சிரிக்கிறான்
அவர்கள் அவனை எதையோ ஒப்புவிக்கச் செய்கிறார்கள்
அவன் ஒப்புவிக்கிறான்
இறுதியாக அவன் ஒரு மேஜையின் கீழே உறங்கிப் போகிறான்.
2. நான் சொன்ன எல்லாவற்றையும் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.
நான் செல்வதற்கு முன்பு
எனது இறுதி இச்சையை அடைந்திட வேண்டும்
மேலான வாசகனே,
இந்தப் புத்தகத்தை எரித்து விடலாம்
இது அல்ல, நான் சொல்ல நினைத்தது
ரத்தத்தில் எழுதப்பட்டிருந்தாலும்
இது அல்ல, நான் சொல்ல நினைத்தது
என்னிலும் துக்கம் கொண்டவர் அநேகம் இருக்க முடியாது
நான் என் நிழலாலே தோற்கடிக்கப்பட்டேன்
என் சொற்கள் என்னை பழி தீர்த்துக் கொண்டன
வாசகனே, என்னை மன்னிப்பாயாக
நல்வாசகனே,
ஒருவேளை உன்னை இதமாக அணைத்து, விலக இயலாவிட்டாலும்
வரவழைத்துக் கொண்ட ஒரு
துயரப் புன்னகையுடன், விட்டு விலகுவேன்
ஒரு வேளை, அவ்வளவுதான் நான்!!
ஆனால் என் கடைசி வார்த்தைகளை கவனிப்பாயாக
நான் சொன்ன எல்லாவற்றையும் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்
இந்த உலகின் மிகுந்த கசப்புடன்
“நான் சொன்ன எல்லாவற்றையும் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்!”
3. கல்லறையில்.
நேர்த்தியான தாடியுடன்
ஒரு முதியவர்
கல்லறையின் முன் மயங்கி விழுந்தார்
அவரின் ஒரு புருவம் உடைய, சுற்றியுள்ளவர்கள் உதவ முயற்சிக்கிறார்கள்
ஒருவன் அவரின் நாடித்துடிப்பை சரிபார்க்க,
ஒருவன் காகிதத்தால் அவருக்கு விசிறுகின்றான்
இன்னுமொரு சுவாரசியமான விசயம்
ஒரு பெண் அவர் கன்னத்தில் முத்தமிடுகிறாள்.
4. அகாசியா மலர்கள்.
பல வருடங்களுக்கு முன்
பூத்துக் குலுங்கும் அகாசியாக்கள் நிறைந்த தெருவில்
உலா வந்த போது
எல்லாம் தெரிந்து வைத்திருக்கும் நண்பனிடமிருந்து அறிந்து கொண்டேன்
உனக்கு அப்போதுதான் திருமணமானதாக
உண்மையாய்
நான் அவரிடம் சொன்னேன்
அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நான் அவளை காதலிக்கவே இல்லை
– அது என்னை விட உனக்கு நன்றாகத் தெரியும் –
ஆனால்
ஒவ்வொரு முறையும் அகாசியாக்கள் பூக்கும் போது
– உன்னால் நம்ப முடிகிறதா? –
நீ வேறொருவரை திருமணம் செய்து கொண்டாய்!!
என நெஞ்சை உடைத்துப் போடும் செய்தியுடன்
அவர்கள் என்னை உருக்குலைய வைத்த
அன்றிருந்த
அதே உணர்வுதான் ஏற்படுகிறது!!
நிக்கானோர் செகுண்டோ பர்ரா சாண்டோவல் [ Nicanor Segundo Parra Sandoval] (5 செப்டம்பர் 1914 – 23 ஜனவரி 2018)
ஒரு சிலி கவிஞர் மற்றும் இயற்பியலாளர் ஆவார். 20 ஆம் நூற்றாண்டில் பெரும்பாலும் பாப்லோ நெருடாவுடன் ஒப்பிடும்போது ஸ்பானிஷ் மொழியின் மிகவும் செல்வாக்கு மிக்க சிலி கவிஞர்களில் ஒருவராக அவர் கருதப்பட்டார். பர்ரா, நிலையான கவிதை ஆடம்பரம் மற்றும் செயல்பாட்டின் மீதான வெறுப்பின் காரணமாக, தன்னை “எதிர்ப்புக் கவிஞர்” என்று விவரித்தார்.
சிலி எழுத்தாளர் நிக்கானோர் பர்ரா நகைச்சுவையான, நையாண்டி வசனங்களுக்கு பெயர் பெற்றவர், இது “எதிர்க்கவிதை” என்று பெயரிடப்பட்டது, இது நவீன சமுதாயத்தின் துண்டு துண்டான நிலையைப் பிரதிபலிப்பதில் மரியாதையற்றது மற்றும் அடையாளமற்றது. பர்ராவின் கருத்துப்படி, கவிதையின் பொருத்தமான பொருள் உண்மை மற்றும் அழகு அல்ல, ஆனால் வாழ்க்கையின் மோசமான ஆச்சரியங்கள், பெரும்பாலும் மோசமான நகைச்சுவையாக இருக்கும். எதிர்கவிதை மூலம், பர்ரா சாதாரண பேச்சில் வாழ்க்கையின் முரண்பாடுகளை விவரிக்கிறார், அவர் முன்வைக்கும் ஆடம்பரமற்ற கதாபாத்திரங்களில் வண்ணமயமான, நகைச்சுவையான நுண்ணறிவுகளை உருவாக்குகிறார். அவ்வாறு செய்வதன் மூலம், கவிதை அனைவருக்கும் சொந்தமானது, அறிவுஜீவிகளின் உயரடுக்கு குழுவிற்கு அல்ல என்பதைக் காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தக் கவிதைகளை வாசித்த குரல் : மலர்விழி
இந்தக் கவிதைகளை Spotify செயலி மூலமாகவும் கேட்கலாம்.