1.வாழ்ந்திடும் மக்கள்
கடலோரத்தில் வாழ்பவர்கள்
முடிவிலியைப் புரிந்து கொள்பவர்கள்.
அவர்கள் அலைகளின்
வளைவுகளை நகலெடுப்பவர்கள்,
அவர்களின் இதயங்கள்
அலைகளோடு துடிக்கின்றன
அவர்களின் இரத்தத்தின் உப்புத்தன்மையும்
கடலுடன் ஒத்துப்போகிறது.
சதையின் கூடு
கடற்கரையில் கட்டப்பட்ட
ஒரு மணல் கோட்டை என்பது
அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது
கடற்கரையில் முதலில் நடப்பவரின்
பாதத்தின் அடியில்
மணல் போல
அலைகள் குறைந்ததும்
அலைகளுக்கு அடியில்
தோல் உடைந்து விடுகிறது
நீர்ககுமிழிகளைப் பார்ததபடி
நாம் ஒவ்வொருவரும்
ஒரு முறை அங்கு நடக்கிறோம்,
மேல்நோக்கிச் செல்லும் ஆன்மாக்களைப் போல
மணல் வழியாக உயர்கிறோம்,
கடல்நுரைக் கோட்டின் தடமறிந்து,
நம் ஆள்காட்டி விரல்களை
அடிவானம் வரை உயர்த்தி
வீட்டைச் சுட்டிக்காட்டுகிறோம்
2. முன்னாள் காதலிக்கு (இடைக்கால முத்தங்களுடன்)
நீ என்னைக் காதலிக்க மாட்டாய்
என்று கேள்விப்படுகிறேன்
ஏனென்றால் நான் எந்த உத்தரவாதமும் இல்லாதவன்
ஏனென்றால் என்றாவது ஒரு நாள் நான் ஆசைப்பட்டு பிரியலாம்
மேலும் உன்னைக் கொடூரமாகப் பாழாக்கிக் கைவிடலாம்
அப்படியானால், உயிருடன் இருந்து என்ன பயன்?
அன்பான வாழ்க்கையில் நீ வாழ முடியாததை விரும்புகிறாய்:
மேலும் நீ மிகவும் நேசித்து
உன் தலையை இழந்தால்
அது அனைத்தும் வீண்
என்றாவது ஒருநாள்
நீ இறந்து விடுவாய்
ஆண்டுகள் முழுதும்
அமைதியாகப்
பற்றின்மையைப் பராமரித்துக் கொள்
அன்பே கண்களை மூடிக்கொள் காதுகளுக்குள் பஞ்சை வைத்துக் கொள்
திராட்சை ரசம் அருந்தும்
உன் நாவைப் புழுக்கள் சுவைக்கும்
எனவே திராட்சையை உன்
அண்ணத்தில் வெடிக்கச் செய்யாதே
கவனமாய் இருந்தால்,
உன் மீச்சிறு இதயம் இன்னும் முழுமையாக இருக்கும்
உன் கதகதப்பான ஆன்மாவை
அவர்கள் அழைத்துச் செல்ல
வரும் நாள்
அந்த விலைமகள் என்னும் வாழ்வு
தன் கடைசித் தாக்குதலை எதிர்கொள்ளும் போது
உன்னிடம் இந்த
இறுதி ஆறுதல் இருக்கும்
நீ கீழே விழும் போது
உன் நடுவிரலை உயர்த்திச் சொல்வாய்
‘நான் எப்போதும் அவளைப் பொருட்படுத்தவில்லை’
3. கடலின் அறுவை சிகிச்சை
கடலின் அதீத தொலைவில
எங்கு அட்லாண்டிஸ்
அலைகளின் விழிப்பில்
மூழ்கிப் போனதோ
அங்கு நான் என் வாழ்வை
சரி செய்ய வந்திருக்கிறேன்
உடைந்த கைகளைப் போல
நான் சேர்ந்து கொள்கிறேன்
எழும்பின் பிளவுகளில் உப்பு
நிரம்பிக் கொள்கிறது
கடல் என் வாழ்வின் துண்டுகளை அரைத்து வீடு சேர்க்கிறது
ஒரு நீர்நிலையில் நான் உன்னோடு விழிக்கிறேன்
கடல் பாடிக் கொண்டிருக்கிறது
என் தோல் உன் தோல் மீது பாடுகிறது
அலைகள் நம்மைச் சுற்றியும், நமக்குள்ளும் இருக்கின்றன
நாம் ஒருவர் மற்றொருவரின்
உப்பை ஒட்டித் தூங்குகிறோம்.
நான் உன் கைகளில் குணமடைகிறேன்.
காதல் குறையாமல் எழுதக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
இங்கே கடலின் அருகே
நான் ஆழமான நுரையீரல்களை வளர்க்கிறேன்.
அலைகள் தான் கத்திகள்;
அவை பளபளக்கும்,
துல்லியமாக வெட்டும்.
இது கடலின் அறுவை சிகிச்சை.
வெட்டுதல், குணப்படுத்துதல் இரண்டுமே இது தான்
இங்குதான் பிரகாசமான சூரிய ஒளி
எலும்பை வெப்பமாக்கியும்,
மூடுபனி நம்மை அழித்தும்,
அதன்பின் நம்மை முழுமையாக்கும்.
மொழிபெயர்ப்பும் கவிதைகளுக்கான குரலும் : மலர்விழி
Read more about Erica_Jong on Wikipedia.
Listen On Spotify :