-
ஒரு பறவை
உன் பெயரை என் நாவிற்கடியில் சுமந்து
சுற்றித் திரிகிறேன் நாள் முழுவதும்
சத்தமாகச் சொல்லப் பயந்ததால்
அது தப்பிப் பறந்தது
அந்த நகரத்தின் மீது
இருபது நாட்களாக
யாரும் விளக்குகளை ஏற்றாத இருண்ட இரவில்
நட்சத்திரங்கள், வால் நட்சத்திரங்கள்
மற்றும் பீரங்கிக் குண்டுகளுக்கு இடையில்
அதனுடைய பாதைகள்
உண்மையில், அறிய முடியாதவை
ஒரு சிறு பறவை
அற்புதமான சிவந்த குரலுடன்
ஒரு சிறு பறவை
அதன் அலகில்
துயரம் கனத்த கசந்த விதையுடன்
இருப்பினும் தற்செயலாக
அந்த விதை விழுந்தாலும்
அதிலிருந்து இந்த சிதைந்த நிலத்தில்
வளரும் ஒரு சிறந்த காதல் மரம்
-
ஒரு நகரும் தோப்பு
நீ தப்பிச் செல்ல முடியும் போது
தப்பிச் செல்
கடைசி நீர் ரயிலுக்கான பயணச்சீட்டுகளை வாங்கிக் கொள்
அது மறையும் வெளிப்படுத்தும்
ஆற்றங்கரை நடைபாதையையும்
அதன் தடைகளையும்
இந்தப் பொய் நகரின் உடல்அமைப்பு
ஒரு அறிமுகமில்லாத மனிதனைப் போல
உன் படுக்கையில் நிர்வாணமாகப் படுத்திருக்கிறது
செல் – உன்னால் முடியும் போது தப்பித்து விடு
உன் எல்லா பொருட்களையும் எடுத்துக் கொள்
உன்னுடையவை எல்லாம்
பிளவுற்ற உதடுகள்
வெட்டப்பட்ட முழங்கால்கள்
விரிசல் ஜாடியாகிப் போன தலை
அதிலிருந்து
மெல்லக் கசியும் நினைவு
மேலும் உன்னால்
எடுத்துக் கொள்ள முடியாதவற்றை
விட்டு விடு
ஜன்னல்களின் அந்திம வெளிச்சத்தை
வானத்தின் அன்பான கூக்குரல்களை
ஆற்றை நோக்கிச் செல்லும்
சுரங்கப்பாதையின் வாசனையை
செல் ஆனால் திரும்பாதே
அது அப்படித் தான்
சந்தேகமற்று
ஒரு உடலின் அடிப்பகுதியற்ற கிணற்றில் விழுவது போல
உன் தோளுக்குப் பின்னால்
ஒரு சீப்பு போல்
உன்னைத் தூக்கி எறிவது
ஒரு வயல் முழுவதும் உன்னை விதைத்தால்
போர்வீரர்கள் வளரக்கூடும்
ஊசி இவ்வாறு தான் கடந்து செல்கிறது
ஊசியின் கண் வழியே
இவ்வாறு தான் காடு
சுவர்கள் வரை நீண்டு
நடுங்கத் துவங்கலாம்…
-
ஒரு கவிஞரால் போரைப் பற்றி எழுத முடியாது
பாதிக்கப்படாமல்
பங்கேற்காமல்
தற்காத்துக் கொள்ளாமல்
பார்வையாளராக அல்லாமல்
அந்நியரும் இல்லாமல்
எனில் யார்?
போர் ஒவ்வொருவருக்கும் ஒரு வேடத்தைக் கொடுத்தது
உன்னுடையது என்ன
உள்ளங்கையால் வாயைப் பொத்திக் கொள்வதா?
எழுது எழுது
நாவைக் கட்டுப்படுத்த முடியாத பெண்ணே
சட்டென மௌனிக்கிறாள்
பேச வேண்டிய சரியான தருணம் வாய்த்தும் கூட
அவ்விடத்தில் நீ இருந்தால்
என்ன சொல்லி இருப்பாய்?
எங்கும்
எல்லோரும் கூச்சலிடுகிறார்கள்
சைரன்கள் ஓலமிடுகின்றன
புகை உயரப் பரவுகிறது
அகதிப் பொதியின் சக்கரங்கள் க்ரீச்சிடுகின்றன
சிதிலமடைந்த ஜன்னல்களின்
உருக்குலைந்த வாய்கள்
தாளாது ஊளையிடுகின்றன
உனக்கு அவள் குறுஞ்செய்தி அனுப்புகிறாள்
“எனக்கு அருகில் வெடிச்சத்தம் கேட்கிறது.
யுத்த விமானங்கள் பறக்கின்றன”
உனக்கு என்ன பதிலளிப்பது
என்று தெரியவில்லை
ஐரினா ஷுவலோவா, சீனாவின் நான்ஜிங்கை தளமாகக் கொண்ட உக்ரைனின் கிய்வ் நகரைச் சேர்ந்த ஒரு கவிஞர் மற்றும் அறிஞர். ஆங்கிலத்தில் கிடைக்கக்கூடிய ப்ரே டு தி எம்ப்டி வெல்ஸ் உட்பட ஐந்து விருது பெற்ற கவிதைப் புத்தகங்களின் ஆசிரியர் ஆவார் (லாஸ்ட் ஹார்ஸ் பிரஸ், 2019). கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஸ்லாவோனிக் ஆய்வுகளில் முனைவர் பட்டம் பெற்றவர்.அவரது மிகச் சமீபத்திய மற்றும் ஐந்தாவது கவிதைப் புத்தகம், ஸ்டோனார்ச்சார்ட்வுட்ஸ் (2020), இலக்கியத்திற்கான உக்ரைனின் LitAktsent பரிசால் ஆண்டின் சிறந்த புத்தகமாக பெயரிடப்பட்டது மற்றும் Lviv UNESCO சிட்டி ஆஃப் லிட்டரேச்சர் புத்தக விருதின் சிறப்புப் பரிசைப் பெற்றது. அவரது கவிதைகள் இருபத்தைந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு சர்வதேச அளவில் வெளியிடப்பட்டுள்ளன. அவரது வரவிருக்கும் கல்வி மோனோகிராஃப் “டான்பாஸ் இஸ் மை ஸ்பார்டா”: ருஸ்ஸோ-உக்ரேனியப் போரின் பாடல்களில் அடையாளமாக உக்ரேனிய சமுதாயத்தில் போரின் தாக்கத்தை ஆராய்கிறது.